Header Ads



கரும்பாகிப் போன 'கரையோர மாவட்டம்'

(நவாஸ் சௌபி)

ஆலையில் அகப்பட்டகரும்புபோல முஸ்லிம் அரசியலில் அகப்பட்டள்ளது கரையோரமாவட்டம். சமகால முஸ்லிம் அரசியலில் எல்லோராலும் பேசப்பட்டு அரைக்கப்படுகின்ற கரும்பாக கரையோர மாவட்டத்தின் சாறுபிளியப்படுகிறது. எல்லோராலும் பேசப்படுவதனால் நாம் இதனைப் பேசாது விடுவோம் என்று முக்கியமான சில விடயங்களை முக்கியமான சிலர் பேசாது விடுவதுமுண்டு. அதற்கு முக்கிய காரணம் அது பேசப்படுகின்ற சந்தர்ப்ப சூழ்நிலையுமாகும். அத்தகைய ஒருநிலையினைத்தான் இன்று கரையோர மவாட்டக் கோஷம் எட்டியுள்ளது. 

கரையோர மாவட்டம் கிடைக்கப் பெறுகிறதோ இல்லையோ! அதுபற்றி அறியாதிருந்த புதிய தலைமுறையினருக்கு அதற்கான முழுமையான தெளிவு இதன் மூலம் கிடைத்துள்ளமை இதில் வரவேற்க கூடிய ஒரு விடயமாகும். 

குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் உள்ளூராட்சி சபைகள் முதல் பாராளுமன்றம் வரை கரையோர மாவட்டம் தொடர்பாக பாடம் எடுப்பதுபோல் அனைவரும் இன்று அதற்கான போதிய விளக்கங்களை அறிக்கைகளாகவும், பேச்சுக்களாகவும், கோஷங்களாகவும் இட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இதன்படி தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை 1959 இல் தேர்தல் தொகுதிகளின் மீளாய்வு, 1961 இல் அம்பாறை மாவட்டம் உருவானது, 1978 இல் மொரகொட ஆனைக்குழு நியமிக்கப்பட்டது என்று நிறையக் கதைகளை வரலாற்றிலிருந்து எமது தலைமுறைக்கு எடுத்துக்காட்டி கரையோர மாவட்டம் தொடர்பாக தங்களுக்கு பூரணவிளக்கம் இருப்பதாகவும் மார்தட்டிக் கொள்கின்றார்கள்.  

முஸ்லிம் அரசியல் எதிர்பார்க்கும் அதிகாரப் பெறுகையில் கரையோரமாவட்டம் அடையப்பட வேண்டிய முக்கியமான ஒரு வரலாற்றுத் தேவையாகும். முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக இதில் மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருக்க முடியாது.

கல்முனை கரையோர மாவட்டம் என்ற கோரிக்கையினை இலங்கையின் ஆட்சித் தலைமையிடம் முதல்முதலில் முன்வைத்தது அகில இலங்கை முஸ்லிம் லீக் அமைப்பாகும். அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் தீர்மானத்தின்படி 'நிலஅமைப்புமற்றும் ஏனைய காரணங்கள் குறித்து கல்முனைதான் அம்பாறைமாவட்டத்தின் நிர்வாக இடமாக இருக்கவேண்டும்' என்ற முடிவுக்கு வந்து அது 12.06.1977 இல் ஐ.தே.கட்சி தலைவரிடம் கையளிக்கப்பட்டது. (முஸ்லிம் டைம்ஸ் 1980 செப்டம்பர்-1ஆம் வெளியீடு). (நன்றி - சிறுபான்மையினர் சில அவதானங்கள்)  

இவ்வாறு அகில இலங்கை முஸ்லிம் லீக் அமைப்பினால் முன்வைக்கப்பட்ட கரையோர மாவட்ட கோரிக்கையானது 1977 இல் இருந்து இன்றுவரையான 37 வருடங்களில் கிடப்பில் கிடப்பதும் சந்தர்ப்பவாத அரசியலுக்காக பின் மிதக்க விடப்படுவதுமாக அரசியல் அலையில் ஒரு ஓடம் போல் கரை சேராமல் இன்றும் தள்ளாடிக்கொண்டே இருக்கின்றது.

இதுவரை தேசிய அரசியல் சூழமைவில் கரையோர மாவட்டம் தொடர்பாக தீவிரமாகப் பேசப்பட்ட சந்தர்ப்பங்கள் 1985, 2001 ஆகிய ஆட்சிக் காலங்களாகும். அதன் பின்னர் 2014 இல் கரையோர மாவட்டத் திரி மீண்டும் கொழுத்திவிடப் பட்டிருக்கின்றது.

இதில் 1985, 2001 ஆகிய காலப்பகுதியில் கல்முனை கரையோர மாவட்டம் எட்டக் கூடிய ஒரு நிலையினை அடைந்திருந்ததனையும், அச்சந்தர்ப்பத்தில் அதற்கு தடையாக இருந்தவை எனக் கூறப்படும் எதிர்ப்பு அரசியல் கதைகள் மற்றும் அதிலுள்ள உண்மைகள் பற்றியும் இன்னும் விரிவாக ஆராய வேண்டும் அதனை இன்னுமொரு சந்தர்ப்பத்திற்கு விட்டு,  தற்போதுள்ள கரையோர மாவட்டக் கதை பற்றி இதில் உரையாடலாம்.

தற்போது முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலை முன்வைத்து கரையோர மாவட்ட கோரிக்கையினை தன் நெற்றியில் ஒட்டியிருக்கிறது. இதுபற்றி பலரும் பலவிதமான கருத்துக்களையும் விமர்சனங்களையும் கட்சியை நோக்கி முன்வைத்துமிருக்கிறார்கள்.

முஸ்லிம் சமூகத்தின் உரிமைத்துவ அரசியலை முன்னெடுக்கும் ஒரு கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் இருந்தும் அது சமூக உரிமை பற்றி பேசும் ஒரு விடயம் இன்று ஏன் இத்தனை விமர்சனங்களுக்குள்ளாகின்றது என நோக்கும் போது, முஸ்லிம் காங்கிரஸ் உரிமையைப் பேசுகின்ற சந்தர்ப்பமும் அதன்பின் அச்சந்தர்ப்பம் முடிந்தவுடன் அதுபற்றி எந்தவிதமான முன்னெடுப்புகளும் இல்லாமல் அதனை கிடப்பிலே போட்டுவிடுவதுமாக இருப்பதும் மக்களால் நன்கு உணரப்பட்டிருக்கிறது என்பதே அதன் காரணமாக கிடைக்கின்றது. 

பொதுவாக முஸ்லிம் காங்கிரஸ் உரிமையை ஒரு கோஷமாக மட்டும் வைத்துக் கொண்டு அரசியல் செய்யலாம் என்ற துரும்பினை வைத்துக்கொண்டிருக்கிறது என்பதனை இதுவரையான அரசியல் பாடங்கள் மக்களுக்கு புரிய வைத்திருக்கிறது. இதில் மிகப் பிரதானமான பாடமாக கரையோர மாவட்டம் அமைந்திருக்கிறது என்பதே ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மை.

தற்போதுள்ள முஸ்லிம் காங்கிரஸின் அரசியலும் அதன் தலைமையின் போக்குகளும் கரையோர மாவட்டத்தினை ஒரு கோரிக்கையாக முன்னெடுத்துவந்த போதிலும், அதனை மக்கள் முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் கால அரசியல் பிரச்சாரமாகவே பார்க்கின்றார்கள் தவிர, கட்சியினுடைய அமானிதமான ஒரு பொறுப்பாக பார்க்கவில்லை என்கின்ற மனநிலை கரையோர மாவட்ட கோரிக்கை தொடர்பான விமர்சனங்கள் வெளிப்படுத்துகின்றன.

அதிலும் உண்மை இல்லாமல் இல்லை. ஏனெனில் 2001 ஆம் ஆண்டு சந்திரிக்காவுடன் தேர்தல் உடன்பாடு செய்வதற்கு கரையோர மாவட்டக் கோரிக்கையை முன்வைத்து 100 நாட்கள் காலக்கெடு விதித்த முஸ்லிம் காங்கிரஸ் அதே தேர்தலில் ரணிலுடன் எந்த காலக்கெடுவோ, வற்புறுத்தலோ இல்லாமல் இணைந்து ரணிலின் வெற்றிக்குப் பங்களிப்பு செய்தது. 

அந்த வெற்றியை முழுமையாகப் பயன்படுத்தி முஸ்லிம் காங்கிரஸ் அதன் பின் விடாப்பிடியாக இருந்து கரையோர மாவட்டத்தை அவ்வாட்சியில் பெற்றெடுக்கவில்லை. (இதற்கு தடையாக இருந்ததாக முஸ்லிம் காங்கிரஸ் கூறும் எதிர்ப்பானவர்ளின் காய்நகர்த்தல் கதைகளும் ஒரு நொண்டிச் சாட்டு என்பது மனச்சாட்சிக்கு தெரிந்த உண்மை). எனவே இதில் சந்திரிக்காவுடன் இருந்து விலகி ரணிலுடன் இணைவதற்கு ஒரு காரணமாகவே கரையோர மாவட்டக் கோஷம் முன்வைக்கப்பட்டிருக்கிறது என்பது நிருபிக்கப்படுகிறது.

அடுத்து, கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது அரசை ஆட்சிக்கு அமர்த்துவதற்கு முட்டுக்கொடுத்த முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்தவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையில் கரையோர மாவட்டம் முக்கியமான ஒரு விடயமாக உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இருந்தும் அதனை ஒரு காலக்கெடுவுடனோ அல்லது உடனே நிறைவேற்ற வேண்டும் என்றோ இல்லாமல் உடன்படிக்கை செய்ததுடன் எந்த அழுத்தங்களும் கொடுக்காமல் இதுவரை இருந்துவந்ததனை நாம் அறிவோம். 

குறைந்தது ஒரு வருடகாலத்தினுள் கரையோர மாவட்டத்தை வழங்காவிடின் கிழக்கு மாகாண ஆட்சியிலிருந்து வெளியேறுவோம் என்று பகிரங்கமாக ஒரு கோரிக்கையை முஸ்லிம் காங்கிரஸ் முன்வைக்காமல் இருந்துவிட்டு இப்போது கரையோர மாவட்டத்தின் காவலர்களாக அத்தரப்பினர் கர்ச்சிப்பதில் மாமுலான அரசியல் நோக்கைத் தவிர வேறு எதை மக்கள் உணர்வார்கள்.

கரையோர மாவட்டத்தை எப்படியாவது பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கிழக்கு மாகாண சபையின் பிடியை வைத்துக்கொண்டு அதற்கு விடாப்பிடியான ஒரு போராட்டத்தை முன்னெடுத்திருக்கலாம் அதனைச் செய்யாமல் இப்பொழுது ஜனாதிபதித் தேர்தலை முன்வைத்து மஹிந்தவுடன் இருந்து வெளிவருவதற்கு தக்க காரணம் ஒன்று வேண்டும் என்பதற்காக கரையோர மாவட்ட கருவாட்டை மீண்டும் வெளியில் எடுத்து காய வைக்க ஆரம்பித்திக்கிறார்கள்.

இவ்வாறு ஆட்சிக்கு ஆதரவளிப்பதற்கும் ஆட்சியிலிருந்து விலகுவதற்கும் நியாயம் ஒன்றை சொல்ல வேண்டும் என்ற கதையை மக்களுக்கு தெரியப்படுத்தவே முஸ்லிம் காங்கிரஸ் சந்தர்ப்பவாத அரசியல் பிரச்சாரமாக கரையோர மாவட்டதை ஒரு கோஷமாகவும் கோரிக்கையாகவும் முன்னெடுக்கிறதே தவிர அதனை நிறைவேற்றும் அரசியல் வியூகத்தை அது இன்னும் உண்மையாக வகுக்கவில்லை என்பதே உண்மை.

ஏற்கனவே பௌத்த பேரினவாத வன்முறைகளால் பாதிக்கப்பட்டு அரசுடன் முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் ஏன் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று மக்கள் ஆதங்கப்படும் நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் அதன் சமூக அக்கறையை வெளிப்படுத்த கரையோர மாவட்டத்தை பேசுபொருளாக எடுத்திருக்கிறது. இதனால் கட்சிக்கு ஒரு எழுப்பம் ஏற்படும் என்று நினைத்து இதனை அவர்கள் பேசிக்கொண்டாலும் மறுதலையாக முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலுக்காக போலி வேஷம் போடுகிறது என்ற பொருளும் இதற்குள் மேல் எழும்பி இருக்கிறது என்பதுதான் இதன் விமர்சனங்கள் முன்வைக்கும் செய்தியாகும்.

ஏனெனில் இன்றுள்ள இனவாத அரசியல் நிலைப்பாட்டில் எந்த ஆட்சியாளர்களாலும் கரையோர மாவட்டக் கோரிக்கையினை இலகுவாகப் நிறைவேற்ற முடியாது. ரஊப் ஹக்கீமின் தலைமையின் பின்னரான கடந்தகால அனுபவங்களின்படி 2001 இல் ரணிலின் ஆட்சியில் அது கிட்டாமல் போனதும் தற்போது கிழக்கு மாகாண உடன்பாட்டில் மஹிந்த அரசிலிருந்து அது சாத்தியமற்றுப் போனதும் நம்முன் நடந்த ஏமாற்றங்களாகும். 

எனவே இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளும் அதன் தலைமைகளும் இது விடயத்தில் மிகப் பகிரங்கமாக ஏமாற்றியுள்ள நிலையில் இன்னும் எந்த நம்பிக்கையில் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான துரும்புச் சீட்டாக கரையோர மாவட்டக் கோரிக்கையை தூக்கிப்பிடிக்கிறது என்பது வேடிக்கையான ஒரு ஆச்சரியமாகவே இருக்கிறது.

உண்மை இங்கு இவ்வளவு வெளிப்படையாக இருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் மக்களை ஏமாறுகின்றவர்களாக நினைத்து வாய்கூசாமல் கரையோர மாவட்டக் கதையை கதைத்துக் கொண்டு தங்கள் மீது மக்கள் மீதமாக வைத்திருக்கும் நம்பிக்கையையும் கெடுத்துவிடாமல் எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்வது என்ற இஹ்லாசான கோரிக்கைகளை தேடி உங்கள் பிரச்சாரங்களை முன்னெடுங்கள். 

அரசியலில் ஏமாற்றம் இருப்பதுண்டு ஏமாறுவதுதான் அரசியலாக இருக்க கூடாது. 

No comments

Powered by Blogger.