பஸ்ஸுக்குள் படமெடுத்த பாம்பு, பயணிகள் ஓட்டம் - அம்பலாங்கொடையில் சம்பவம்
பஸ்ஸில் பயணித்த பாம்பாட்டி தூங்கியபோது கூடையிலிருந்து பாம்பு வெளியில் வந்து படமெடுத்து ஆடியதால் பயணிகள் களேபரம் அடைந்து பஸ்ஸிலிருந்து அலறியடித்துக்கொண்டு குதித்தொடிய சம்பவமொன்று தென்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அம்பலாங்கொடையிலிருந்து காலி நோக்கிச் சென்ற பஸ்ஸொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த பஸ்ஸில் குரங்கு ஒன்றுடன் பாம்பு அடைக்கப்பட்ட கூடையுடன் இடைவழியில் ஏறிய பாம்பாட்டி, பஸ்ஸின் பின் ஆசனத்தில் அமர்ந்து அயர்ந்து நித்திரையில் இருந்தபோது கூடைக்குள் இருந்த பாம்பு வெளியே வந்து சாரதியின் ஆசனத்திற்கு பின்னால் வந்து படமெடுத்து ஆடத்தொடங்கியுள்ளது.
இதனைக்கண்ட பயணிகள் பெரும் களேபரம் அடைய சாரதி பஸ்ஸை நிறுத்தியுள்ளார். இவ்வேளையில் அச்சத்தால் பயணிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு பஸ்ஸிலிருந்து குதித்து ஓடத்தொடங்கியுள்ளனர்.
இவ்வேளையில் தனது கூடையிலிருந்த பாம்பு வெளியில் வந்ததால் பிரச்சினை ஏற்பட்டதை அறிந்த பாம்பாட்டி பஸ்ஸுக்குள் பாம்பைத் தேடிய போது அந்த பாம்பு பஸ்ஸுக்குள் இருந்து வெளியே சென்று காணாமல் போய்விட்டது.
பாம்பு காணாமல் போன சோகத்தில் அதே பஸ்ஸில் அந்த பாம்பாட்டி காலி பஸ் நிலையம் வரை சென்றுள்ளார். tl
.jpg)
Post a Comment