தவ்ஹீத் ஜமாஅத்தின் பேரணியில் பொதுபலசேனாவினரை தடுத்துநிறுத்திய பொலீசாருக்கு நன்றி..!
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தினரின் ஊர்வலத்திற்குள் அத்துமீறிய பொதுபலசேனாவினரை தடுத்து நிறுத்திய பொலீசாருக்கு நன்றி தெரிவிக்கின்றார் ஹுனைஸ் பாறூக் எம்.பி
இந்த நாட்டின் பிரஜைகள் அனைவருக்கும் இந்த நாட்டில் விரும்பிய இடத்தில் கூட்டம் நடாத்துவதற்கும் ஊர்வலம் செல்வதற்றும் சட்டத்தில் அனுமதியிருந்த போதும் இஸ்ரேல் காசாவில் நடாத்தும் மனிதப் படுகொலைகள், மனிதாபிமான மற்ற செயல்களுக்கெதிராக ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த கண்;டன ஊர்வலத்திற்கு பொலீஸார் அனுமதி வழங்கிய போதும் பொதுபலசேனா என்ற அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் தலைமைக்காரியாலயம் அமைந்துள்ள மாளிகாவத்தைப் பகுதிக்குச் சென்று ஊர்வலம் செய்யக் கூடாது என்றும் இந்த ஊர்வலத்தைக் கைவிடுமாறும் கூறியுள்ளனர்.
இலங்கை சட்டத்தில், சட்டம் அனுமதியளித்துள்ள ஓர் நிகழ்விற்கு பொலீசார் ஒத்துழைப்பு வழங்கியுள்ள போதிலும் இதை செய்யமுடியாது என்று கூறி இச்செயற்பாட்டை தடுத்து நிறுத்த முனைந்த பொதுபல சேனாவினது செயற்பாடு நாட்டின் சட்டம், ஒழுங்கு என்பவற்றில் கைவைக்கின்ற நிலைக்கு மாறியுள்ளது. பொதுபலசேனாவின் இவ்வாறான செயற்பாட்டை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். மேலும் இவர்களது இவ்வாறான நடவடிக்கை தொடருமானால் இந்த நாட்டின் எதிர்காலமும் இந்த நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை மக்களினதும் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும். எனவே பொதுபலசேனாவின் இவ்வாறான மிலேச்சத்தனமான நடவடிக்கையை அரசு நிறுத்துவதோடு இவர்களின் பயணத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தினரால் நடாத்தப்பட்ட ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கியதுடன், இவ்ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்த முயன்ற பொதுபலசேனாவினரை ஊர்வலப் பகுதிக்குள் அனுமதிக்காது அவர்களைத் திருப்பியனுப்பியதுடன் ஊர்வலக்காரர்களுக்கு பாதுகாப்பும் வழங்கிய காவல் துறையினருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, தொடர்ந்தும் இந்த நாட்டின் சட்டம் ஒழுங்கு என்பவற்றைப் பாதுகாப்பதில் கூடிய கவனத்துடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

Thank you so much Hon. Minister Mr.Hunais MP
ReplyDelete