Header Ads



ஆளில்லா ஆயுதப் படகு - அமெரிக்கா உருவாக்கியது


ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் திறனுள்ள ஆளில்லாப் படகை அமெரிக்கக் கடற்படை உருவாக்கியுள்ளது.

அமெரிக்கக் கடற்படையின் ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவர் ரியர் அட்மிரல் மாத்யூ கிளண்டர் இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்த விவரம்:

நேற்றைய தொழில்நுட்பங்களைக் கொண்டு நமது வீரர்கள் நாளைய போர்களில் சண்டையிட முடியாது. அமெரிக்க கடற்படையின் போர்த்திறனை மேம்படுத்தும் தொழில்நுட்பத்தை தொடர்ந்து உருவாக்குகிறோம். நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பிறகு, ஆளில்லா ஆயுதப் படகுத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்க குறைந்த செலவே ஆகும்.

இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கிய ஓர் இயந்திரத்தை எந்தப் படகிலும் பொருத்தி அதனை ஆளில்லாப் படகாக ஈடுபடுத்தலாம். அதில் கப்பல்களை அழிக்கும் ஏவுகணை ஆயுதங்கள், அல்லது விமானங்களை அழிக்கும் ஆயுதங்களைப் பொருத்தலாம்.

அந்தப் படகில் பொருத்தியுள்ள ரேடாரிலிருந்து வெளிப்படும் சமிக்ஞைகளைப் பிற ஆளில்லாப்

படகுகள் பின்பற்றி, இவை ஒரு குழாமாகச் செயல்பட முடியும்.

தனித்து அல்லது ஒன்றிணைந்து, தமது ஆயுதங்களைப் பயன்படுத்தும் திறன் இவற்றுக்கு உள்ளது. இதற்கான ஆணையை தொலைவிலிருந்து ஒரு கடற்படை அதிகாரி கொடுக்க முடியும். இந்த வகையில் ஆளில்லா ஆயுதப் படகுகள் குழாமானது எதிரிக் கப்பலைத் தாக்கி அழிக்க வல்லது.

அதே சமயம், அமெரிக்க போர்க்கப்பலுக்கு எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் விதமாகவும் இந்த ஆளில்லா ஆயுதப் படகுக் குழாமைச் செலுத்தலாம் என்றார்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா, செவ்வாய் கிரகத்தில் ஈடுபடுத்தியுள்ள "ரோவர்' ஆய்வுக்கலனில் பயன்படுத்திய தொழில்நுட்ப அடிப்படையில் இந்த ஆளில்லா ஆயுதப் படகு உருவாக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் முழுமையான சோதனை, 13 படகுகளைக் கொண்டு, விர்ஜினியா மாகாணப் பகுதியில் ஜேம்ஸ் நதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.