Header Ads



உரிய ஆவணங்கள் இருப்பின் ஒருவாரத்தில் ஊழியர் சேமலாப நிதி

உரிய ஆவணங்களைச் சமர்பிக்கும் பட்சத்தில் ஒரு வார காலத்தினுள் ஊழியர்கள் தமது ஊழியர் சேமலாப நிதியைப் பெற்றுக் கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தொழிலமைச்சர் காமினி லொக்குகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் ஒத்துவைப்பு வேளை பிரேரணை விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்றிய அவர், ஊழியர் சேமலாப நிதியில் மோசடிகள் இடம்பெற்றிருப்பது உண்மையால் எதிர்க்கட்சி அது பற்றி “கோப்” குழுவிற்கு முறைப்பாடு செய்யலாம் என்றும் தெரிவித்தார்.

மேற்படி நிதி தொடர்பான நிர்வகிப்புகளை மத்திய வங்கியே மேற்கொள்கின்றதெனக் குறிப்பிட்ட அமைச்சர் பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஊழியர்களின் சேமலாப நிதியை வைத்து அரசியல் இலாபம் தேட முயற்சிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் ஐ.தே.க. எம்.பி. ஜோசப் மைக்கல் பெரேராவினால், சமர்ப்பிக்கப்பட்ட சபை ஒத்துவைப்பு வேளை பிரே ரணை மீதான விவாதத் திற்குப் பதி லளித்துப் பேசுகையிலேயே அமைச் சர் காமினி லொக்குகே இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சியினர் ஊழியர் சேமலாப நிதியில் மோசடிகள் இடம் பெறுவதாகக் குற்றஞ்சாட்டினர். இதனை முற்றாக நிராகரித்த அமைச்சர் அவ்வாறு மோசடிகள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் ‘கோப்’ குழுவில் முறையிடலாம் என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் இது தொடர்பில் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஊழியர் சேமலாப நிதியம் வருடத்திற்கு வருடம் அதன் பணிகளை விஷ்தரித்து வருவதுடன் தற்போது அந்த நிதியம் மூன்று ட்ரில்லியன் ரூபாவைக் கொண்டுள்ளது.

ஊழியர் சேமலாப நிதியத்தின் நடவடிக்கைகள் கடந்த அனைத்து அரசாங்கங்களின் காலத்திலும் முன்னெடுக்கப்பட்டே வந்துள்ளன. இப்போது இது தொடர்பில் குறை கூறுபவர்கள் தமது காலத்தில் எதனையுமே செய்ததில்லை.

தற்போதைய அரசாங்கம் அதனை விரிவுபடுத்தி நவீன வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் நிறுவனங்களை இணைத்து ஊழியர்களுக்கு தமது ஊழியர் சேமலாப நிதி முறையாகக் கிடைக்க வழி செய்துள்ளது.

இதுவரை தமது நடவடிக்கைகளை ஒழுங்காக மேற்கொள்ளாத நிறுவனங் களுக்கு கால அவகாசம் ஒன்றையும் வழங்கியுள்ளோம். தொடர்ச்சியாக இதனை அலட்சியப்படுத்தி வரும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.