நாமல் ராஜபக்ஸவுடன் இணையும் பொதுபல சேனா
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வியைத் தவிர்ப்பதற்கான கடைசி முயற்சியாக பொதுபல சேனாவுடன் நாமல் ராஜபக்ஷ இணைந்து கொண்டுள்ளார்.
நாமல் ராஜபக்ஷவின் நில் பலகாய மற்றும் பொதுபல சேனா அமைப்பு இணைந்து இது தொடர்பாக நாளை கொழும்பில் இளைஞர் மாநாடொன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளன. குறித்த இளைஞர் மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பொதுவாக பொதுபல சேனா அமைப்பு மாநாடொன்றை நடத்துவதாயின் ஒரு வாரத்துக்கு முன்னர் இருந்தே அது தொடர்பான பிரச்சார நடவடிக்கைகைளை முன்னெடுக்கும். எனினும் இந்த மாநாடு திடீரென்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாடு தொடர்பான சுவரொட்டிகள் பாதுகாப்புத் தரப்பினர் மூலம் இன்று காலை தொடக்கம் நாட்டின் முக்கிய நகரங்கள் தோறும் ஒட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர்கள் மிகக் குறைவாக இருந்த போதிலும் அதன் இளைஞர்கள் பிரிவு சமூக வலைத்தளங்கள் ஊடாக பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தது.
அதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பொதுபல சேனா அமைப்பின் கொள்கைகள் இலகுவாக எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.
இந்த உத்தியை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்திக் கொள்ள ஜனாதிபதி தரப்பு தீர்மானித்துள்ளது. இதற்காக நில் பலகாயவின் இளைஞர்களுக்கு பொதுபல சேனாவின் பிரச்சார உத்திகள் கற்றுக் கொடுக்கப்படவுள்ளது. இது தொடர்பாக நாளை நடைபெறவுள்ள இளைஞர் மாநாட்டில் விளக்கமளிக்கப்படவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
இதன் பின்னர் எதிர்வரும் நாட்களில் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஜனாதிபதிக்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளின் தொடர்பில் புலிகளுடன் தொடர்புடையவர்கள், நாட்டை காட்டிக் கொடுத்தவர்கள் என்ற ரீதியிலும் சமூக வலைத்தளங்கள் ஊடான பிரச்சாரம் பரந்தளவில் மேற்கொள்ளப்படவுள்ளது.
எனினும் பொது பல சேனாவின் சுயரூபம் அறிந்த பின்னர் ஏராளமான இளைஞர்கள் அந்த அமைப்பை விட்டு விலகத் தொடங்கியுள்ளனர். அதன்காரணமாக ஜனாதிபதி தரப்பு எதிர்பார்க்கும் பலன் கிடைக்குமா என்பது சந்தேகமே என்று சிங்கள ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

very good idea
ReplyDelete