ஏர் ஏசியா விமானம் கடலுக்கடியில், தலைகீழாக கவிழ்ந்து கிடப்பதை சோனார் ரேடார் பிடிகண்டுபிடிப்பு..?
ஜாவா கடற்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தின் மிகப்பெரிய பாகம் ஒன்று கடலுக்கடியில் தலைகீழாக கவிழ்ந்து கிடப்பதை சோனார் ரேடார் கண்டுபிடித்துள்ளது. எனவே, கடலுக்கடியில் மூழ்கிக் கிடக்கும் விமானத்திற்குள் பயணிகளின் உடல்கள் கிடக்கலாம் என கருதப்படுகிறது.
இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து 155 பணிகள் மற்றும் 7 விமான பணியாளர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் (க்யூ.இசட்.8501) காணாமல் போனது. 2 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவின் ஓரியன் விமானம் கடலில் மிதக்கும் சில பாகங்களை கண்டுபிடித்து படம் பிடித்து அனுப்பியது.
இந்தோனேசியாவின் மத்திய கலிமந்தன் மாகாணம், பங்காலன் பன்னிலிருந்து 160 கி.மீ தூரத்தில் உள்ள நங்கா தீவு அருகில் இந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை காணாமல் போன ஏர் ஏசியா விமானத்தின் பாகங்கள்தான் என்று இந்தோனேசிய அரசு உறுதி செய்ததையடுத்து நேற்று உடனடியாக அங்கு மீட்புக்குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹெலிகாப்டரில் தாழ்வாகப் பறந்து சென்று, அங்கிருந்து கயிறு மூலம் மீட்புக்குழுவினர் உடல்களை மீட்டு கப்பலுக்கு கொண்டு வருகின்றனர். கடற்பரப்பில் சிதறிக் கிடந்த விமான பாகங்களும் கைப்பற்றப்பட்டு வருகின்றன. நேற்று மாலை வரை 40-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக இந்தோனேசிய கடற்படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
ஆனால், 6 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டிருப்பதாக அரசின் தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பு உறுதி செய்துள்ளது. இந்த 6 பேரில் 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் விமான ஊழியர்களுக்கான சீருடை அணிந்திருந்தனர். 3 பேர் ஒருவருக்கொருவர் கைகோர்த்தபடி மிதந்ததை பார்த்ததாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ள பைலட் ஒருவர் தெரிவித்தார்.
சோனார் ரேடாரில் பதிவாகியுள்ள படத்தில் ஒரு இடம் கருப்பாக உள்ளது. எனவே, அது விமானத்தின் உடற்பகுதிதான் என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். கடலுக்குள் ஒரு இடத்தில் நிழல்போன்று தெரிவதாகவும், அது விமானத்தின் உடற்பகுதியாக இருக்கலாம் என்று தேடும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, நீர்மூழ்கி வீரர்கள் கடலுக்குள் மூழ்கி உடல்களை மீட்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். விமான பாகங்கள் மற்றும் முக்கியமான கருப்பு பெட்டிகளையும் தேடி வருகின்றனர். அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இன்று மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்த விமானம் அதிவேகத்துடன் கடலில் விழுந்தபோது உடைந்திருக்கவே அதிக வாய்ப்பு உள்ளதால், மூழ்கி கிடக்கும் விமானத்தின் உடற்பகுதியை எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

Post a Comment