Header Ads



முஸ்லிம் காங்கிரசுக்கு மிகப் பெரிய சவால் காத்திருக்கின்றது - ஹரீஸ்

(ஹாசிப் யாஸீன்)

முஸ்லிம் சமூகத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பெருந்தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபின் வழிகாட்டுதல்கள் நமது நாளைய சமூகமும் பின்பற்றும் வகையில் நாம் பணியாற்ற வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர்  மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃபின் 14வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸினால் பிரகடணப்படுத்தப்பட்ட தலைவர் தின நிகழ்வு நேற்று சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் அதிபர் எம்.ஐ.எம்.முஜீன் தலைமையில் நடைபெற்றபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தொடரந்தும் உரையாற்றுகையில்,

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மறைந்து இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு பெருந்தலைவர் பற்றி அறிவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. ஆனால் அவர்களுக்கு அதனை சொல்ல வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது.

நமது சமூகத்தில் இப்படிப்பட்ட ஒரு ஆளுமை மிக்க தலைவன் இருந்தார் என்பதை அவர்கள் தெரிந்திருக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள்தான் நாளைய தலைவர்கள். தமது வாழ்க்கையின் வெற்றிக்கு மர்ஹூம் அஷ்ரஃபின் வழிகாட்டுதல்களை முன்னுதாரணமாகக் கொள்ளலாம்.

பெரும்பான்மைக் கட்சிகளில் அரசியல் செய்துவந்த முஸ்லிம்களை தனித்துவமாக தன்மானத்துடன் அரசியல் செய்வதற்கான பாதையை ஏற்படுத்தியவர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிதான் நமது சமூகத்திற்கான உரிமைக்கும், நலனுக்கும் பாதுகாப்பளிக்கும் என்பதை உணர்ந்துதான் பெருந்தலைவர் அஷ்ரஃப் இந்தக் கட்சியின் கீழ் எல்லோரையும் ஒன்றுபடுத்தினார். அதில் வெற்றியும் கண்டார்.

1987ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய அநியாயம் நடந்தது. முஸ்லிம் தரப்பாக பேசுவதற்குக்கூட அருகதையற்றவர்களாக முஸ்லிம்கள் இருந்தனர். அப்போதுதான் தலைவரின் எண்ணங்கள் தனித்துவ அரசியலுக்கு வித்திட்டது.

மக்கள் மத்தியில் இறங்கி தனது கொள்கையை பிரச்சாரம் செய்தார். பல்வேறு வழிகளிலும் அவருக்கு இடையுறுகள் ஏற்படுத்தப்பட்டாலும் மிக உறுதியோடு தனது கொள்கைகளை முன்கொண்டு சென்றார். முழு இலங்கையுமே அஷ்ரஃபை திரும்பிப் பார்க்கும் நிலைக்கு நிலைமை மாறியது. கிழக்கு மக்களின் ஏகோபித்த பெருந்தலைவனாக நாங்கள் அவரைப் பார்த்தோம்.

தலைவர் அஷ்ரஃப் கூட்டங்களுக்கு வருகின்றார் என்றால் மக்கள் கூட்டம் அலைமோதும். அவர் பேசுகின்றபோது எங்களது உடம்பு மெய்சிலிர்க்கும். முஸ்லிம்களின் ஒரு ஜனாதிபதி, ஒரு தளபதி ஸ்தானத்தில் அஷ்ரஃப் பார்க்கப்பட்டார்.

எதிர்க்கட்சி அரசியலிலும், ஆளும்கட்சி அரசியலிலும் பெருந்தலைவர் அஷ்ரஃப் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார். சமூகத்திற்கான உரிமைகள், அபிவிருத்திகள் ஏராளமாக செய்து காட்டினார். கல்விக் கூடங்களை அமைத்தார், வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்தார். ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கினார். வீடில்லாதவர்களுக்கு வீட்டுத்திட்டங்களை அமைத்தார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈட்டுத் தொகைகளை பெற்றுக்கொடுத்தார், மின்சாரம் இல்லாத கிராமங்களுக்கு மின்சார வசதிகளை ஏற்படுத்தினார் இப்படி பல செயற்பாடுகளை மேற்கொண்டார்.

குறிப்பாக தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம், நீர்வழங்கள் திட்டம் என்பன மிக முக்கியமானவையாகும். நமது மாணவர்கள் காலடியில் உயர் கல்வி கற்பதற்கான அரிய வாய்ப்பினை ஏற்படுத்தினார்.

மர்ஹூம் அஷ்ரஃபின் பெயரில் முத்திரை வெளியிடப்பட்டுள்ளது, அவர் பெயரில் அமைப்புக்கள் ஏற்படுத்தியுள்ளனர். நிறுவனங்களுக்கு அவரது பெயரை சூட்டியுள்ளனர், அவர் பெயரில் பாடசாலைகளைக் காண்கின்றோம் இன்று பாடசாலைப் பாடப்புத்தகத்தில் மாத்திரம்தான் அஷ்ரஃபின் பெயர் இல்லை. எதிர்காலத்தில் எங்களுக்கு அந்த வாய்ப்புக்கள் வருமாக இருந்தால் நிச்சயம் அதனையும் செய்வோம்.

இன்று முஸ்லிம்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். மர்ஹூம் அஷ்ரஃபின் இழப்பு எமக்கு அதனை ஞாபகப்படுத்துகின்றது. அளுத்கம சம்பவங்கள் தொடக்கம் பல விடயங்களில் முஸ்லிம்கள் தமது எதிர்காலம் குறித்த மிகப்பெரிய கேள்விக்குள் உட்பட்டுள்ளனர். இந்த அரசாங்கத்தில் ஆட்சியாளர்களாக இருந்தாலும் நமது பிரச்சினைகள் ஆராயப்பட்டு தீர்வைப் பெற்றுக்கொள்ளும் மனப்பாங்கில் நாங்கள் இருக்கின்றோம்.

இன்னும் இரண்டொரு மாதங்களில் தேசிய அளவில் தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளது. இதில் முஸ்லிம் காங்கிரசுக்கு மிகப் பெரிய சவால் காத்திருக்கின்றது. நாம் இழந்துபோன பேரம்பேசும் சக்தியை பெற்றெடுப்பதற்கான காலம் கணிந்துள்ளதாக நான் நினைக்கின்றேன்.

சுயநல அரசியல் பேதங்களைக் கடந்து ஒன்றுபட்டுச் செயற்படுவதன் மூலமே நமது இலக்கினை அடைந்து கொள்ளலாம்.

மர்ஹூம் அஷ்ரஃபின் தியாகத்தினாலேயே அதிகாரத்தைப் பெற்றவர்கள் இன்று அவரின் கொள்கைக்கு மாறாக செயல்படுகின்றனர். அஷ்ரஃப் என்கின்ற ஒருவர் இல்லையென்றால் இப்போதிருக்கின்ற எவரும் அதிகாரத்தைப் பெற்றிருக்க முடியாது. அஷ்ரஃபின் ஆளுமைகள் நமக்கு எப்போதும் படிப்பினையாக இருக்க வேண்டும்.

பயங்கரவாதிகளின் துப்பாக்கி முனைகள் தன்மீது குறிவைக்கப்பட்டும் தனது சமூகத்தின் மறுமலர்ச்சிக்காக இரவு பகலாக உழைத்த பெருந்தலைவன் சதிகாரர்களின் சதிக்கு ஆளானார். அஷ்ரஃப் மறைந்தாலும் அவர் விதைத்த வித்துக்களான நாங்கள் அவரது கொள்கைகளை முன்னடுத்துச் செல்வோம் என்றார்.

No comments

Powered by Blogger.