வேதனையில் மேர்வின் சில்வா
கடந்த கால சம்பவங்களால் தான் மிகவும் மன வேதனையுடன் இருப்பதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பியகம பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது ஒரே மகன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனாலும் நான் தளர்ந்து விடப் போவதில்லை.
கொள்ளையடித்து, பெண்களை மானபங்கம் செய்து, ஹெரோயின் மற்றும் கஞ்சா விற்றதால் எனது மகன் சிறையில் அடைக்கப்படவில்லை. சண்டையிட்டதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஒரு வருடமும் பல மாதங்களும் எனக்கு அதிகாரம் இருக்கவில்லை. ஒதுங்கியிருந்தேன். நான் அதனை கேட்டு வாங்கவில்லை. ஜனாதிபதி என்னை மீண்டும் களனி தொகுதியின் அமைப்பாளராக நியமித்தார்.
எந்த பதவிக்காகவும் மண்டியிட மாட்டேன். புத்த பகவனிடமும் எனக்கு வாக்களித்த மக்களிடமும் மாத்திரமே மண்டியிடுவேன். என்றும் நான் இதனை செய்வேன்.
நான் ஆரம்பத்தை மறக்காதவன். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகா போட்டியிட்ட போது பதவி ஆசை கொண்டவர்கள் ஓடி மறைந்து கொண்டனர்.
களனி விகாரையிலும் கட்டுநாயக்க விமான நிலையத்திலும் சரத் பொன்சேகாவை இந்த மேர்வின் சில்வாவே தடுத்து நிறுத்தினேன். இதனை முழு இலங்கையும் அறியும் எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment