'கைதிகளை கூட்டம் கூட்டமாகத் தூக்கிலிடுவதால், பயங்கரவாதப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படாது'
பெஷாவர் பள்ளித் தாக்குதலின் எதிரொலியாக, 500 பேரை தூக்கிலிட பாகிஸ்தான் அரசு முடிவு செய்திருப்பது குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஆசிய பசிபிக் பகுதிகளுக்கான அந்த அமைப்பின் துணைத் தலைவர் டேவிட் கிரிஃபித்ஸ் கூறியதாவது:
பாகிஸ்தான் அரசு தூக்கிலிடுவதற்காகத் திட்டமிட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த வாரம் பெஷாவரில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குல் ஆழ்ந்த துயரத்துக்குரியது.
எனினும், அந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக கைதிகளை கூட்டம் கூட்டமாகத் தூக்கிலிடுவதால் பயங்கரவாதப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படாது. உண்மையில், இந்த முடிவு பயங்கரவாதத்தை மேலும் தீவிரப்படுத்தவே செய்யும்.
வடமேற்குப் பகுதியிலுள்ள பாகிஸ்தானியர்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்து வருகிறது. அதற்குத் தீர்வு காணாமல், அவசரகதியில் பயங்கரவாதிகளைத் தூக்கிலிடுவது உண்மைப் பிரச்னையை மூடி மறைக்கும் செயலாகும்.
பெஷாவர் தாக்குதலுக்குப் பழி வாங்க, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்கள் அவசர அவசரமாக நிராகரிக்கப்படுவது, அந்த மனுக்கள் சரியாக ஆய்வு செய்யப்பட்டனவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது என்றார் அவர்.
மரண தண்டனை நிறைவேற்றங்களுக்கு பாகிஸ்தான் சுயமாக விதித்திருந்த தடை, பெஷாவர் பள்ளித் தாக்குதலின் எதிரொலியாக விலக்கிக் கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக கடந்த வெள்ளிக்கிழமை இரு கைதிகளும், ஞாயிற்றுக்கிழமை நான்கு கைதிகளும் தூக்கிலிடப்பட்டனர்.
இதுதவிர, மரண தண்டனை பெற்ற 500-க்கும் மேற்பட்டோரைத் தூக்கிலிடவிருப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்தது.
இந்நிலையில், 55 பேரகளின் கருணை மனுவை அந்நாட்டு அதிபர் திங்கள்கிழமை நிராகரித்ததையடுத்து, அவர்களே எந்நேரமும் தூக்கிலிடப்பட வாய்ப்புள்ளது.
.jpg)
Post a Comment