தெற்குக் காட்டில் பிறந்தவன், என்ற துணிவிலேயே புலிகளை அழிக்க புறப்பட்டேன் - மஹிந்த
புலிகளுக்கு நிதி வழங்கிய சோல்ஹெய்ம் இப்போது எமக்கெதிராக ஐ.நா.வில் சாட்சி சொல்ல தயாராகிறார். அவர் தொடர்பில் நோர்வே முழுமையான விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பிரபாகரன் வடக்கு காட்டில் பிறந்தவரென்றால் நான் தெற்குக் காட்டில் பிறந்தவன் என்ற துணிவிலேயே புலிகளை அழிக்க புறப்பட்டதாகக் கூறிய ஜனாதிபதி, சோல்ஹெய்ம் புலிகளை மகாவல்லவர் களாகக் காட்டி யுத்தத்தை நிறுத்த முயற்சித்தவர் என்றும் தெரிவித்தார்.
வடக்கு மலையகத்துக்கான அதிவேக நெடுஞ்சாலைக்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் குருநாகல் மாவட்டத்தில் 12,000 குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் வைபவமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் குருநாகலில் நடைபெற்றது.
அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் மற்றும் பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,
இப்போதெல்லாம் நான் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதில்லை. உடனடியாகவே பணிகளை ஆரம்பித்து வைப்பதையே கொள்கையாக வைத்துள்ளேன். ஏனெனில் முன்னர் பலரால் வைக்கப்பட்ட அடிக்கல் முளைத்துவிட்டதைக் காண முடிகிறது. வரலாற்று இராஜ தானியான குருநாகலிலேயே நாம் வடக்குக்கும் மலையகம் கொழும்புக் கிடையிலான அதிவேக நெடுஞ் சாலையை நிர்மாணிக்கவுள்ளோம். எமது நாட்டில் அதிவேக நெடுஞ்சாலைகள் என்பது புதிதல்ல. வரலாற்றுக் காலத்திலும் இருந்துள்ளன. “மஹவே’ என வரலாற்றில் அது குறிப்பிடப்பட்டுள்ளது. பல அடி அகல பாதைகளும் ராஜதானிகளும் இருந்துள்ளன. அது மட்டுமன்றி பிரித் தானியாவுக்கும் ஐரோப்பியாவுக்குமில்லாத சிறந்த கலாசாரம் எமக்கிருந்தது. அது மீளக்கட்டியெழுப்பப்பட்டு வருகிறது.
நாட்டில் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பிருந்த நிலமை என்னவென்று சகலருக்கும் தெரியும். அன்றிருந்த நாடா இன்றுள்ளது என மக்கள் சிந்திக்க வேண்டும்.
குருநாகலையில் குண்டு லொறியைப் பொலிசார் சோதனை செய்து தடுத்திருக்கா விட்டால் அந்த லொறி முழு கொழும்பையும் அழித்திருக்கும். இதுபோன்ற கடந்த கலங்களை பலர் இப்போது மறந்துவிட்டனர்.
அதேபோன்று குருநாகல் மாவட்டத்திலிருந்து தான் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்குப் பெருமளவு இளைஞர்கள் படையில் சேர்ந்தனர். அவர்கள் தமது உயிர்களைப் பணயம் வைத்து போராடினர்.
இவற்றை எவரும் இல்லையென்று சொல்ல முடியாது, சோல்ஹெய்ம் எமக்கெதிராகச் சாட்சி சொல்ல தற்போது முண்டியடித்துக்கொண்டு தயாராவதாக அறிய முடிகிறது.
ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் எமக்கெதிராகச் சாட்சி சொல்லப்போகிறார். அன்று அவர் புலிகளுக்கு பணம் வழங்கியவர் என்பதை அனைவரும் உணர வேணடும். இதனை நோர்வே முறையாக விசாரணை செய்ய வேண்டும். சோல்ஹெய்ம் புலிகளுக்கு நிதி வழங்கியதற்கான சாட்சி எம்மிடமுள்ளது.
அவர் அக்காலத்தில் என்னிடம் வந்து என்ன கூறினார் என்று பலருக்குத் தெரியாது. உங்கள் இராணுவத்துக்கு எந்த முறையிலும் புலிகளை அழிக்க முடியாது அவர்கள் பாரிய திறமையுள்ள வர்கள். அவர்களுக்கு எதிரான போராட் டத்தைக் கைவிடுங்கள். அவர்கள் யுத்தம் புரிவதில் மகாவல்லவர்கள் என்றார்.
“பிரபாகரன் வடக்குக் காட்டில் பிறந்தவர் என்றால் நான் தெற்குக் காட்டில் பிறந்தவன்: ஒரு கை பார்ப்போம்” என்று நான் பதில் கூறினேன். எவர் என்ன நினைத்தாலும் 30 வருடத்தில் எவராலும் முடிக்க முடியாத யுத்தத்தை நாம் முடித்தோம்.
இன்று நடந்துள்ளது என்ன? வயிற்றில் இருக்கும் குழந்தை முதல் வயோதிபர் வரைக்கும் நாம் வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணம் வழங்கியுள்ளோம். இது எப்படி முடியும் ‘மெஜிக்’ காட்டுகிறார் என்று எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். உண்மைதான் எதையும் செய்ய முடியாதவர்களுக்கு இது ‘மெஜிக்’ போன்றுதான் தெரியும். எமக்கு இது யதார்த்தம். இலாபத்தின் பங்குதாரர்களாக மக்களை மாற்றியுள்ளோம். அனைத்து துறைகளுக்குமான எமது கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது.
யுத்தம் முடிந்த பின்பும் இவர்களின் சிந்தனை மாறவில்லை. ‘டயஸ்போர’வை நம்புகின்றனர். இங்கிலாந்து. அமெரிக்கா என அலைந்து டயஸ்போராவுக்குப் பின்னால் செல்கின்றனர். ‘டயஸ்போரா வையே அவர்கள் இப்போது தமது இரட்சகர்களாக எண்ணியுள்ளனர்.
இன, மத, பேதத்தை தூண்டி விடுகின்றனர். இங்கு ஒரு சிறிய சம்பவம் நடந்தாலும் அதை பூதாகரமாக்கி சர்வதேசத்துக்குக் கொண்டுசென்று நாட்டைக் காட்டிக்கொடுப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் செயற்படுகின்றனர்.

Post a Comment