Header Ads



'இடி மழையின் தொழிற்சாலை' என்ற ஆபத்தான பகுதிக்கு மேலே பறந்த ஏர்ஏசியா விமானம்


ஏர் ஏசியா நிறுவனத்தின் பயணிகள் விமானம் காணாமல் போனதற்கு மனிதர்களின் தவறான திட்டமிடலே காரணம் என்று ஆஸ்திரேலிய விமானப் போக்குவரத்து வல்லுனர் ஒருவர் இன்று தெரிவித்தார். எல்லோராலும் ஆபத்தானது என்று நன்கு அறியப்பட்ட ஜாவா கடற்பகுதியின் மேலே பறந்ததே விபத்துக்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலிய விமானப் போக்குவரத்து வல்லுனர் நீல் ஹேன்ஸ் போர்டு இந்த விபத்து குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “ஜாவா கடலின் மேற்பகுதி மூத்த விமானிகளால் ‘இடி, மழையின் தொழிற்சாலை’ என்று அழைக்கப்படும் ஆபத்தான பகுதியாகும். அவர்களால் தவிர்க்கப்பட்ட அந்தக் குறிப்பிட்ட பாதையில் விமானம் பயணித்ததே விபத்துக்கு காரணம். விமானத்தில் பணிபுரிந்த இந்தோனேஷியக் கேப்டனோ பிரெஞ்சு முதல் நிலை அதிகாரியோ இந்த ஆபத்தான பயணத் திட்டத்திற்குக் காரணமாயிருக்கலாம்” என்று தெரிவித்தார். 

அந்த பாதையைச் சுற்றிப் போயிருக்க வேண்டுமே தவிர அந்த பாதையின் வழியே பயணித்திருக்கக் கூடாது என்ற நீல் ஹேன்ஸ் போர்டு, ‘சுரபயா விமான நிலையத்தில் கொடுக்கப்பட்ட வானிலை ஆய்வியல் அறிக்கையை விமானிகள் படித்தனரா? எப்படி அவர்கள் தங்களுக்குள் தொடர்பு கொண்டார்கள்? ஒருவருடைய தாய்மொழி பஹாசா, இன்னொருவருடையதோ பிரெஞ்சு. இந்நிலையில் பொது மொழியான ஆங்கிலம் எந்த அளவுக்கு இருவருக்கும் நல்ல தொடர்பை ஏற்படுத்தியிருக்கும்? எனவே இது விமானத்தை வழி நடத்தியவர்களின் தவறுதான்” என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

இதற்கிடையே 162 பயணிகளுடன் காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் 30 கப்பல்கள், 15 விமானங்கள் ஈடுபட்டுள்ளன. ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன்பிடி படகுகள் மூலம் இன்று போர்னியோ தீவுக்கு அருகில் ஜாவா கடல் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

No comments

Powered by Blogger.