Header Ads



கள்ளத்தனமாக வெளிநாடு செல்ல விரும்புபவர்களின் கனிவான கவனத்துக்கு...

(MM)

குடியுரிமை அதிகாரிகளிடம் விசா பெறாமல் கள்ளத்தனமாக வெளிநாடுகளுக்கு சென்று, அங்கே வேலை தேடிக் கொண்டு வாழ நினைக்கும் நபர்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகின்றனர்.

கடலின் ஆர்ப்பரிக்கும் பேரலைகளுக்கு இடையில் கள்ளத்தோணியில் பயணம், சரக்குப் பெட்டகத்தில் (கண்டெய்னர்) நாள் கணக்கில் அடைபட்டு கிடப்பது போன்ற ஆபத்துகளைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், ‘செல்வ வளம் மிக்க மேற்கத்திய நாடுகளுக்கு சென்று விட்டால் போதும். நாம் எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம்’ என்று இவர்கள் கருதுகிறார்கள். 

இவர்களின் சட்டமீறலான ஆசையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ‘பேக்’ செய்து அனுப்புவதற்கென்றே உலகம் முழுவதிலும் சில மனித பார்சல் சர்வீஸ்கள் இயங்கி வருகின்றன.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சரக்குகளோடு, மனித உயிர்களையும் மலிவு விலை சரக்காக ஒரு கண்டெய்னரில் அடைத்து, எந்த நாட்டுக்கு அந்த சரக்கு பெட்டகம் போய் சேர்கிறதோ., அங்குள்ள துறைமுக அதிகாரிகளை சரிகட்டி, கப்பல் மூலம் இவர்களை வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லும் கும்பல்கள், அதற்காக பயனாளிகளிடம் இருந்து மிகப்பெரியத் தொகையை கறந்து விடுகின்றன. 

புதிய-வசதியான வாழ்க்கைக்கான உத்திரவாதம் இருப்பதாக நம்பி, இந்த கள்ளப்பயணத்துக்காக ஏராளமான பணத்தை கொட்டியழும் பேராசைக்கார பேர்வழிகள், ‘போய் சேரும் வரை தங்களது உயிருக்கு உத்திரவாதம் உள்ளதா..?’ என்பதை சிந்திக்க மறந்து விடுகின்றனர். 

இதே பாணியில், ஆப்கானிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினத்தவராக வாழ்ந்து வரும் 15 சீக்கிய குடும்பங்களை சேர்ந்த 12 வயதுக்குட்பட்ட 13 குழந்தைகள், 8 பெண்கள் உள்பட மொத்தம் 35 பேர் பெட்டகம் ஒன்றில் அடைக்கப்பட்டு கப்பல் மூலம் ஐரோப்பாவுக்கு கடத்தப்பட்டுள்ளனர். 

பிரிட்டைனின் எஸ்ஸெக்ஸ் பகுதியில் உள்ள டில்பரி துறைமுகத்துக்கு கப்பல் வந்து சேருவதற்குள் சுமார் 18 மணி நேரம் காற்று நுழைய வழியில்லாத அந்த இரும்பு பெட்டகத்தில் மூச்சுத்திணறிய அந்த சீக்கிய குடும்பத்தினர், எப்படியாவது தப்பிப் பிழைத்து வெளியே சென்று விட்டால் போதும் என்ற எண்ணத்தில் பெட்டகத்தின் சுற்றுச்சுவரை தட்டி, ஓசை எழுப்பினர்.

இதற்கிடையே, சுவாசிக்கவும் வழியின்றி, பருகவும் நீரின்றி மிகவும் சோர்ந்துப் போய் இருந்த அவர்களில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் மூச்சுத்திணறி இறந்து விட, மிச்சமிருந்த 34 பேருக்கு மரண பயம் தொற்றிக் கொண்டது. ‘வாழ்வா..? சாவா..? பார்த்து விடலாம்’ என்ற தன்னம்பிக்கையுடன் அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி அந்த கண்டெய்னரின் உள்புற இரும்பு சுவரை தொடர்ந்து ஓங்கி அடித்ததில், வெளியே துறைமுக அதிகாரி ஒருவர் காதில் அந்த சத்தம் லேசாக விழுந்துள்ளது. 

இதனையடுத்து, சத்தம் வந்த கண்டெய்னரை அடையாளம் கண்டுபிடித்து, திறந்துப் பார்த்தபோது, வியர்வை வெள்ளத்தில் மிதந்தபடி 34 மனித உயிர்கள் சுமார் 18 மணி நேரம் நடத்திய ஜீவ-மரண போராட்டத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் உயிர் பறிபோனது தெரிய வந்தது. 

உடனடியாக, எஞ்சியிருந்த 34 பேரையும் ஆஸ்பத்திரியில் அனுமதித்து, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதில் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். 

இருப்பினும், காற்றில்லாத அந்த இருண்ட கண்டெய்னருக்குள், குடிக்க நீரின்றி நாக்கு வறண்ட நிலையில் கதறிய குழந்தைகளின் அவலக்குரல் இன்னும் அவர்களது காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருப்பதாக மீட்கப்பட்டவர்களில் வயது முதிர்ந்த ஒரு சீக்கியர் தெரிவித்தார். 

இவர்கள் அனைவரும் தாங்களாகவே விரும்பி முன்வந்து அந்த இரும்புச் சிறையை ஏற்றுக் கொண்டனரா? அல்லது, வெளிநாடுகளில் இருக்கும் பெரும் செல்வந்தர்களுக்கு கொத்தடிமைகளாக விற்பதற்காக கடத்தப்பட்டார்களா? என்பது தொடர்பாக பிரிட்டைன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எது, எப்படியோ..? ‘வயிற்றுப் பிழைப்பு’ என்ற ஒற்றை நோக்கத்துக்காக, விலை மதிப்பே இல்லாத மனித உயிர்களை பணயம் வைத்து, இதைப் போன்ற ஆபத்தான பயணங்களை மேற்கொள்பவர்களை ஊக்குவிக்கும் தரகர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்பதே மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

1 comment:

  1. Many Srilankans try to go foreign countries because of the dirty politics exists in SL. Eventhough, I agree the dangers involved in this situation, we need to ask ourselves what motivates this to start with.A country without human rights! what else they can do?1% population enjoying cricket and drink beer and 1 more % visiting foreign countries for nothing with peoples' money while 98% starving for the daily meals! AAyu bowan.

    ReplyDelete

Powered by Blogger.