Header Ads



''மூழ்கப்போகும் ராஜபக்ஷ ஆட்சிக்கு, முட்டுக்கொடுக்க வேண்டிய தேவை எனக்குக்கிடையாது'' ஹரின்

தயாசிறி ஜயசேகர, உதித்த லொக்குபண்டார போன்றோர் செய்த காட்டிக்கொடுப்பை, துரோகத்தை தான் ஒருபோதும் செய்யப்போவதில்லை எனத்தெரிவித்த ஊவா மாகாண ஐ.தே.க. முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் நட்புரீதியில் சுகம் விசாரித்துக் கொண்டது  தப்பா? எனக்கேள்வி எழுப்பினார். 

எனக்கும் நாமலுக்குமிடையில் எந்த இரகசியப்பேச்சும் இடம்பெறவில்லை. கட்சிமீதும், தலைமைத்துவத்தின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. அதேபோன்று கட்சியும், தலைமையும் என்னை நம்புகிறது. அந்த நம்பிக்கைக்கு நான் ஒருபோதும் துரோகமிழைக்க மாட்டேன். மூழ்கப்போகும் ராஜபக்ஷ ஆட்சிக்கு முட்டுக்கொடுக்க வேண்டிய தேவை எனக்குக்கிடையாது. கூடவிருந்து குழிபறித்த தயாசிறி, லொக்குபண்டார போன்றவர்கள் இன்று ஐ.தே.க. வில் இல்லை. நான் இதயசுத்தியுடன் நடந்து கொள்வதால்தான் எதிர்க்கட்சியில் உள்ளவர்களும் என்னை நண்பனாக மதிக்கின்றனர். பொது வைபவங்களில், கூட்டங்களின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் எமது தலைவர் ரணிலும் சந்தித்து பேசுவதில்லையா? ஏன் கட்சித் தலைமைத்துவ சபைத் தலைவர் கரு ஜயசூரியவும் ஜனாதிபதியும் சந்தித்தால் பேசுவதில்லையா? அவர்கள் கட்சி மாறுவதற்கா பேசுகிறார்கள்? 

நானும் நாமலும் சந்தித்தால் அதனை பூதாகரமாக்க ஊடகமொன்று ஒப்பாரிவைக்கத் தொடங்கிவிட்டது. இதற்கான ஒப்பந்தம் என்ன தொகையோ தெரியாது. எமக்கு பெருகிவரும் ஆதரவை முறியடிப்பதற்கே இந்த சேறுபூசும் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த புளுகுமூட்டைகளை நம்புவதற்கு ஊவா மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. இந்தப் பொய்யர்களின் முகமூடி எதிர்வரும்  20 ஆம் திகதியன்று கிழித்தெறியப்படும். அதன் பின்னர் அவர்களால் ஊவாப் பக்கம் தலைகாட்டவும் முடியாது போகும். இந்த விடயத்தில் எந்தச் சவாலையும் ஏற்கத் தயார். என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலுக்கே முழுக்குப்போட்டு வெளியேறுவேன் எனவும் ஹரின் பெர்னாண்டோ செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.