Header Ads



சுத்துமாத்துக்களை நம்ப, மக்கள் தயாரிலை - அப்துர் ரஹ்மான்

'ஆட்சியாளர்களின் சுக போக வாழ்க்கைக்காக பொதுமக்களின் பணமும் உழைப்பும் சுரண்டப்படுவதை இனியும் அனுமதிக்க முடியாது. நல்லாட்சியை நோக்கிய ஆட்சி மாற்றத்திற்கான வேலைத்திட்டத்தில் நாம் இணைந்து செயற்படுவதற்கு இதுவும் ஒர் முக்கிய காரணமாகும்'.. என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர்ரஹ்மான் நேற்றைய தினம் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த காத்தான்குடிப் பிரதேச பாலர்பாடசாலைகளின் ஆசிரியைகளுடனான சந்திப்பொன்று  நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச முன்பள்ளி அசிரியைகள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிர்தௌஸ் நளீமி உட்பட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர்கள் பலரும்கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் அப்துர்ரஹ்மான்அவர்கள் மேலும் தெரிவித்ததாவது..

“இன்று நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஒருவர் நாட்டு மக்களை சந்திப்பதற்காக அவர்களின் காலடிக்கு வருகை தரும்பொழுது, அவரை வரவேற்பதற்கு மக்கள் சாரி சாரியாக திரண்டு வந்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக பிரதேச அரசியல் வாதிகள் மக்களுக்கு பணமும் பொருட்களும் இலஞ்சமாக கொடுத்தும் அவர்களை பலவந்தமாக அழைத்து வர வேண்டிய நிலையம் ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு மக்கள் இன்று இந்த ஆட்சியாளர்களின் மீது அதிருப்தியடைந்துள்ளனர். ஆனால் இன்று அவ்வாறான எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி எமது அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்திருக்கும் உங்களை உண்மையில் பாராட்டியாக வேண்டும். உங்களைப் போன்றுதான் இன்று இந்த நாட்டின் அனைத்து மக்களும் உண்மையான நல்லாட்சியை நோக்கிய ஆட்சி மாற்றம் ஒன்றினை வேண்டி ஏங்கத் தொடங்கியிருக்கின்றனர்.

இன்று ஆழுந்தரப்பு அமைச்சர்களும், பிரதேச மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் கூட நாளாந்தம் இந்த ஆட்சி மாற்றத்தை நோக்கி பெருமளவில் வந்து சேர்ந்த வண்ணம் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இன்று மக்களின் விழிப்புணர்வு காரணமாக வேறு வழியின்றி இந்த முடிவிற்கு தள்ளப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் தாங்கள் இந்த அநீதியான ஆட்சியாளர்களுக்கு ஆதரவளித்தால் தனக்கு வாக்களித்த மக்கள் மத்தியில் தாங்கள் நிரந்தரமாக காணாமல் போய்விடக்கூடும் எனும் அச்சம் அவர்களுக்குள் ஏற்பட்டுள்ளது. இவர்களின் கட்சித்தாவலை தடுப்பதற்காக தற்போதைய ஆட்சியாளர்கள் மக்களின் நீண்டகாலத் தேவைகளை நிறைவேற்றித்தருவதாக பேரங்களைப்பேசியும் கூட மக்கள் இந்த ஆட்சியாளர்களின் சுத்துமாத்துக்களை நம்பத்தயாராக இல்லை. இவ்வாறு மக்கள் வழங்கிய அழுத்தங்களின் காரணமாகவே இன்று பலரும் எதிரணியில் வந்து இணைந்துள்ளனர்.

ஆனால் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது, இவ்வாறான ஒரு சாதகமான நிலை தோன்றுவதற்கு முன்னரேயே இந்நாட்டு மக்களின் நலன்கருதி பல சவால்களுக்கு மத்தியில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியுடன் கை கோர்த்து தூரநோக்குடன் செயற்பட்டு வருகின்றது.

இன்றைய ஆட்சியாளர்களின் எல்லையற்ற ஆடம்பரமான சுகபோக வாழ்க்கைக்காக இந்நாட்டு மக்களின் உழைப்பு மிகக் கபடத்தனமாக சுரண்டப்பட்டு வருகின்றது இதனை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. இன்று அத்தியாவசியப் பொருட்களின் அநியாயமான விலையேற்றங்களின் காரணமாக அரசு ஊழியர்களின் சம்பளத்தினை அதிகரிக்குமாறு நீண்ட நாட்களாக கோரியும், போராடியும் வருகிறார்கள். ஆனால் அதைச் செய்யமுடியாத இந்த அரசாங்கம், தனது குடும்ப உறுப்பினர்களின் கண்மூடித்தனமான ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள பல கோடி ரூபாய்களை மாதாந்தம் செலவு செய்கின்றது. வருடந்தோறும் சுமார் 4000 உயிர்களைப் பாதுகாக்கத் தக்கதாக இருதய நோய் சத்திர சிகிச்சைப் பிரிவினை மேம்படுத்தவதற்கென சுகாதார அமைச்சினால் வேண்டப்பட்ட வெறும் 400 கோடி ரூபாய்களை ஒதுக்க முடியாத இந்த அரசாங்கம் இந்நாட்டு ஜனாதிபதி ஒருவரின் வருடாந்த செலவுகளுக்காக மட்டும் 1000 கோடி ரூபாய்களை ஒதுக்கி வருகின்றது. இது எதனையும் அறியாத பல வறிய மக்கள் வருடாந்தம் போதிய வைத்திய சேவைகள் இன்றி இருதய நோய்களினால் பரிதாபகரமாக உயிரிழந்து போகின்றனர். இது இந்த ஆட்சியாளர்களின் அநீதியான ஆட்சிக்கு ஒரு சிறு உதாரணம் மட்டுமேயாகும்.

அது மட்டுமல்லாது இவர்களின் ஆட்சியில் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு இந்த நாட்டின் சட்டமும் ஒழுங்கும் சீர் குலைந்து போயுள்ளது. வெளிநாடுகளில் நம் நாட்டு தூதுவர்களை நமது அரசியல்வாதிகள் பகிரங்கமாக கைநீட்டி அறைகின்ற மோசமான அரசியல் கலாச்சாரமும், இவ்வாறு குற்றமிழைக்கும் அரசியல் தலைமைகள் நீதியின் முன் நிறுத்தப்படுவதற்குப் பதிலாக பாதிக்கப்பட்ட வெளிநாட்டு தூதுவர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்து விட்டுச்செல்கின்ற துரதிஷ்டமான நிலைமைகளும் இந்த ஆட்சியாளர்களின் ஆட்சியிலேயே இடம்பெற்றுள்ளன. ஆனால் இவை அனைத்தையும் அங்கீகரித்துக் கொண்டே எமது பிரதேச அரசியல் தலைமைகள் இன்று ஜனாதிபதியின் பௌதீக அபிவிருத்திகள் பற்றியும் அவரே யுத்தத்தினை முடிவிற்குகொண்டு வந்தவர் எனவும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். உண்மையில் அபிவிருத்தி என்பது நாட்டு மக்கள் சுதந்திரமாகவும், மரியாதையுடனும், கௌரவமாகவும், சக வாழ்வுடனும் வாழ்வதை உறுதி செய்வதற்கு சமாந்திரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால் அவற்றை உறுதிப்படுத்த தவறியுள்ள இந்த அரசாங்கத்தினை இன்று மக்கள் கையும் களவுமாக பிடித்திருக்கின்றனர். இந்த நிலையில் இவர்களின் போலியான பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் எடுபடாது என்பதுவேஉண்மையாகும்.

எனவே உங்களைப் போன்ற சிந்திக்கக்கூடிய பெண்கள் சமூகம் இம்முறை மிகத் தெளிவாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நாம் இடப்போகின்ற ஒரு வாக்கானதுதான் நமது சமயலறைவரை சகல விடயங்களையும் தீர்மானிக்கப் போகின்றது என்பதை மிகத் தெளிவாக புரிந்து செயற்படவேண்டும். ஐந்து நிமிடங்கள் நாம் சிந்தித்து அளிக்கின்ற வாக்கானது, ஐந்து வருடங்களுக்கு நமது வாழ்கையை நிம்மதியாக மாற்றும் என்பதினை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். அத்துடன் ஒரு சமூகம் தானாக மாறாத வரை அள்ளாஹ்வும் அதனை மாற்றமாட்டான் எனும் இறை வாக்கிற்கு அமைய, நாம் வெறுமனே நல்லாட்சியை வேண்டியவர்களாக மாத்திரம் நின்று கொள்ளாது அதற்காக உழைப்பவர்களாகவும் மாற வேண்டும். அந்த வகையில் இந்த செய்தியினை நீங்கள் இன்னும் பல சகோதரிகளுக்கும் எடுத்துச்செல்ல வேண்டும் எனவும் அவர் வேண்டிக்கொண்டார்.”

No comments

Powered by Blogger.