Header Ads



முஸ்லிம்களை விடாத சேனாவும்,, முஸ்லிம்கள் தொடாத பேனாவும்...!

(நவாஸ் சௌபி)

மழைவிட்டும் அதன் தூரல் விடவில்லை என்பதுபோல அளுத்கம, பேருவளை, தர்காநகர் சம்பவங்களை அடுத்தும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரத் தேரரின் அறிக்கைகளும் செய்திகளும் இன்னும் முஸ்லிம் சமூகத்தை நோக்கி நீண்டு கொண்டே வருகிறது. இத்தகைய எதிர்ப்புணர்வுகள் இன்னுமொரு ஆபத்தை உருவாக்கிவிடுமோ என்ற உள் அச்சமும் எங்களைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இந்நிலையில் ஞானசாரத் தேரரின் இறுதி அறிக்கையானது கடந்த செவ்வாய்க்கிழமை (02.09.2014) ஆம் திகதி பொதுபலசேனாவின் தலைமையகத்திலிருந்து விடுக்கப்பட்டிருக்கிறது.

'இலங்கை பௌத்தர்களுக்கு எதிராக புத்தகங்கள் அச்சிடப்பட்டு வெளிநாடுகளுக்கு விநியோகிப்பதற்கு இங்குள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது தொடர்பான அனைத்து தகவல்களும் எமக்கு கிடைத்துள்ளன. மேலும் இலங்கையில் பௌத்த பயங்கரவாதம் தலைதூக்கி இருப்பதாகவும் இதனால் முஸ்லிம்கள் அடக்குமுறைக்கு உள்ளடக்கப்படுவதாகவும் பிரசாரம் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன அதற்கு பல்வேறுபட்ட புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன இவையனைத்தும் இங்குள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கும் அத்தோடு மேற்குலக நாடுகளுக்கும் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளும் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.

இது பௌத்த தர்மத்தை பாதுகாப்பதற்கான எமது முயற்சியாகும். இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான ஆக்கிரமிப்புக்களை பௌத்தர்கள் மேற்கொள்ளவில்லை ஆனால் உணவு, பொருளாதாரம், கலை, கலாசாரம், உடைகள் என முஸ்லிம்கள் எம்மை ஆக்கிரமித்துள்ளனர். இதுதான் உண்மை இதற்கு எதிராகவே நாம் போராடுகின்றோம்.'

இதுதான் ஞானசாரத் தேரரின் அறிவிப்பில் உள்ளடங்கியுள்ள சாரம்சமாகும். இதன்படி முஸ்லிம்களின் தனித்துவமான அடையாளங்கள் மீதும் அவர்களின் பொருளாதாரத்தின் மீதும், அவர்களது  நடைமுறை வாழ்வியலில் காணப்படும்  கலாசார விழுமியங்களோடும் தங்களது எதிர்ப்புணர்வுகளை முன்வைக்கும்  பொதுபல சேனா தங்களது செயற்பாடுகளுக்கு பௌத்தத்தை பாதுகாப்பதாக நியாயம் கற்பித்தும் வருகிறது. அதற்காகவே பொதுபலசேனாவை பௌத்த பயங்கரவாத அமைப்பு என்று அழைக்க கூடாது எனவும் அவர்களால் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.  

ஞானசாரரின் கருத்துப்படி பொதுபல சேனா ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல அது பௌத்தத்தை பாதுகாக்கும் அமைப்பு என்றால் அத்தகைய பணியை நிறைவேற்ற அவர்கள் எதற்காக முஸ்லிம் விரோதச் செயல்களை பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் விதைக்க வேண்டும். பௌத்த தர்ம போதனைகளைத்தானே அவர்கள் பரப்பி பிரசாரம் செய்ய வேண்டும். ஒருபோதும் முஸ்லிம்களை அழித்து பௌத்தத்தை புனிதப்படுத்தவோ பாதுகாக்கவோ முடியாது மாறாக பௌத்த தர்மம்படி நடந்து அதன் போதனைகளைப் பரப்புவதன் மூலமே பௌத்தத்தை பாதுககாக்கவும் புனிதப்படுத்தவும் முடியும் என்பதை பொதுபலசேனா அமைப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த நாடு பௌத்த நாடாக இருக்கலாம் அதற்காக இது பௌத்தர்களுக்கு மட்டுமேயான நாடு அல்ல. இந்த அரசாங்கமும் பௌத்தர்களுக்கு மட்டுமேயான அரசாங்கமும் அல்ல. இங்கு மதச் சுதந்திரமும் சகோதரத்துவமும் நிலைநாட்டப்பட வேண்டும். எல்லா மதத்தினரும் இங்கு வாழ முடியும். அந்ததந்த மதங்களின் தனித்துவத்திற்கும் மதவழிபாடுகளுக்கும் இங்கு போதிய சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் மதங்கள் மக்களை ஆக்குவதற்குரியதே தவிர அது மக்களை அழிப்பதற்குரியதல்ல.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் இரண்டாம் அத்தியாயம் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

'இலங்கை குடியரசில் பௌத்த மதத்துக்கு முதன்மைத் தானம் வழங்கப்படுதல் வேண்டும் என்பதேர்டு, அதற்கிணங்க 10 ஆம், 14(1) (உ) ஆம் உறுப்புரைகளால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை எல்லா மதங்களும் காப்புறுதி செய்யும் அதேவேளையில் பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் பேணிவளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தலும் வேண்டும்.' 

இதன்படி அரசின்; மதம் பௌத்தமாக இருந்தாலும் இங்குள்ள ஏனைய மதங்கள் மீது அரசு கொண்டிருக்க வேண்டிய தார்மீகப் பொறுப்புக்களையும் மேலே கூறப்பட்டுள்ள 10 ஆம், 14(1) (உ) ஆம் உறுப்புரைகள் தெளிவாக குறிப்பிடுகின்றன.

10. ஆளொவ்வொருவரும், தான் விரும்பும் மதத்தை அல்லது நம்பிக்கையை உடையவராயிருத்தற்கான அல்லது மேற்கொள்ளுவதற்கான சுதந்திரமுற்பட, சிந்தனை செய்யும் சுதந்திரம், மனச்சாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம், மத சுதந்திரம் என்பவற்றுக்கு உரித்துடையவராதல் வேண்டும். 

14. (1)-(உ). தனியாக அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து, பகிரங்கமாக வேனும் அந்தரங்கமாகவேனும் தனது மதத்தையோ அல்லது நம்பிக்கையையோ வழிபாட்டிலும், அனுசரிப்பிலும், சாதனையிலும், போதனையிலும் வெளிக்காட்டுவதற்கான சுதந்திரம். 

இதற்கு மேலாக 12 (2) ஆம் உறுப்புரையானது... இனம், மதம், மொழி, சாதி, பால் அரசியற் கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக அல்லது அத்தகைய காரணங்களுள் எந்த ஒன்று காரணமாகவும் எந்தப் பிரசைக்கும் ஓரங்காட்டுதல் ஆகாது. எனவும் தெளிவாக குறிப்பிடுகிறது.

இதன்படி முஸ்லிம்கள் மீது ஞானசாரத் தேரர் குறிப்பிட்டுக் கூறும் விடங்களான உணவு, பொருளாதாரம், கலை, கலாசாரம், உடைகள் என முஸ்லிம்கள் எம்மை ஆக்கிரமித்துள்ளனர் இதுதான் உண்மை இதற்கு எதிராகவே நாம் போராடுகின்றோம் என்ற குற்றச்சாட்டானது இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணானதும் எதிரானதுமாகும்.

ஆனால் இலங்கை முஸ்லிம்கள் எச்சந்தர்ப்பத்திலும் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புக்கு மாற்றமாக செயற்பட்டவர்கள் அல்;ல. அவர்கள் இந்த நாட்டின் இறமையிலும் சுதந்திரத்திலும் சமாதானத்திலும் என்றும் பொறுமையுடனும் பெருமையுடனும் கைகோர்த்து நிற்பவர்கள் என்பதை ஞானசாரத் தேரர் அறியாவிட்டாலும் இந்த நாட்டின் சகோதர சமூகங்கள் உணர்வார்கள்.

மேலும், முஸ்லிம்கள் மீது மேற்படி குறைகளை அல்லது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் பொதுபலசேனா நாட்டில் இயங்கும் அரசுடன் அல்லது சட்டத்துடன் அனுகி அதற்கான தீர்வுகளை காண முற்பட வேண்டும். அவ்வாறான ஒரு ஜனநாயகம் இல்லாமல் தானே அரசாகவும் தன்னிடமே சட்டம் இருப்பதாகவும் நடந்துகொள்வது முஸ்லிம் சமூகத்தை மட்டும் அல்லாது இந்த நாட்டின் இறமையையும் கலங்கப்படுத்தியே வருகிறது. அத்துடன் அது பௌத்த தர்மத்தின் புனிதத்தையும் மாற்று சமூத்தினுள் குறையாக நோக்க வைத்திருக்கிறது.

பொதுபல சேனா பௌத்த பயங்கரவாத அமைப்பு என்று நூல்கள் முஸ்லிம்களால் அச்சிடப்படுகிறது என்றால் இன்றைய சூழலில் இலங்கையில் வெளிவருகின்ற சிங்கள அச்சு மற்றும் இணைய ஊடகங்களில் இதுபோன்ற கருத்துக்களை சிங்கள எழுத்தாளர்கள் எழுதவில்iயா? பொதுபல சேனா குறித்து சிங்கள சமூக புத்தி ஜீவிகள், இடதுசாரி போக்குடைய தலைவர்கள், சகோதர உணர்வுள்ள அரசியல்வாதிகள் இதுவரை எதைப் பேசியுள்ளார்கள் எவ்வாறு எழுதியுள்ளார்கள் என்பதை ஞானசாரத் தேரர் தேடிப் படிக்க வேண்டும். இந்த எழுத்துக்கள் முஸ்லிம்கள் மீது பொதுபலசேனா அபாண்டமாக குற்றம் சுமத்துவதையும் போர்தொடுப்பதையும் ஜனநாயகத்தோடு பேசுகின்றன. 

இதுஇவ்வாறு இருக்க, ஞானசாரத் தேரர் தனக்கு உயிர் ஆபத்து இருப்பதாகக் கூறி ஒரு கைத் துப்பாக்கியும் 50 தோட்டாக்களும் தருமாறு பாதுகாப்புச் செயலாளரிடம் விண்ணப்பித்த சம்பவமானது பொதுபலசேனாவை  ஆச்சரியமாகப் பார்க்க வைத்திருந்தது. இதன்படி ஒரு பௌத்த தேரர் அல்லது மதகுரு என்ற உயர்ந்த கௌரவத்திலிருக்கும் ஒருவர் தனக்கு துப்பாக்கி ஒன்றைத் தருமாறு பகிரங்கமாக கேட்டிருந்த கதை அவ்வாறே இருக்க முஸ்லிம் தீவிரவாதத்தினை அவர் பேசி வருவது எந்தவகையில் நியாயமாகும்.  

ஞானசாரத் தேரர் குறிப்பிடுவது போன்று இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் அல்லது அடிப்டைவாதம் உருவாகி அது பௌத்த மதத்தை அழித்துவிடும் என்ற அச்சமும் ஆபத்தும் இருக்குமானால் இங்கு இரண்டு விடயங்கள் தெளிவாக ஏற்பட்டிருக்க வேண்டும்.

1. இன்று இலங்கை முஸ்லிம்களால் பகிரங்கமாகவோ அல்லது மறைமுகமாகவோ பௌத்தர்களுக்கும் பௌத்த மதத்திற்கும் அச்சுறுத்தல்களும் அடக்குமுறைகளும் நடைபெற்றிருக்க வேண்டும்.  

2. அதற்காக இலங்கையில் உள்ள அனைத்து பீடங்களையும் சேர்ந்த மகாநயாக்கர்களுடன் இணைந்து ஒட்டுமொத்த பௌத்த பிக்குகளும் பௌத்தத்தைக் காப்பாற்றுவதாகக் கூறும் பொதுபல சேனாவுடன் இணைந்து போராட வந்திருக்க வேண்டும்.

இது இரண்டும் இல்லாத நிலையில் இலங்கையில் பௌத்தத்தை அழிப்பதற்காக முஸ்லிம் தீவிரவாதமும் அடிப்படைவாதமும் செயற்பாடுகிறது என்று ஞானசாரத் தேரர் குறிப்பிடுவது வெறும் கட்டுக்கதையே தவிர அதில் ஆதார பூர்வமான உண்மை எதுவுமில்லை. 

இன்னும் இதை வெளிப்படையாகச் சொன்னால்;, பொதுபல சேனா கூறுவது போன்று எந்த முஸ்லிம்கள் எந்தப் பண்சாலையை இடித்திருக்கிறார்கள்? எந்த அரச மரத்தை வெட்டி இருக்கிறார்கள், எந்த புத்தர் சிலையை வைக்க வேண்டாம் என்று தடுத்திருக்கிறார்கள்? என்பதற்கு ஞானசாரத் தேரர் எந்த ஆதாரத்தை முன்வைக்க முடியும்? ஆனால் முஸ்லிம்களின் விடயத்தில் பொதுபல சேனா இதுவரை மேற்கொண்ட ஹலால், அபாய், மீள் குடியேற்றம், பள்ளிகள் மீதான அடக்குமுறைகள் என்று எத்தனையோ விடயங்களை எங்களால் முன்வைக்க முடியும்.

எனவே முஸ்லிம்களுக்குள் இல்லாத தீவிரவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் பொதுபல சேனா, தாமே உருவாக்கி, முஸ்லிம்களைப் பயங்கராவாதிகளாகவும் சித்தரித்து அதன் மூலம் முஸ்லிம்களை அழித்து அதிலிருந்து பௌத்தத்தைப் பாதுகாப்பதாக கதை சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்தக் கதைக்கு அரசாங்கமும் தனது ஒரு பக்க காதை கொடுத்து வைத்திருக்கிறது. 

1 comment:

  1. எல்லாம் சரி நாமும் அவர்களின் கையிலுள்ள ஆயுதங்களை அவர்களுக்குள்ளேயே திருப்பி விட பார்ப்போம். பொது பலசேனவை பெளத்தர்கள்தான் விரட்டியடிக்க வேண்டும். அதேபோல கேடுகெட்ட சர்வாதிகாரிகளின் ஆட்சியின் பிடியில் மக்கள் சிக்குண்டிருப்பதை சாதாரண பெளதர்கள் உணரும்வரை நாடு இன்று கொண்டிருக்கும் பிரச்சினைகளிலிருந்து தீர்வு கிடைக்காது. ஆகவே எல்லாம் பெளத்தர்களின் கையில் அதிகமாக உள்ளது. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டுமென்பதுதான் இன்றைய தேவை.

    ReplyDelete

Powered by Blogger.