Header Ads



மிக விரைவில் பாடம் புகட்டுவர் - அஸாத் ஸாலி

ஜாதிக ஹெல உறுமவைத் தொடர்ந்து அரசிலிருந்து இன்னும் பல அமைச்சர்கள் வெளிநடப்பு செய்ய ஆயத்தமாக இருப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், ஐக்கியத் தேசியக் கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் ஸாலி 19-11-2014 எதிர்வு கூறினார்.

மேலும், தேர்தல் ஆணையாளர் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை அறிவிக்கும் முன்னரே அரசு தேர்தல் பிரசாரத்தில் இறங்கி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

"அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப் படு' அமைப்பின் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அஸாத் ஸாலியின் இல்லத்தில்  முற்பகல் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

"நாட்டு மக்களோ அல்லது நாமோ ஜனாதிபதித் தேர்தலை  உடனே நடத்த வேண்டுமென ஒருபோதும் கேட்கவில்லை. ஆனால், அரசு இப்போதே தேர்தலுக்குத் தயாராகி பிரசாரத்தை ஆரம்பித்து விட்டது.

இதையயல்லாம் பார்க்கும் போது மஹிந்தவுக்கு தற்போது தேர்தல் பயம் தோற்றிக் கொண்டது என்றே தெரிகிறது. நாளுக்கு நாள் அரசின் பலம் குன்றிக் கொண்டு வருகின்றமை, தமது குடும்பத்தின் பெயருக்கு இழுக்கு ஏற்படுகின்றமை மற்றும் தமது அரசில் ஊழல்கள் நடைபெறுகின்றமையை மக்கள் புரிந்துக் கொண்டமை உள்ளிட்ட பல விடயங்களை மஹிந்த கவணத்தில் எடுத்துள்ளார்.

இல்லையயன்றால் தேர்தல் ஆணையாளரால் திகதி அறிவிக்கும் முன்னரே ஏன் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்க வேண்டும்.?
அதுமட்டுமன்றி, மஹிந்தவின் பிறந்த நாள் பரிசாக நேற்று அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.

அத்துடன், சுகாதார அமைச்சரான மைத்திரி பால சிறிசேனவும் ஜனாதிபதித் தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார். இதையயல்லாம் பார்க்கும் போது அரசுக்குள் குழப்பமிருப்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இந்நிலைமையால் இன்னும் பல அமைச்சர்கள் வெளிநடப்பு செய்ய தயாராகவே இருக்கின்றனர்.

இப்போதைய நிலைமையில் துறைமுக சண்டியர், விளையாட்டுச் சண்டியர் மற்றும் ஊழல்கள் புரியும் அரசியல் வாதிகளே மஹிந்தவை காப்பாற்றிக் கொண்டு வருகின்றனர்.'' என்றார்.

மேலும், ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவைப் போன்று தாமும் பொது எதிரணி வேட்பாளராக ஐக்கியத் தேசியக் கட்சிக்குள் இருந்து ஒருவர் களமிறங்குவதையே விரும்புவதாகவும் அஸாத் குறிப்பிட்டார்.

அதுமட்டுமன்றி," அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ ஊடகமொன்றிற்கு, தானே யுத்தத்தில் ஈடுபட கருணாகொட, ரோஷான் குணதிலக மற்றும் சரத் பொன்சேனாவின் பெயர்களை ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்ததாக தெரிவித்திருந்தார்.

அப்போதெல்லாம் நல்லவராக இருந்த சரத், மஹிந்தவை எதிர்த்து ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியவுடன் தீயவராக சித்தரிக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார். இது எவ்விதத்தில் நியாயமான செயல் என கேட்டாவிடம் கேட்க வேண்டும். அத்தோடு, தாம் பதவி வகித்தவுடன் கொழும்பிலிருந்த முக்கியமான பாதாள கோஷ்டியினர் இருந்த தடம் தெரியாமல் அழிக்கப்பட்டதாகவும் அவர் மார்த் தட்டிக் கொள்கிறார்.

ஆனால், இவ்வாறெல்லாம் கூறி எம்மையோ அல்லது பொது மக்களையோ பயங்காட்டி விட முடியும் என  கனவில் கூட நினைக்க வேண்டாம் என கேட்டாவிடம் தெரிவித்துக் கொள்கிறோம்.'' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேநேரம், கொழும்பில் தற்போது கம்பங்களில் பதாதைகள் ஓட்டக் கூடாது என்ற சட்டமும் மீறப்பட்டு வருகிறது. நேற்று  கொழும்பிலுள்ள அணைத்து கம்பங்களிலும் மஹிந்தவின் புகைப்படமே காணப்பட்டது.

அதுமட்டுமன்றி, போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களில் காணப்படும் இலத்திரனியல் பாதாதைகளில் தேர்தல் பிரசாரம் போடப்பட்டுள்ளது. மக்களுக்கு சைக்கிள், சிகையலங்கார நிலையங்களுக்கு முடி வெட்டும் கருவிகள் மற்றும் ஓட்டோ சாரதிகளுக்கு டயர்கள் போன்றவற்றையும் அரசு தேர்தலை முன்னிட்டு வழங்கி வருகிறது.

இப்படிப்பட்ட அரசுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் ஐக்கியத் தேசியக் கட்சிக்கும் தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், உண்மையில் ஐ.தே.கவுக்கு அன்றி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கே புலிகளுடன் தொடர்பிருந்தது. இதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையயல்லாம் பார்க்கும் போது இவர்கள் வாரி இறைக்கும் பணம் விடுதலைப் புலிகளுடையது என்றே தெரிவிகிறது.'' எனவும் அஸாத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இலங்கைப் பிரஜைகள் ஒவ்வொருவரையும் சர்வதேசத்திடம் அடமானம் வைத்தே இந்த அரசு பிழைப்பு நடத்தி வருகிறது. சாதாரணமான ஒரு பிரஜை ரூ.3 இலட்சத்து 80 ஆயிரம் கடன் செலுத்த வேண்டியுள்ளது. ஏன், பிறக்கும் குழந்தையைக் கூட இவ்வரசு அடமானம் வைத்துள்ளது.

கடன் தொல்லை இல்லாமல் நாட்டை நடத்திக் கொண்டு செல்வது தான் ஆச்சரியமே ஒழிய இந்த அரசு செய்யும் செயற்பாடுகள் அல்ல.

இவ்வாறு மக்களை வாட்டும் அரசிற்கு மிக விரைவில் அரச ஊழியர்களும் பாடம் புகட்டுவர். புலிகளின் தாக்குதலுக்குப் பிறகு அண்மையில் விமான நிலையம் தொழிற்சங்க பிரதிநிதிகளால் மூடப்பட்டது.

இது ஒன்றும் சிறியவிடயமல்ல. இவர்கள் ரூ 10 ஆயிரம் சம்பள உயர்வு தரவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால்,ரூ 8 ஆயிரமாகத் தருவதாகக் கூறி தற்போது இவர்களின் கோரிக்கை  ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களுக்கு உயர்த்தும் போதுஅரச ஊழியர்களுக்கு  மட்டும் ஏன் சம்பள உயர்வு வழங்கக் கூடாது?
இதனால், எதிர்காலத்தில் பாரியதொரு வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்று வெடிக்க வாய்ப்புள்ளது.'' என்றார்.

அத்தோடு, "ஒருகாலத்தில் நிறைவேற்று அதிகார முறைமையை கடுமையாக எதிர்த்த அமைச்சர்களான திஸ்ஸ வித்தாரண மற்றும் டி.யு. குணசேகர போன்றோர் அமைச்சுப் பதவிகளுக்கு சோரம்  போய் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குகின்றனர்'' என்றும் அஸாத் ஸாலி குற்றம் சுமத்தியமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.