Header Ads



பாகிஸ்தான் எம்.பி.க்களை சிறைபிடிக்குமாறு உத்தரவு

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் மதகுரு தாஹிர் உல் காத்ரி தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்து இஸ்லாமாபாத்தில் முகாமிட்டுள்ளார். நவாஸ் பதவி விலகும்வரை ஓயமாட்டேன் என்றும் எச்சரித்துள்ளார். 

இதேபோன்று எதிர்க்கட்சியான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கானும் லாகூர் நகரில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் பேரணியாக சென்று இஸ்லாமாபாத்தை முற்றுகையிட்டார். தனித்தனியாக வந்த இருகட்சி தொண்டர்களின் பேரணி இஸ்லாமாபாத்துக்குள் ஒன்றாக இணைந்தது. இதனால் அங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டதால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. 

இவர்களின் போராட்டத்திற்கு அனுமதி அளித்த அரசு ரெட் சோன் எனப்படும் பாதுகாப்பு பகுதிக்குள் நுழையக் கூடாது என்று நிபந்தனை விதித்திருந்தது. இந்த ரெட் சோன் பகுதியில்தான் பாராளுமன்றம் பிரதமர் அலுவலக இல்லம், ஜனாதிபதி மாளிகை, வெளிநாட்டு தூதரகங்கள் போன்றவை உள்ளன. 

இன்று மாலைக்குள் நவாஸ் ஷெரீப் பதவி விலகாவிட்டால் பாராளுமன்றத்திற்குள் யாரையும் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று காத்ரி எச்சரித்தார். பிரதமர் இல்லத்தை முற்றுகையிடுவதாக இம்ரான் கானும் மிரட்டியிருக்கிறார். ஆனால், மாலை வரை நவாஸ் பதவி விலகவில்லை. இம்ரான் கானை சந்தித்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவும் நவாஸ் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையே, நவாஸ் பதவி விலகும்வரை பாராளுமன்ற வளாகத்தைவிட்டு எம்.பி.க்கள் வெளியே போகாதபடி தடுக்கும்படி போராட்டக்காரர்களை காத்ரி கேட்டுக்கொண்டார். எனினும், நாடாளுமன்றத்தைவிட்டு நவாஸ் தனது இல்லத்திற்கு சென்றுவிட்டார். சுமார் 30 ஆயிரம் போராட்டக்காரர்கள் ரெட் சோன் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.