Header Ads



தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.களுக்கு பண மழை..!


2014 வரவு  செலவுத் திட்ட ஒதுக்கீடுகளைப் பயன்படுத்தி 150 விசேட அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியொதுக்கீட்டை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கையெடுத்திருப்பதாக அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கு தலா 450 மில்லியன் ரூபாவை (45 கோடி) உடனடியாக ஒதுக்கீடு செய்யுமாறு அரச உயர்மட்ட அதிகாரிகள் பணிப்புரை வழங்கியுள்ளதாக "த சண்டே ரைம்ஸ்' பத்திரிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறது. அரசாங்கத்திலிருந்து எதிரணிக்கு செல்லும் எம்.பி.க்களுக்கும் இந்த ஒதுக்கீடு பொருந்துமென தமது பெயர்குறிப்பிட மறுத்துள்ள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  

இந்த அவசர ஒதுக்கீடானது 2014 வரவு  செலவுத் திட்டத்தில் பயன்படுத்தப்பட்டிராத பணத்தின் ஒரு பகுதியாகும்.  சுமார் 80 செலவின யோசனைகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.  இவற்றுக்காக பயன்படுத்தப்பட்ட நிதியானது ஏனைய அவசர வேலைகளுக்காக ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளது.  அடுத்தாண்டு பாராளுமன்றத்தில் கணக்கு வாக்கெடுப்பின் மூலம் இதற்கான தொகை ஒடுக்கீடு செய்யப்படவுள்ளது. வரி வருமானம் எதிர்பார்த்த இலக்கை விட குறைவடைந்தமையும் 2014 வரவு  செலவுத் திட்ட ஒதுக்கீட்டில் பிரச்சினைகளை ஏற்படுத்தியிருந்தது. எம்.பி.க்கள் இந்த நிதியை விசேட திட்டங்களுக்கு பயன்படுத்துவது தொடர்பாக தீர்மானிக்கும் போது நெகிழ்வுத் தன்மையை கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் அறிவித்திருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

நிதியமைச்சின் வரவு  செலவுத் திட்ட முன்னேற்ற அறிக்கையின் பிரகாரம் 112 திட்டங்களில் 32 யோசனைகள் மட்டுமே முழுமையாக இதுவரை அமுல்படுத்தப்பட்டுள்ளன. 80 யோசனைகள் இன்னமும் அமுல்படுத்தப்படவேண்டியிருக்கின்றன. 2015 ஆம் ஆண்டு  வரவு  செலவுத் திட்டத்தின் 77 புதிய யோசனைகளுடன்  இந்த 80 யோசனைகளும்  அடுத்தாண்டு நடைமுறைப்படுத்தப்படுமென அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்தச் சூழ்நிலையின் பிரகாரம் 150க்கும் மேற்பட்ட விசேட அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது சுலபமான இலக்காக அமையாது என்று அவர் தெரிவித்திருக்கிறார். 2014 வரவு  செலவுத் திட்டத்தில் 96,950 மில்லியன் ரூபா 59 புதிய திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 

இப்போது இந்தப் பணத்தின் ஒரு பகுதியை உத்தேச அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த திசைதிருப்ப முடியும். இதேவேளை 2015 ஆம் வரவு  செலவுத் திட்ட சுற்றறிக்கைகள், வர்த்தமானி அறிவித்தல்கள், 2014 ஆம் ஆண்டுக்கான காசேடுகளை மூடுதல் போன்ற பணிகளில் திறைசேரி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  செயற்பாட்டு சுற்றறிக்கையின் பிரகாரம் கணக்குகளை முடித்து வைப்பதற்கான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு  செலவுத் திட்ட விவாதத்தின் போது 27 யோசனைகளுக்காக நிதி ஒதுக்கீடுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.