Header Ads



பிரான்ஸ் ரத்த வங்கியின் கொடூரம் - ஈராக்கில் 5 குழந்தைகளை பறிகொடுத்த ஈராக்கியர்

முதலில் மூத்த மகனான நான்கே வயதான அலி 1983-ம் ஆண்டு இந்த மண்ணுலகை விட்டுப்பிரிந்தான். அடுத்து, இரண்டாவது மகன், அதற்கடுத்து மூன்றாவது மகன் என அடுத்தடுத்து 1996-ம் ஆண்டுக்குள் தனது 5 மகன்களை எய்ட்ஸ் அரக்கனுக்கு பறிகொடுத்து விட்டு, யானை கூட்டத்தின் காலில் மிதிபட்ட வாழைத்தோட்டத்தின் நிலையில் ஈராக்கை சேர்ந்த காலித் அல்-ஜபோர் என்பவரின் வாழ்க்கை அலங்கோலமாகிப்போனது.

இத்தனைக்கும் அவருக்கோ, அவரது மனைவிக்கோ எய்ட்ஸ் தொற்று ஏதும் கிடையாது. ஆனால், அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் அனைவருக்குமே 1980-ம் ஆண்டுகால வாக்கில் இனம் புரியாத ஒரு விசித்திர நோய் இருந்தது.  
‘ஹெய்மோஃபிலியாக்ஸ்’ எனப்படும் அந்த நோயின் தாக்கமானது, மனிதர்களின் உடலில் சுரக்கும் ரத்தத்தை உறையச்செய்யும் ரத்தச்சுழற்சி முறையில் கோளாறை உருவாக்கியது. இதன் விளைவாக, காலித் அல்-ஜபோரின் குழந்தைகள் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் கண்டிப்பாக மாற்று ரத்தம் செலுத்தியே தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஈராக்கில் உள்ள பெரும்பான்மையான மருத்துவமனைகள் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு ரத்த வங்கியில் இருந்துதான் உயிரைக்காக்கும் வெளிநபர்களின் ரத்தத்தை இறக்குமதி செய்து வந்தன. 

அவ்வகையில், இறக்குமதி செய்யப்பட்ட ரத்தத்தில் அப்போது தான் மக்களுக்கு புதிதாக அறிமுகமான பெயரான ‘எயிட்ஸ்’ கிருமித்தொற்று உள்ளதா? என்பதை மிக துல்லியமாக பரிசோதித்தப்பிறகே ரத்தத்தை இறக்குமதி செய்ய வேண்டும் என்பதில் எந்த ஈராக் மருத்துவமனையும் அக்கறை காட்டவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், 1983-ம் ஆண்டு மாற்று ரத்தம் செலுத்தும் (டயாலிசிஸ்) சிகிச்சை பெற்ற காலித் அல்-ஜபோரின் மூத்த மகன் அலி இனம் தெரியாத ‘மர்ம நோய்’க்கு பலியானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. 

பின்னர், 1986-ம் ஆண்டு அடுத்த மகன் வாலித், அதே ஆண்டில் சில மாதங்களுக்குப் பிறகு இன்னொரு மகனான பஷர் ஆகியோரும் இதேபோல் மர்மமாக உயிரிழந்தனர். ஆனால், அவர்கள் இருவரும் இறப்பதற்கு முன்னர் அவர்களின் ரத்தத்தில் ‘எய்ட்ஸ்’ தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, தலைநகர் பாக்தாத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியின் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சைப்பகுதியில் அவர்கள் இருவரும் வைக்கப்பட்டிருந்தனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதித்ததில் இருந்து அவர்கள் இருவரின் உயிரும் பிரியும்வரை பெற்ற மகன்களை உயிருடன் பார்க்க காலித் அல்-ஜபோரோ, அவரது மனைவியோ, உறவினர்களோ சிகிச்சைப்பகுதியின் உள்ளே அனுமதிக்கப்படவே இல்லை. கடைசியாக, தங்களது அருமை மகன்களை பிணமாகத்தான் அந்த தம்பதியர் காண முடிந்தது.

அப்போது, ஈராக்கில் சதாம் உசேனின் ஆட்சி நடைபெற்று வந்தது. உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் பட்டியலை உள்துறை அமைச்சகம் தயாரித்தது. உடல் திணவால் அந்த நோயை வாங்கிக்கொண்டவர்களின் பெயர்களுடன் மாற்று ரத்தம் ஏற்றப்பட்டதால் எயிட்ஸ் தொற்றுக்குள்ளான காலித் அல்-ஜபோரின் இரு மகன்களின் பெயர்களும் அந்தப்பட்டியலில் இடம் பெற்றிருந்தது.

உடனடியாக, எஞ்சியுள்ள தனது மகன்களை காலித் அல்-ஜபோர் மறைத்து வைத்தார். ஆனால், ரத்தம் உறையாதபடி பிறவிக்குறைபாட்டுடன் இருந்ததால் ஹைதர் என்ற மகனை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்றாக வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. ஆறு வயது ஹைதரை ஆஸ்பத்திரி நிர்வாகம் சிறைப்படுத்திக்கொண்டது. 1989-ம் ஆண்டு அவன் பிணமாகத்தான் வெளியே வந்தான்.

வீட்டில் இருந்த ஒரே மகன் முஹம்மதை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ராணுவத்தை வைத்து ஆஸ்பத்திரி நிர்வாகம் மிரட்டியது. ஒப்படைக்காவிட்டால் உங்கள் வீட்டு சுவற்றின் மீது ‘இது எய்ட்ஸ் நோயாளிகள் வாழும் வீடு’ என்று பெரிதாக எழுதிவைத்து, உங்களை ஊரில் இருந்து தனிமைப்படுத்தி விடுவோம் என்று ராணுவ அதிகாரிகள் பேரம் பேசினார். 

இறுதியாக எஞ்சியிருந்த ஒரே மகன் முஹம்மதை ஆஸ்பத்திரி ஊழியர்கள் வம்புபடியாக தூக்கிச்சென்று எய்ட்ஸ் வார்ட்டில் பல மாதங்கள் தனிமைப்படுத்தி வைத்திருந்து 1996-ம் ஆண்டு பிணமாகத்தான் கையில் தந்தார்கள்.

இத்தனை குளறுபடிக்கும் பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த ரத்த சேமிப்பு நிலையம், சேகரித்த ரத்தத்தை கொதிக்க வைக்காமல் விற்பனைக்கு அனுப்பியதுதான் காரணம் என்று தெரியவந்தது. இது தொடர்பாக பதில் அளித்த அந்த நிறுவனம், ‘ரத்தத்தை கொதிக்க வைத்தால் அதில் உள்ள முக்கியமான புரதச்சத்து வீரியமிழந்து விடும்’ என்று கூறி நடந்த தவறுக்கு ‘சப்பைக்கட்டு’ கட்டியது.

ஆனால், இந்த விளக்கம் வெளியான சில மாதங்களில் உலகளாவிய வகையில் வெளியான ஒரு மருத்துவ ஆராய்ச்சிக்கட்டுரை, ‘ரத்தத்தை கொதிக்க வைப்பதால் அதில் உள்ள முக்கியமான புரதச்சத்து வீரியமிழந்து விடும் என்று கூறப்படுவது, முற்றிலும் தவறான கருத்து’ என்று தெளிவுப்படுத்தி, பிரான்ஸ் ரத்த வங்கியின் போலி சமாதானத்தை அர்த்தமற்றதாக்கியது.

இந்நிலையில், எய்ட்ஸ் என்னும் அரக்கனுக்கு 1983 முதல் 1996 வரை தனது 5 மகன்களை வரிசையாக பறிகொடுத்த காலித் அல்-ஜபோர் தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு பரிகாரம் தேடி பிரான்ஸ் நிறுவனம் மீது அந்நாட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஈராக் உள்ளிட்ட உலகின் சில முக்கிய நாடுகளுக்கு ரத்தம் சப்ளை செய்துவந்த இந்த நிறுவனத்தை கடந்த 2004-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் முக்கிய மருந்துப்பொருள்களை தயாரிக்கும் ஒரு பிரபல நிறுவனம் வாங்கியுள்ளது.

அந்த நிறுவனத்தில் இருந்து பெற்ற ரத்தத்தின் மூலம் தங்களது வம்சத்தை தொலைத்த சுமார் 270 ஈராக்கியர்கள் காலித் அல்-ஜபோரை போலவே இழப்பீடு கேட்டு பிரான்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதற்கு செவிமடுக்க மறுக்கும் அந்த நிறுவனத்தின் புதிய நிர்வாகம் கூறும் பதில் என்ன தெரியுமா? ‘நாங்கள் அனுப்பிய ரத்தத்தால்தான் உங்கள் உறவினர்கள் இறந்தார்கள் என்று ஆவண ஆதாரத்தோடு இழப்பீடு கோரும் நீங்கள், எங்கள் நிறுவனத்தின் ரத்தம் செலுத்துவதற்கு முன்னதாக அவர்களில் யாருக்கும் எய்ட்ஸ் தொற்று கிடையாது என்பதையும் ஆவணப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபித்து விட்டால் உங்களுக்கு இழப்பீடு அளிக்க நாங்கள் தயார்’ என்று வாய்ச்சவடால் விடுத்துள்ளது.

’என்ன ஆனாலும் சரி, என் ஐந்து பிள்ளைகளின் இறப்புக்கு நியாயம் கிடைக்க எனது இறுதிமூச்சு உள்ளவரை போராடுவேன்’ என்று நல்ல தீர்ப்பை எதிர்நோக்கி விடாப்பிடியாக காத்திருக்கிறார், காலித் அல்-ஜபோர்.

No comments

Powered by Blogger.