Header Ads



உணர்ச்சிவசப்பட்ட பழிவாங்கல் முடிவுகள், மாற்றம் தரப்போவதில்லை

இலங்கையில் முஸ்லிம்கள் எடுத்திருக்கும் அரசியல் மாற்றத்துக்கான முடிவு இன முறுகலுக்கான தீர்வாக அமையப்போவதில்லை.இது வெறும் பழிவாங்கல் மற்றும் உணர்ச்சிவசப்பட்ட சிந்தனையில் எழுந்த எழுந்தமான முடிவாகவே தோன்றுகிறது.எனவேதான் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் முடிவும் ஒரே விதமாக காணப்படுகிறது. இது முஸ்லிம்களின் உணர்ச்சிக் காயங்களுக்கு ஒத்தனம் தரும் ஆர்தல் மாற்றமாக இருக்குமே தவிர முழு சமூகத்தின் பௌதீகம் சார்ந்த அரசியல் மாற்றத்தை தரப்போவதில்லை. பௌதீகம் சார்ந்த அரசியலுக்கும் உணர்ச்சிவசப்பட்ட அரசியலுக்கும் பாரிய வித்தியாசம் உண்டு..

இலங்கையில் காணப்படும் இனமுருகல் நிலையை இன மோதல் போக்கை பெரும்பான்மையின் பக்கபலத்தால் பதவிக்கு வரும் சிங்கள ஜனாதிபதியால் தடுத்து நிறுத்திவிட முடியாது. இலங்கை முஸ்லிம்களின் பொருளாதாரம் வளர்ச்சி என்பன ஒரு திட்டமிடப்பட்ட இலக்கு.இதை தவிர்க்க நமது சமூகம் பெரும்பான்மை சமூகத்துடன் மோதல் போக்கை தவிர்த்து அழகிய உரையாடல் போக்கை ஊடகப்படுத்த வேண்டும்.சமூகத்தின் எல்லா தளங்களிலும் ஊக்கப்படுத்த வேண்டும்..

இலங்கையில் இதுவரை நடந்த இனச்சுத்திகரிப்பு நிகழ்வுகளுக்கு பின்னால் திட்டமிடல் சிந்தனை ஒன்று உள்ளது.இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது எந்த அரசும் பெரும்பான்மை பக்கமே சாயும்  என்பதை கண்டே வந்துள்ளோம்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் அரசு  மைனரட்டியாக இருந்து மு.கா தலைவர் ரவூப் ஹகீம் மாவனல்லை சம்பவத்துக்காக அரசைவிட்டு விலகி ஆட்சி மாறும் நிலை ஏற்பட்டும்கூட  ஜனாதிபதி சந்திரிக்காவால்  முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத நிலையே ஏற்பட்டது. இது ஜனாதிபதியின் நேரடி குறையன்று மாறாக இது சிங்கள பேரினவாத சக்திகளை பகைத்து முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நிலையில் எந்த ஜனாதிபதியும் இல்லை என்பதையே எடுத்துகாட்டுகிறது. இது பெரும்பான்மை சமூகத்தில் எல்லா ஸ்தாபனங்களிலும் இருக்கும் எழுதப்படாத விதியே..

ஒரு இனவாத தாக்குதல் நடக்கும் நேரம் பாதுகாப்பு துறை,விசேட கலவர தடுப்பு துறை என்பன சம்பவ நேரத்தில் தன் இனத்தை விட்டுக்கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறது.இதை ஒரு ஜனாதிபதியால் கூட தடுத்தி நிறுத்த முடியாத நிலை ஏற்படுகிறது..

இவற்றுக்கான தீர்வு பெரும்பான்மை சமூகத்துக்குள் வாழும் முஸ்லிம்கள் தமது மார்க்க  எல்லைகளை தாண்டாத வகையில் சிங்கள பெருன்ம்பான்மை இனத்துடன் அழகிய உரையாடல் போக்கை கையால்வது உதவிக்கரம் நீட்டுவது தாமும் இலங்கை பிரஜை என்ற தார்மீக பொறுப்புடன் நடப்பது என்பன இனங்களுக்குள் சகவாழ்வை ஏற்படுத்தும் காரணிகளாக உள்ளன.மார்க்க எல்லை தாண்டாதவரை அவர்களின் சகல நடவடிக்கையிலும் பங்காளர்களாக நாம் மாறவேண்டும்..

 முஸ்லிம்கள் தமது சமூக வாழ்கையில் மாற்றம் கொண்டுவராதவரை அரசியல் தீர்வுகள் என்பன மாற்றத்தை தரப்போவதில்லை.ஆட்சியாளர்கள் மாறுவதால் பெரும்பான்மை சமூகத்தில் ஏற்பட்ட கசப்பான எண்ணங்கள் மாறும் என்றில்லை.அதை மாற்றும் சக்திவாய்ந்த முறை பிறசமூகங்களுடன் சகவாழ்வு வாழ்க்கைக்கான திட்டங்களை வகுத்து சமூக எழுச்சியுடனான மாற்றத்தை கொண்டுவருவதே.பிரச்சாரத்தால் ஏற்படுத்தப்பட்ட நம்மைப்பற்றிய பிழையான எண்ணங்கள் நமது செயல்பாட்டால் மாற்றப்பட வேண்டும். 

அரசியல்வாதிகள் தரும்  பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாதது.முஸ்லிம்களின் முதல் பாதுகாவலன் அல்லாஹ். அதற்கடுத்த பாதகாப்பை நாமே நமக்குள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.அதற்கான திட்டங்களை சூழல்களை ஏற்படுத்த வேண்டும்.பின்னிப்பிணைந்த சகவாழ்வு சூழல்வயப்பட்ட சமூகமாக வாழ வழிகோர வேண்டும்.நாளைய தலைமுறையாவது மாற்றம் கண்ட சமூகமாக இருக்க நாம் பலமான அத்திவாரம் எழுப்ப வேண்டும்.நாம் இந்த நாட்டின் பூர்வீக பிரஜைகள் என்பதை அடுத்த சமூகம் பெருமையுடன் சொல்லும் வரலாற்றை தருணத்தை நிகழ்த்த வேண்டும்.

ஆட்சி மாற்றங்கள் இலங்கை அரசியல் வரலாற்றில் புதிதல்ல.அதை மட்டும் நிகழ்த்திக்காட்டி பெருமைப்பட்டு அகமகிழ்ந்து கொள்வதில் மாற்றம் காண முடியாது. வெறும் உணர்ச்சிகளால் பின்னப்பட்ட தீர்வுகள் மாற்றத்தை தரப்போவதில்லை.

ஆழ்ந்த சிந்தனைவயப்பட்ட தீர்வு யோசனைகள்,சமூக உத்தரவாதம், சகவாழ்வுநெறி,தார்மீக உரிமைச் சுதந்திரம் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய தீர்வுகளே நமது சமூகத்துக்கு தேவை. இத்தேவைகளை கருத்தில்கொண்டு நல்லாட்சியை எதிர்பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

"எந்த ஒரு சமூகமும் தாமாக மாறாதவரை அல்லாஹ் அவர்களை மாற்றப்போவதில்லை" (அல் குர்ஆன்)

அஹ்மத் ஜம்ஷாத் 
Cairo-Egypt

No comments

Powered by Blogger.