ஒரு தாயின் கண்ணீரும், மகனும் தன்னம்பிக்கையும்..!
பிரேசிலில் 37 வயதான ஒருவருக்கு கை, கால்கள் வளைந்து தலை பின்னோக்கி திரும்பிய நிலையில் உள்ளது. இத்தனை குறைபாடுகளுடன் இருந்தாலும், தான் ஒரு உலக புகழ்பெற்ற பேச்சாளராக வர வேண்டும் என்ற ஆர்வத்துடன் அவர் செயல்பட்டு வருகிறார்.
பிரேசில் நாட்டில் மான்டி சான்டோ நகரை சேர்ந்தவர் கிளாடியோ வியர்ரா டி ஒலியர்ரா (37). இவர், பிறக்கும் போதே கால்கள் மோசமாக வளைந்த நிலையில் இருந்தன. அவரது கைகளும் நெளிந்து பலமற்று இருந்தன. அவரது கழுத்து பின்னோக்கி வளைந்து, தலை முற்றிலும் திரும்பிய நிலையில் இருந்தது. குழந்தையின் குறைபாடுகளை மருத்துவத்தினால் ஓரளவு குணப்படுத்த முடியும் என கிளாடியோவின் தாய் மரியா ஜோஸிடம் டாக்டர்கள் கூறினர். அந்த நம்பிக்கையில் மகன் கிளாடியோவை வளர்க்க தொடங்கினார் மரியா.
உடலில் ஏகப்பட்ட குறைபாடுகள் இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் வணிகவியல் துறையில் பல்கலைக்கழக பட்டம் பெற்றார் கிளாடியோ. இருப்பினும், தலைசிறந்த பேச்சாளராக மாற வேண்டும் என்பதே அவரது விருப்பமாக உள்ளது. இதுதொடர்பாக கிளாடியோ கூறும் போது, சிறுவயதில் இருந்தே என்னை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வேன். மற்றவர்களை சார்ந்திருக்க எப்போதும் விரும்பியதில்லை. டி.வி., கம்ப்யூட்டரை ஆன் செய்ய, செல்போனை எடுக்க பயிற்சிகள் மேற்கொண்டேன். நானும் மற்றவர்களை போல சாதாரண மனிதன்தான். பல்வேறு பிரச்னைகள் குறித்து மக்களுடன் கலந்துரையாடி தீர்வு காண்பதில் விருப்பம் அதிகம். தங்கள் நாட்டுக்கு வந்து பேசுமாறு எனக்கு ஏராளமான அழைப்புகள் வருகின்றன. மிக விரைவில் உலக பேச்சாளராக வலம் வருவேன்‘ என்றார்.
கிளாடியோவின் தலை தலைகீழாக திரும்பி உள்ளதால் மூச்சு விடுவதற்கும் சாப்பிடுவதற்கும் பல்வேறு பயிற்சிகள் மேற்கொண்டார். 8 வயது முதல் தனது கால்முட்டியினால் நடக்கவும் பழகி கொண்டார். தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் செல்லும் போது, கிளாடியோ தனது கால்முட்டியினால் வேகமாக நடந்து அசத்துகிறார். மற்றவர்களை சார்ந்திராமல் தனது பணிகளை அசத்தலாக செய்து கொண்டிருந்தாலும், அவரது உடல் குறைபாடுகளை குணப்படுத்த முடியாது என்று டாக்டர்கள் கூறுகின்றனர். இது மிகவும் கவலை அளிப்பதாக கூறி கண்ணீர் வடிக்கிறார் கிளாடியோவின் தாய்.

Post a Comment