Header Ads



'பாரூக்' என்ற அருமையான பாத்திரம் மீது நான் வெகுவாக அன்பு காட்டுகிறேன் - சஜித் பிரேமதாஸ

கேகாலை மாவட்டத்தின் றுவன்வெல்ல, கன்னத்தொட்ட பிரதேசத்தில் இடதுசாரி அரசியல் சார்ந்த குடும்பத்தில் பிறந்து தமது சிறு பராயத்திலிருந்தே ஐ.தே.க. அரசியலை அரவணைத்த யு.எல்.எம்.பாரூக் என்ற அருமையான பாத்திரம் மீது நான் வெகுவாக அன்பு காட்டுகிறேன். அவருடைய போலியற்ற கிராமியத் தன்மையினால் அந்தச் சரிதைக்கு பெறுமானம் சேர்த்துள்ளதாக நான் கருதுகின்றேன். 

1956ஆம் ஆண்டு முதன் முறையாக பாராளுமன்றத் தேர்தலொன்றுக்கு நியமனப் பத்திரம் தாக்கல் செய்த, காலஞ் சென்ற எனது தந்தை போட்டியிட்டது இடதுசாரிகளின் பலமான கோட்டையாக இருந்தது ருவன்வெல்ல தேர்தல் தொகுதியாகும். டட்லி சேனாநாயக்க அவர்களுக்கு உரித்தான நாரங்கல தோட்டத்துக்குச் சென்று அவருடன் பழகும் வாய்ப்பினைப் பெற்ற பிரதேசத்தைச் சேர்ந்த பாரூக் என்ற இளைஞர் ஐ.தே.க. அபேட்சகரான ஆர்.பிரேமதாஸவை முதலில் சந்தித்தது ஹேமபால தசநாயக என்றவரின் வீட்டிலாகும். பிற்காலத்தில் இவர் சப்ரகமுவ மாகாணத்தில் முதலாவது தவிசாளராகிறார். 

எனது தந்தைக்கு இவ்விருவரும் எவ்வளவு நெருக்கமானவர்கள் என்றால் ருவன்வெல்ல தொகுதியின் கட்சி நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்களாக ஹேமபால தசாநாயக்க அவர்களுக்கும், அப்போது 12 வயதினை உடைய யு.எல்.எம்.பாரூக்கிற்கும் ஒப்படைக்கப்படுகின்றது. தேர்தலின் தோல்வியின் பின் ருவன்வெல்ல அமைப்பாளரான பி.சி.இம்புலானவுடன் 1960 மார்ச் ஜூலை தேர்தல்களில் மிக செயற்திறனுடன் இயங்கினார். 60 மார்ச் தேர்தலில் வெற்றி பெற முடியாது போனாலும், ஜூலை தேர்தலில் பி.சி. இம்புலான முதன்முறையாக ருவன்வெல்லத் தொகுதியை ஐ.தே.க.வுக்குப் பெற்றுக் கொடுத்தார். 1962இல் இம்புலான அவர்கள் தனது அந்தரங்கச் செயலாளராக யு.எல்.எம்.பாரூக் என்ற இளைஞரை நியமிக்கும் போது அவருக்கு வயது 21. 1965 பொதுத் தேர்தலில் ருவன்வெல்லத் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்ற இம்புலான டட்லி சேனாநாயக்க அரசின் விவசாய உணவுப் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டார். 

யு.எல்.எம்.பாரூக் என்ற செயற்திறன் மிகு இளைஞர் தீவிர அரசியலுக்குள் பிரவேசிப்பதில் இற்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன் 1964ஆம் ஆண்டு நெகொடகொட பத்வே கிராம சபைக்கு ஐ.தே.க. சார்பில் போட்டியிட்டார். லங்கா சமசமாஜக் கட்சியில் போட்டியிட்ட தனது சகோதரரை தோல்வியுறச் செய்து வெற்றி பெற்ற பாரூக் என்ற இளைஞர் அன்று முதல் கிராம சபை முறை இல்லாமல் செய்யும் வரை மக்கள் பிரதிநிதியாக தொடர்ந்து செயற்பட்டார். 

1980இல் கேகாலை மாவட்டத்தில் பிரதேச சபை உறுப்பினராக இவர் தெரிவு செய்யப்பட்டார். 1988இல் ருவன்வெல்லையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பி.சி.இம்புலான அவர்கள், மாகாண ஆளுநராக நியமனம் பெற்ற பின் ருவன்வெல்லத் தொகுதியில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு ருவன்வெல்ல தொகுதி வலமண்டல அங்கத்தவரிடையே விருப்பத்தைப் பெற்று அமைப்பாளரைத் தெரிவு செய்தது விஷேட நிகழ்வாகும். தகைமை இருக்கும் 27 பேருக்கிடையே அப்போதைய ஐ.தே.க. பொதுச் செயலாளர் ரஞ்சன் விஜேரத்ன அவர்களால் நடாத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் கூடுதலான வாக்குகள் இவருக்கே கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. அந்த 27 பேர்களில் ஒரே முஸ்லிம் அபேட்சகரும் இவரேயாவார். பாரூக் அவர்களது 47ஆவது பிறந்த தினத்தன்று அவர் பாராளுமன்ற உறுப்பினரான சத்தியப் பிரமாணம் செய்து கொண்டது ஒரு விஷேட நிகழ்வாகும். இவர் கேகாலை மாவட்டத்தில் முதலாவது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்று வரலாற்றில் பதிவாகிறார். இவர் 1989 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 38,857 விருப்பு வாக்குகளைப் பெறும் போது ருவன்வெல்லையில் மட்டும் 23 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தார். ருவன்வெல்லைத் தொகுதியில் அப்போது பதிவு செய்யப்பட்டிருந்த 49,325 வாக்குகளில் முஸ்லிம்களது விகிதாசாரம் மூன்று சதவீதம் மட்டுமே என்பது இதில் விஷேட அம்சமாகும். 

1989ஆம் ஆண்டு பதவியேற்ற, ஐ.தே.க. அரசின் போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி பிரேமதாஸாவில் நியமிக்கப்பட்டார். அப்போதைய போக்குவரத்து அமைச்சர் விஜயபால மெண்டிசின் கீழ் பாரூக் சிறப்பாகப் பணி புரிந்தார். இலங்கை போக்குவரத்துச் சபை மக்கள் மயப்படுத்தப்பட்டு மறுசீரமைக்கும் பணியில் பாரூக் ஆற்றிய பணி இன்றும் பாராட்டப்படுகின்றது.

இனப்பிரச்சினை காரணமாக சீர்குலைந்திருந்த வடகிழக்கின் போக்குவரத்துச் சேவையை சாதாரண நிலைக்குக் கொண்டுவரும் பாராதூரமான பொறுப்பு ஜனாதிபதியினால் அமைச்சர் பாரூக்கிற்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. வவுனியா, இரட்டைப் பெரியகுளத்தில் புகையிரத நிலையமொன்றை அமைப்பதில் இவர் முக்கிய பங்காற்றினார். வடகிழக்குப் பிரதேசங்களில் பஸ் டிப்போக்களை மீண்டும் திறக்க வைத்து பஸ் சேசவைகளை மீண்டும் ஆரம்பிக்க இவர் பெரும் முயற்சியெடுத்தார். 

அடுத்து நடைபெற்ற 1994ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐ.தே.க. அரசு தோல்வியுற்றாலும் மாவட்டத்தில் யு.எல்.எம்.பாரூக்கின் விருப்பு வாக்கு 47,765ஆக அதிகரித்திருந்தது. 2001ஆம் ஆண்டு பதவியேற்ற ஐ.தே.க. அரசு இலங்கை மத்திய போக்குவரத்துச் சபை மற்றும் ஜேர்மன் தொழில்பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் தலைவராக நியமிக்கப்பட்டார். இப்பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட முதல் முஸ்லிம் இவராவார். 

அரசியல் அதிகாரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சாரத்தையும், பனியனையும் அணிந்து கொண்டு சாதாரண மக்கள் மத்தியிலே எண்மையாக வாழும் பாரூக், இனங்களிடையே சமாதானம், நல்லிணக்கம், சகவாழ்வு என்பவற்றை உறுதிப்படுத்திய ஒரு கண்ணாடி போன்றவராவார். யு.எல்.எம்.பாரூக் மன்றத்தினூடாக ஒன்பது வருடங்களாக அவராற்றிய சமூகப் பணிகள் விசாலமானவை. குறிப்பாக கடந்த பல வருடங்களாக ரணசிங்க பிரேமதாச வருடாந்த நினைவு தினத்திற்கு சமாந்தரமாக அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தம் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சித் தொடர்கள் ஒரு வகையிலும் தவறுவதில்லை. 

ஒருமுறை வறுமைப்பட்டோருக்கு ஆயிரம் அரிசிப் பைகளை விநியோகித்த அவர், மற்றொரு சந்தர்ப்பத்தில் அங்கவீனர்களுக்கு நிதியுதவி அளித்தார். மற்றொரு சந்தர்ப்பத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்குப் பொதிகளை வழங்கிய அவர், இன்னொரு சந்தர்ப்பத்தில் 3000 பேருக்கு மூக்குக் கண்ணாடிகளை வழங்கினார். அங்கவீனர்களுக்கு வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து பணம் வைப்புச் செய்தல், முதியோர் இல்லங்களுக்கு உபகரணங்கள் வழங்குதல், பாடசாலை மற்றும் தர்மப் பாடசாலைகளுக்கு தளபாடம் வழங்குதல் போன்ற பல சமூக சேவைகள் அவரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறான அழகிய குணநலன்களுக்காக இவர்கள் பாராட்டப்படவேண்டும். ஐந்து தசாப்தங்களாக அமைதியாக மக்கள் பணிபுரிந்த எமது யு.எல்.எம்.பாரூக் என்ற முன்மாதிரி மிகு அரசியல் வாதிக்கு எமது இதயம் கனிந்த கௌரவத்தைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். யுகபெரலியக, துங்கோரலே அபிமாணய என்ற தலைப்புடனான அவரது வாழ்க்கைச் சரிதை நூல் அவரது முன்மாதிரி மிகு வாழ்க்கை இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லுமென நான் கருதுகின்றேன். அல்ஹாஜ் யு.எல்.எம்.பாரூக் அவர்கள் சுகதேகியாக நீண்ட காலம் வாழ பிரார்த்திக்கின்றேன். 

சஜித் பிரேமதாஸ, அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர்    

1 comment:

  1. very fascinating story of Alhaj Farook, a apolitician dedicated for the people without expecting anything in return.

    ReplyDelete

Powered by Blogger.