இலங்கைக்கு ஒரு நரேந்திர மோடி தேவை - ராவணா சவிய
நரேந்திர மோடி போன்று உறுதியான பிரதமர் ஒருவர் இலங்கைக்குத் தேவை என்று ராவணா சவிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் பௌத்த இனவாத சிந்தனைகளைப் பரப்பும் நோக்கில் நாளுக்கு நாள் புதுப்புது அமைப்புகள் உருவெடுத்து வருகின்றன. அந்த வகையில் ஏற்கெனவே உள்ள பொதுபல சேனா, ராவணா பலய, சிங்கள ராவய, ஹெல உறுமய அமைப்புகளுடன் தற்போது புதிதாக ராவணா சவிய என்றொரு அமைப்பும் சேர்ந்து கொண்டுள்ளது.
இந்த அமைப்பு தனது வருகையை அறிவிக்கும் நோக்கில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்தியாவின் பிரதமராக இருக்கும் மோடி உறுதியானவர். வரலாறு பற்றி நன்கு அறிந்த, வரலாற்றை நேசிப்பவர். இந்திய கலாசாரம், மக்கள் விருப்புகள், மரபுகளை நன்கு அறிந்தவர். நாட்டுப் பற்று மிக்கவர். அவரைப் போன்ற ஒருவர் இலங்கைக்கும் பிரதமராக வரவேண்டும்.
ஆனால் இலங்கையின் இன்றைய பிரதமர் டி.எம்.ஜயரட்னவுக்கு வரலாறு குறித்து அறவே தெரியாது. எமது இலங்கையின் பாரம்பரியப் பெருமைக்கு உரித்தான இராவணன் குறித்து, அவன் சீதையைக் கடத்தி வந்தவன் என்று அபாண்டம் சுமத்துகின்றார். ஆனால் இது வால்மீகி இராமாயணத்தின் பொய்யாக இட்டுக்கட்டப்பட்ட கதையாகும்.
மேலும் பௌத்த மதத்தின் கிழக்குப் பிராந்திய காவலன் இராவணன் என்பது புராண இதிகாசங்களின் வாயிலாக அறியக் கிடைத்துள்ள தகவல்களாகும்.
இவ்வாறான நிலையில் சர்வ மத நல்லிணக்கம் என்ற போர்வையில் இலங்கையில் சிங்களவர்களின் பாரம்பரிய பெருமைக்குரிய வரலாற்றை கொச்சைப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். இந்தச் செயல்களுக்கு துணை போகும் பிரதமர் டி.எம்.ஜயரட்ன, பிரதமர் பதவிக்குப் பொருத்தமற்றவர் என்பதையும் வலியுறுத்திக் கொள்கின்றோம் என்றும் அந்த ஊடக அறிக்கை வாயிலாக ராவணா சவிய அமைப்பு தெரிவித்துள்ளது.

Post a Comment