இந்தோனேசிய போலீசில் சேர விரும்பும் பெண்களுக்கு, கன்னித்தன்மை சோதனை நடத்த எதிர்ப்பு
இந்தோனேசிய போலீசில் சேர விரும்பும் இளம்பெண்களுக்கு, கன்னித்தன்மை சோதனை நடத்தப்படுவதற்கு, அந்நாட்டு பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'உடனடியாக இந்த கெட்ட பழக்கத்தை கைவிட வேண்டும்; முன்பின் தெரியாத நபர்கள் முன், நிர்வாணமாக நின்று, எங்கள் பிறப்புறுப்பை சோதனையிட அனுமதிக்க முடியாது' என, அவர்கள் கோபமாக தெரிவித்தனர்.
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று, இந்தோனேசியா. உலகில் அதிக முஸ்லிம் மக்கள்தொகையை கொண்ட நாடு இது. கடந்த ஆண்டு, மூத்த கல்வி அதிகாரி ஒருவர், இங்கு சர்ச்சையை ஏற்படுத்தினார். உயர்கல்வி கற்க விரும்பும் மாணவியருக்கு, கன்னித்தன்மை சோதனை நடத்தி, அவர்கள் கன்னித்தன்மையுடன் இருந்தால் மட்டும், உயர்கல்விக்கு அனுமதிக்க வேண்டும்' என்றார். இதற்கு அங்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அந்த முடிவு வாபஸ் பெறப்பட்டது. இப்போது, போலீசில் சேர விரும்பும் பெண்களுக்கு, கன்னித்தன்மை சோதனை நடத்த வேண்டும் என, கண்டிப்புடன் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்நாட்டின், நான்கு லட்சம் போலீசாரில், 2 சதவீதமாக உள்ள பெண் போலீசார் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்த நிர்வாகம், அதற்காக அழைப்பு விடுத்தது. தேர்வான பெண்களுக்கு, கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதால், அவர்கள் கொந்தளித்தனர்.
இந்த விவகாரத்தை அறிந்த, அந்நாட்டின் மனித உரிமைகள் அமைப்புகள், எதிர்ப்பு தெரிவித்து, இது போன்ற சோதனையை கைவிட வேண்டும் என, வலியுறுத்தின. அது போல, பெண்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'விஞ்ஞான முறைப்படி இல்லாமல், இருவிரல் சோதனை மூலம் கன்னித்தன்மை சோதிக்கப்படுகிறது. இதற்காக நாங்கள், முன்பின் தெரியாத பெண் மருத்துவர் முன், நிர்வாணமாக நிற்க வேண்டுமா... முடியாது' என்றனர். எனினும், அரசு இதுவரை தெளிவான உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை.

Post a Comment