Header Ads



'சிறுத்தையை வென்றவர் என செய்தி வருவதையே விரும்புகிறேன்'' உசைன் போல்ட்

 ‘‘என்னை யாரும் தோற்கடிப்பதை விரும்பவில்லை. சிறுத்தையை வென்றவர் என செய்தி வருவதையே விரும்புகிறேன்,’’ என, உசைன் போல்ட் தெரிவித்தார்.

உலகின் ‘மின்னல் வேக வீரர்’ ஜமைக்காவின் உசைன் போல்ட், 28. இவர், 100, 200 மற்றும் 4*100 மீ., ஓட்டத்தில். பீஜிங் (2008), லண்டன் (2012) ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார்.

முதன்முறையாக இந்தியா வந்த இவர், பெங்களூருவில் நடந்த  கண்காட்சி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார்.

இங்கு உசைன் போல்ட் கூறியது,

தடகள வீரர் என்ற முறையில் பல்வேறு சாதனைகள் வருவதையும், போவதையும் பார்த்திருக்கிறேன். ஏனெனில், சாதனைகள் என்பது எப்போதுமே முறியடிக்கக் கூடியது தான். என்னைப் போல வரவேண்டும் என்று விரும்பினால், கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். இதனால் எனது சாதனையை முறியடிக்க முடியாது. காலத்தை கடந்து நிற்கும்.

என்னைப் பொறுத்தவரையில், தொடர்ந்து மூன்று ஒலிம்பிக்கில் அசத்தி, 100, 200 மீ., ஓட்டத்தில் 6 தங்கம் வென்ற ஒரே வீரராக இருக்க வேண்டும் என, விரும்புகிறேன். இதனால் தான் ரியோ டி ஜெனிரா ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ளேன். 

தடகளப் போட்டிகள் என்பது மிகவும் கடினமானது. இது, மனவலிமை மற்றும் எப்படி ஒருமுகமாக செயல்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது. இதில் சிறந்த வீரர்களை தேர்வு செய்வது என்பது கடினம்.

அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் சிறப்பான வீரராக உள்ளார். இதேபோல, சக வீரர் யோகன் பிளேக், மற்றொரு அமெரிக்க வீரர் டைசன் கெய் என, பலர் எனக்கு போட்டியாக உள்ளனர். இவர்களில், யாரும் என்னை தோற்கடிப்பதை விரும்பவில்லை. இதற்கு நானும் இடம் கொடுத்து விட மாட்டேன். 

மற்றபடி, உலகின் அதிக வேகத்தில் ஓடும்  சிறுத்தையுடன் போட்டியிட ஆர்வமாக உள்ளேன். சிறுத்தையை வென்றார் போல்ட் என்ற தலைப்புச் செய்தியை காண வேண்டும்.

இவ்வாறு உசைன் போல்ட் கூறினார்.

சினிமாவில்...

உசைன் போல்ட் கூறுகையில்,‘‘ 2016 ஒலிம்பிக் போட்டிக்குப் பின் என்ன நடக்கின்றனது என, பொறுத்திருந்து பார்க்கலாம். சினிமா நடிகராக ஆக மாட்டேன். நான் சிறந்த நடிகர் என்று நினைக்கவில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என, யாருக்கும் தெரியாது,’’ என்றார்.

தடகளம் ஏன்

உசைன் போல்ட் கூறுகையில்,‘‘ எனது தந்தை கிரிக்கெட்டின் தீவிர ரசிகர். இருப்பினும், இவர் தான், எனது 17 வயதில் கிரிக்கெட்டுக்குப் பதில், தடகளத்தை தேர்வு செய்யுமாறு கூறினார். தடகளத்தில் வேகமாக ஓடினால் சாதிக்கலாம். அதேநேரம், ஜமைக்கா தேசிய கிரிக்கெட் அணியில் இடம் பெறுவது அவ்வளவு எளிதல்ல என, எனது மனதை மாற்றினார்,’’ என்றார்.

இந்தியாவில் கிரிக்கெட் மயம்

இந்தியாவில் சிறந்த தடகள நட்சத்திரங்களை உருவாக்க உள்ள வாய்ப்பு குறித்து உசைன் போல்ட் கூறியது:

எனது சிறு வயதில், ஜமைக்காவில் எல்லோரும் கிரிக்கெட் வீரராக வரத்தான் விரும்பினர். இப்போது சிறப்பான தடகள வீரராக விரும்புகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், எல்லாமே கிரிக்கெட் தான். ஜமைக்காவில், எல்லாமே தடகளம் தான். பள்ளிகளில் அதிகளவில் தடகள போட்டிகளை நடத்தினால் தான், சிறந்த நட்சத்திரங்கள் உருவாகலாம்.

இவ்வாறு உசைன் போல்ட் கூறினார்.

போல்ட் அணி வெற்றி

நேற்று உசைன் போல்ட், யுவராஜ் அணிகள் மோதிய 4 ஓவர் கண்காட்சி போட்டி பெங்களூருவில் நடந்தது.

முதலில் களமிறங்கிய யுவராஜ் அணி 58 ரன்கள் எடுத்தது. பின் வந்த உசைன் போல்ட் அணியின் வெற்றிக்கு, கடைசி 2 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டன.  இதில் முதலில் சிக்சர் அடித்தார் போல்ட். அடுத்த பந்து வீணாக, யுவராஜ் அணி வெற்றியை கொண்டாடத் துவங்கியது. ஆனால், போட்டியை நடத்திய அஜய் ஜடேஜா, ‘நோ பால்’ என, அறிவித்து அதிர்ச்சி தந்தார்.

இந்த ‘பிரீ–ஹிட்’ வாய்ப்பில் போல்ட் சிக்சர் அடித்து வெற்றி தேடித்தந்தார். இவர், 19 பந்தில் 45 ரன்கள் எடுத்தார்.

* இதற்கு பதிலடி தரும் வகையில், 100 மீ., ஓட்டத்தில் போல்ட்டை முந்தி, முதலிடம் பெற்றார் யுவராஜ்.

No comments

Powered by Blogger.