ரணில் நேற்று நாடு திரும்பினார், ஐ.தே.க.யின் முக்கிய கூட்டம் இன்று, முரண்பாடுகளும் நீடிப்பு
ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்த பொது எதிரணி இன்று கொழும்பில் கூடவுள்ளது.இதன்போது அரசாங்கத்திற்கு சவாலான பொது எதிரணியின் பொது வேட்பாளர் யார் என்பது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் பொது எதிரணியின் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவிருந்தபோதுஒருசில முரண்பாடுகளின் காரணமாக அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை. எனினும் அதன் பின்னரான தினங்களில் பிரதான எதிர்க்கட்சிகளும் அமைப்புகளும் ஒரு சில சந்திப்புகளை மேற்கொண்டிருந்த நிலையில் இன்று மீண்டும் பொது எதிரணியின் கூட்டம் இடம்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு பயணத்தினை மேற்கொண்டு மீண்டும் நேற்று நாடு திரும்பியுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் ஏனைய எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்களும் கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சி
அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி தேர்தல் ஆயத்தங்கள் தொடர்பிலும் பொது எதிரணியின் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடுவதற்காக இன்று பிற்பகல் அளவில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடுவதாகவும் ஜனாதிபதி தேர்தலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவுகளை தெரிவிக்கவிருப்பதாகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக தெரிவித்தார்.
சிவில் அமைப்புகளின் நிலைப்பாடு
எனினும் பொது எதிரணியின் பொது வேட்பாளர் யார் என்பதில் சிவில் அமைப்புகள் மற்றும் ஒருசில அரசியல் கட்சிகளிடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை தெரிவுசெய்வதில் தாம் முரண்பட்டுள்ளதாகவும் வேறு ஒருவரை பொது வேட்பாளராக களமிறக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளதுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஹெல உறுமயவில் அழுத்தம்
இதேவேலை அரசாங்கத்தின் சுயாதீன கட்சியாக தம்மை காட்டிக்கொண்டிருக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சி ஜனாதிபதித் தேர்தலில் தமது கொள்கைப் பத்திரத்திற்கு அமைய அதனை ஏற்றுக்கொள்பவர்களை ஆதரிக்கத் தயார் எனவும் பொது எதிரணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். நேற்று கோட்டை நாக விகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் மற்றும் ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ள நிலையில் இன்று அல்லது நாளை ஜாதிகஹெல உறுமய பொது நிகழ்ச்சி நிரல் தொடர்பில் பொது எதிரணியுடன் பேசவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதுலுவாவே சோபித்த தேரர்
மேலும்இ பொது எதிரணியின் சந்திப்பு தொடர்பில் கோட்டை நாக விகாரையின் விகாராதிபதியும் ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளருமான மாதுலுவாவே சோபித்த தேரர் குறிப்பிடுகையில்;
கடந்த சில நாட்களாக சுகயீனமுற்றதன் காரணத்தினால் எதிரணிகளின் கூட்டத்துடன் தொடர்புகொள்ள முடியாதுபோயிருந்தது. எனினும் நாளை மீண்டும் சகல கட்சிகளையும் இணைந்து பொது எதிரணிக்கான சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளோம். அரசாங்கத்துடன் இறுதியாக பேச்சுவார்த்தை நடத்திய போதும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்குவது தொடர்பில் தெளிவான பதில் கிடைக்கவில்லை. எனவே ஏதேனும் ஓர் வழிமுறையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்கியாகவேண்டும். அதற்காக சகல கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியினை நான் எடுத்துள்ளேன் எனவும் குறிப்பிட்டார்.
.jpg)
Post a Comment