Header Ads



ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

-அனா-

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் பதுரியா நகர் மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்ட வெள்ள நிவாரணம் உரிய முறையில் வழங்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் இன்று (31.12.2014) காலை 09.00 மணியளவில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பதுரியா நகர் மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவில் 950 குடும்பங்கள் வசித்து வந்த போதிலும் அக்கிராமத்தில் ஐயாயிரம் ரூபாவிற்கு குறைவான வருமாணம் பெரும் 900 குடும்பங்கள் உள்ளன.

இக்கிராமம் வெள்ளத்தினால்  முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  இக்கிராம்தில் உள்ள கிராம சேவகர் தனக்கு விசுவாசமானவர்களுக்கு மாத்திரம் அடையாளம் கண்டு நிவாரணத்திற்கான சிட்டைகளை வழங்கியதாகவும் கிராம சேவகர் அக் கிராமத்தில் அவரின் வேலைகளை செய்வதற்கு வேறு ஒருவரை நியமித்துள்ளதாகவும் அதனால் எங்களுக்கு கிராம சேவகரை இடமாற்றித் தருவதோடு வழங்கப்படவுள்ள வெள்ள நிவாரணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தருமாறும் பிரதேச செயலாளரிடம் ஒன்று கூடிய மக்கள் கோரிக்கையாக முன் வைத்தனர்.

இவர்களின் கோறிக்கை அடங்கிய மகஜரினைப் பெற்றுக் கொண்ட பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபர் இன்று பொருட்கள் வழங்குவதற்கு சிட்டைகள் வழங்கப்பட்ட சிட்டைகளை இடை நிறுத்துமாறும் ஐயாயிரம் ரூபாவிற்கு குறைவாக வருமாணம் பெற்று மேற்படி பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரணம் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் பொது மக்களிடம் உறுதியளித்ததையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.



No comments

Powered by Blogger.