Header Ads



அரசாங்கத்தின் கைக்கூலியா பஷீர் சேகுதாவூத், அதை நான் பொருட்படுத்தப்போவதில்லை..!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் எம்.எச்.எம்.அஷ்ரபும் எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் வே.பிரபாகரனும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் மக்களின் செல்வாக்கு பெற்ற தலைவர்கள். இதை பக்குவமாக புரிந்துகொண்டாலே தேசிய ஐக்கியம் சாத்தியப்படும் என உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் 14ஆவது வருட சிரார்த்ததின நிகழ்வு   ஏறாவூர் அல் அஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (16)  நடைபெற்றது. இங்கு 'அஷ்ரப் விரும்பிய தேசிய ஐக்கியம்' என்ற நினைவுப்பேருரை ஆற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.  இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

'பிரபாகரனை தமிழ்ச் சமூகம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை. இறந்தவர்களிலோ உயிருடனுள்ள தமிழ்த் தலைவர்களிலோ தமிழ் மக்கள் மனங்களில் ஆகக்கூடிய செல்வாக்குடன் இறுதிவரை மதிக்கப்படக் கூடியவர் பிரபாகரனே. இந்த அபிப்பிராயம் தெரிவிப்பதை பற்றி சிங்களப் பேரினவாதம் கோபித்தாலோ, அரசாங்கம் கோபித்தாலோ நான் பயப்படப்போவதில்லை.  ஏனென்றால், நான் இஸ்லாத்தை விசுவாசித்தவன் என்ற அடிப்படையில் உண்மையைக் கூற ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. இவ்விடயத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி எனக்கு பழக்கமில்லை.

மேற்கூறிய இதேவிடயத்தைப் போல, இலங்கை முஸ்லிம்களுக்குள் இன்றுவரையும் இன்னும் எதிர்காலத்தில் ஆயிரம் வருடங்கள் போனாலும்,  என்றென்றும் மக்களால் மதிக்கப்படக்கூடிய ஒரேயொருவர் மறைந்த மாபெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பே. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்காது. 

இதேவேளை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் சரி,  மறுத்தாலும் சரி, மறைத்தாலும் சரி இன்னுமொரு கசப்பான உண்மையையும் இங்கு பகிரங்கமாக கூறியேயாக வேண்டும். சிங்கள பௌத்த மக்களுக்குள் இன்னும் உயிரோடு இருப்பவர்களில் இந்தக்; கொடிய யுத்தம் முடிவடைந்த பின்னர் அதிகூடிய செல்வாக்குடன் மக்கள் மனங்களில் அழியாத இடத்தைப் பிடித்தவர் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ என்பதை எவரும் மறுதலிக்கமுடியாது. கசப்பாயினும் இந்த உண்மையை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்

அரசாங்கத்தின் கைக்கூலியாக இருந்துகொண்டு பஷீர் சேகுதாவூத் இத்தகைய கருத்தை பரப்புகிறார் என்று எவர் கூறினாலும், அதை நான் பொருட்படுத்தப்போவதில்லை. இந்த உண்மையை நான் பகிரங்கப்படுத்தியதற்காக நீங்கள் எனக்கு ஒரு வாக்குகேனும் அளிக்காவிட்டாலும் பரவாயில்லை.  இந்த அடிப்படை யதார்த்தங்களை இலங்கையில் வாழ்கின்ற எல்லா இன மக்களும் புரிந்துகொள்வது மிக முக்கியமானது.

இறந்த பின்னர் இன்னமும் தமிழர்களுக்குள் அதிகூடிய செல்வாக்குச் செலுத்தும் தலைவர் பிரபாகரனே என்பதை சிங்கள மக்கள் உணரவேண்டும். அதேபோல, மறைந்த பின்னரும் முஸ்லிம்களின் மனங்களில் மறையாமல் வாழும் மாபெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் என்பதையும்  சிங்களப் பெரும்பான்மையும் தமிழரும்   உணரவேண்டும்.

அதேபோன்று, சந்தேகத்திற்கிடமின்றி சிங்கள பௌத்த சமூகத்திற்குள் மிகப்பெரும் ஆதரவும் பலமும் பெற்ற ஏகோபித்த தலைவன் மஹிந்த ராஜபக்ஷ என்பதை தமிழரும் முஸ்லிம் சிறுபான்மையும் உணரவேண்டும்.

இந்த ஆழமான புரிதல்களுக்கூடாவே தேசிய ஐக்கியம் என்பது சாகாவரம் பெற்று நிற்கும். அப்பொழுதே எமது நாடு ஒரு ஐக்கியப்பட்ட தேசம் என்பதையும் இந்த நாடு சர்வதேசத்துக்கு மீண்டும் ஒருமுறை அடிமைப்படாது என்பதையும் நிரூபித்து தலை நிமிர்ந்து நிற்கும்.

எங்களை சிங்களவர்கள் ஆளக்கூடாது என்று நாம் கருதினால், அதற்குப் பதிலாக இந்தியனையோ அல்லது வெள்ளையனையோ ஆள அனுமதிக்கலாமா என்பதை எமக்குள் நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும்.

இந்த நாட்டின் எல்லாச் சமூகங்களும் சேர்ந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புகின்ற சம பங்காளிகளாக இருக்க வேண்டும். ஆகவே, இன்று தமிழ்ச் சமூகத்துக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் இருக்கின்ற பேரம் பேசும் சக்தி என்பது ஐக்கியப்பட்ட குரல்தான். தேசிய ஐக்கியம் என்பது மூன்று இனங்களின் இணைவே. இதில் எள்ளளவேனும் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை.  மூவினங்களின் மன நிலையும் கொள்கைகளும் ஒன்றாகப் பயணிப்பதே தேசிய ஐக்கியம். தேசிய ஐக்கியம் என்பது இந்த அரசாங்கத்தின் பங்காளிகள் என்பதிலேயே தங்கியுள்ளது.

வர இருக்கின்ற பெரிய அரசியல் மாற்றத்தை சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்கொள்வதற்கும் அதை கடந்து செல்வதற்கும் தங்களை தயார்ப்படுத்தவேண்டும்.

தலைவர் அஷ்ரப் இருந்தபோது நாடு பிளவுபட்டிருந்தது. எல்.ரீ.ரீ.ஈ. இனர் நாட்டின் எந்தப்பாகத்திலும் எந்தத் தாக்குதலையும் நடத்தக்கூடிய வல்லமை பெற்றிருந்தார்கள். தமிழ் மக்களின் தேசிய விடுதலைச் சின்னமாக விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் பிரபாகரனும் இருந்தார்கள். 

அப்பொழுது சிங்கள கடும் போக்குவாதம் மிகவும் பலவீனமாக இருந்தது. ஆகையினால், மிகவும் பலவீனப்பட்டுப்போயிருந்த சிங்கள, பௌத்த கடும்போக்குவாதத்தால் அரசாங்கத்துக்குள்ளே அதன் செல்வாக்கைச் செலுத்த முடிந்திருக்கவில்லை.

யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது, சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் பல்லினக் கலாசார அடையாளமிருந்தது. சிறுபான்மை இனங்களின் கலாச்சாரத்தை போற்றுதலும் மதிப்பளித்தலும் இருந்தன.

முஸ்லிம்களின் கலாசாரப் பண்பாட்டு பாரம்பரிய விழுமியங்களை நாட்டின் எப்பாகத்திலும் கடைப்பிடிக்கக்கூடிய அங்கிகாரமும் அனுசரணையும் போற்றுதலும் புரிதலும் இருந்தன. பயம்  குடிகொண்டிருக்கவில்லை. இவ்வாறு தேசிய இனங்களுக்குள்ள அத்தனை அடையாளங்களும் அங்கிகாரமும் கண்ணியமும் உருக்குலையாமல் இருந்த அதேவேளை,  தேசிய இனங்களுக்குள்ளே யுத்தமும் நடந்தது.

வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற சிறுபான்மை இனங்களுக்கான என்றுமில்லாத யாரும் முன்மொழியாத ஒரு கௌரவமான உள்ளக சுயாட்சி அரசியல் தீர்வை முன்மொழிகிற, முஸ்லிம்களுக்கு தென்கிழக்கை பெற்றுத்தருகின்ற  ஒரு யாப்புத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் 3 மணித்தியாலங்கள் பேசுகின்ற ஒரு வாய்ப்பும் அப்போது இருந்தது. அந்த வேளைகளில், கடும்போக்குவாதம் வாலைச் சுருட்டிக்கொண்டே இருந்தது. அன்று அரசியல் மென்போக்கு இருந்தது. இன்று கடும்போக்கு அரசியல் களை கட்டியிருக்கிறது.

முஸ்லிம் அரசியல் என்பது மறைந்த தலைவர் அஷ்ரப் விட்டுச்சென்ற பாதையிலிருந்தே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், அப்படி நடந்திருக்கவில்லை.

இன்று சிங்களத் தேசியம் அரசியலில் பெரும் பலம் பொருந்தியிருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியலிலும் மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது. புதிய தலைமைத்துவம் கிடைத்திருக்கின்றது. தமிழ் மக்கள் சர்வதேச அரசியலுக்குள் தங்களது பிரச்சினைகளையும் தேவைகளையும் தீர்வுகளையும் கொண்டு செல்கின்றார்கள். இந்தியாவுக்கு போய் பிராந்திய பலம் பொருந்திய அரசியல் சக்திகளைச் சந்திக்கின்றார்கள். ஜெனீவாவில் தங்களது பிரச்சினைகளை முன்மொழிய யோசித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

அதேவேளை, முஸ்லிம் சமூகம் தன்னை விரைந்து தயார்ப்படுத்திக்கொண்டு தெளிவாக தனது அரசியல் பயணத்தை முற்கொண்டு செல்லவேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றது.

அன்றிருந்ததை விட இன்று இந்த நாடு பாதுகாப்பு விடயங்களில் மிகப் பலம் பொருந்திய நாடாக இருக்கின்றது. ஐக்கிய நாடுகள் படைக்கு எமது நாட்டின் விமான, தரை, கடல், காலாட்படை என்று எல்லாவற்றையும் அனுப்பக்கூடிய தகுதியை பெற்றுவிட்டது. அனுப்பிக்கொண்டிருக்கின்றோம்.

வெளிநாடுகள் வந்து தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் எவ்வாறு முறியடிப்பதென்று இலங்கையிடம் பயிற்சி பெறுகின்றன.

ஒரு காகம் 'கீகீ' என்று கரைந்தால் அதை சரியாகக் கணித்து எமது புலனாய்வாளர்கள் தகவல் சொல்லி உஷார் நிலையில் நாட்டை வைத்திருக்கும் நிலை உருவாகி விட்டது. பெரிய, கண்ணுக்குப் புலனாய்வு வலையமைப்பே நாட்டில் 24 மணிநேரமும் இயங்குகின்றது. அந்தளவுக்குப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.

நாட்டின் பொருளாதாரம் யுத்தத்துக்கு  பின்னர் பன்மடங்கு பலம் பொருந்தியதாக பெருகியிருக்கின்றது. பில்லியன் கணக்கான பணம் வெளியிலிருந்து நாட்டுக்குள் வந்திருக்கிறது.

அன்று இருந்த நிலைமை வேறு. இன்றிருக்கும் நிலைமை வேறு. அன்று அரசு அதிகாரம் செலுத்துகின்ற நிலைமை இருந்தது. இன்று வெளியிலிருந்து கடும்போக்காளர்களால் அரசுக்கு அதிகாரம் செலுத்துகின்ற நிலைமை தோன்றியிருக்கின்றது.

நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இந்த நாட்டில் இருக்கின்றபோதும் நாடாளுமன்றத்துக்கு வெளியில்  இருந்து அதிகாரம் செலுத்துகின்ற கடும்போக்கு நிலைமையும் இருக்கின்றது. 

இன்று எல்லா அதிகாரமும் இருந்தும் கடும்போக்குவாதம் எல்லா அதிகாரங்களையும் ஸ்தம்பிக்கச் செய்திருக்கின்றது.

எனக்கு கட்சி அரசியலோ, நாடாளுமன்றக் கதிரையோ, அமைச்சுப் பதவியோ முக்கியமல்ல. நாட்டில் நிலவுகின்ற யதார்த்த நிலைமைகளைச் சொல்லி இந்த சமூகத்தை அறிவூட்ட வேண்டும் என்று நினைக்கின்றேன். இன அடையாள அரசியலுக்கப்பால் அஷ்ரப் விட்டுச் சென்ற தேசிய ஐக்கியம் என்ற அரசியல் அடையாளத்தோடு இந்த சமூகம் பயணிக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். அவ்வளவுதான் என்றார். 

1 comment:

  1. நம்பினால் நம்புங்கள் சூரியன் கிழக்கில் தான் உதிக்கும். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நான் யதார்த்த வாதி, உங்களுக்கு கசப்பாக இருக்கலாம் ஆனால் இதுதான் யதார்த்தம்... இலங்கையில் ஒரு மகாவலி கங்கை என்றால் உலகத்துக்கு நைல் நதி..! எனவே முஸ்லிம்கள் தங்களது அரசியல் முன்னெடுப்புக்களை தூர நோக்குடன் சிந்தித்து சானாக்கியமான முடிவு எடுக்க வேண்டும்.

    சேகு தாவு அவர்களே, நான் மேட் கூறியவை உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

    மக்களே..!
    கேட்பவன் கேன பயல் என்றால் எருமை மாடு ஏறப்பிளேன் ஒட்டுது என்பானாம்.

    ReplyDelete

Powered by Blogger.