Header Ads



அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் எதனையும் சாதித்துவிட முடியாது - நஸீர் அஹமட்

(Tm)

அயல் நாடான இந்தியாவை இப்பொழுது ஆட்சி செய்துகொண்டிருக்கின்ற பாரதிய ஜனதாக் கட்சி இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பதில் தெளிவாக இருக்கின்றது என கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி சுற்றுலாத்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் விவசாய விரிவாக்கல் உதவிப் பணிப்பாளர் அலுவலகத்   திறப்பு விழா நேற்று சனிக்கிழமை (09) நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.  இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 

'சமீபத்தில் நாங்கள் இந்தியாவுக்குச் சென்று பாரதிய ஜனதாக் கட்சியின் செயலாளர் நாயகம் கூட்டிய மாநாட்டில் பங்குபற்றியிருந்தோம். இதன்போது,  இலங்கை முஸ்லிம்கள் பற்றிய விடயத்தில் அவர்கள்; தெளிவாக இருப்பதை நாம் அறிந்து கொண்டோம். இது எமக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 

இன்று முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான ஒரு தீவிரப்போக்கு நம் நாட்டில் இருக்கின்றது. இது ஒரு இனச் சுத்திகரிப்பைச் செய்யக்கூடிய நிலைக்கு கொண்டுசென்று விடுமோ என்ற அச்சம்;  பொதுவாக நிலவுகின்றது. இந்தச் சூழ்நிலையில் நாங்களும் ஏன் தொடர்ந்து அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டிருக்கின்றோம் என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகின்றது.

நாங்கள் ஏன் இன்னமும் அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டிருக்கின்றோம் என்பதற்கான விளக்கத்தை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெளிவாகச் சொல்லி வருகின்றார்.

இலங்கை இனப்பிரச்சினையில் மாகாணசபைகள் அதிகாரம், 13ஆவது திருத்தச் சட்டமூலம் உள்ளிட்ட விடயங்களில் இந்திய அரசாங்கம் தெளிவாக இருக்கின்றபோது பொறுப்பில்லாத ஒரு கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் நடந்துகொள்ள மாட்டாது.

அரசை  விட்டு வெளியேறிச் சென்றால், தூரத்தில் நின்றுகொண்டு வெறுமனே கூச்சலிடுகின்ற ஒரு கட்சியாக இருக்கலாமே தவிர, வேறொன்றையும் சாதித்து விட முடியாது.

இனப் பிரச்சினைக்கான தீர்வில் அரசாங்கம் ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றபோது,  நாங்களும் அரசாங்கத்தில் ஓரங்கமாக இருந்து காத்திரமான தீர்வுக்கு வழிகோல வேண்டும். அந்தப் பொறுப்பைச் சுமந்தவர்களாகவே முஸ்லிம் காங்கிரஸ் இன்று இருந்துகொண்டிருக்கின்றது.

சமகாலச் சூழ்நிலைகள், அரசியல் மாற்றங்கள் எல்லாவற்றிலும் முஸ்லிம்கள் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை நாடே அறியும். எங்களுடைய மனங்கள் தாக்கப்பட்டு புண்படுத்தப்பட்டிருக்கின்றன.

1983 இல் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு போன்று முஸ்லிம்களுக்கு எதிராகவும் இன அழிப்பு தூண்டப்பட்டு விடுமோ என்ற அச்சம் இன்று முஸ்லிம்கள் மத்தியில் உள்ளது.

சிறுபான்மை இனங்களின் மனநிலையில் இயல்பாக எழக்கூடிய அச்சத்தைப் போக்குகின்ற கடமைப்பாடு அரசாங்கத்துக்கு உண்டு. இதை  அரசாங்கம் எக்காரணம் கொண்டும் புறந்தள்ளிவிட முடியாது. 

இந்த நாட்டில் மீண்டுமொரு இனக்கலவரம் எந்த இனத்துக்கு எதிராகவும் ஏற்படக்கூடாது. அவ்வாறு இனக்கலவரத்தை தூண்டுகின்ற காரியங்களைச் செய்கின்றவர்கள் இந்த நாட்டின் துரோகிகளாகவே இருப்பர்;.

இந்த நாடு ஏறத்தாழ 35 வருடங்கள் அனுபவித்த துன்பங்கள் போதாது என்று சொன்னால், அப்படிப்பட்டவர்களை அரவணைத்து அவர்களுக்கு ஆதரவளித்து கோலோச்சுபவர்கள் துரோகிகளாகவே இருக்க முடியும். ஆகவே, இவர்களை அடக்கவேண்டிய கடமைப்பாடு அரசாங்கத்துக்கு இருக்கின்றது.

இனப் பிரச்சினைத் தீர்வில் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவித்த தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிட்ட வேண்டும் என்பதில் நாங்கள் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றோம். அதேபோன்று, முஸ்லிம்களின் விடயத்திலும் தீர்வு கிட்டவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.' என்றார்

ஹஜ்ஜுப் பெருநாள், நோன்புப் பெருநாள், தீபாவளி, சித்திரைப் பெருநாள் எல்லாம் வருகிறது என்று சொன்னால் அது எல்லோருக்கும் மகிழ்ச்சியான காலகட்டமாகப் பாரக்கப்பட்ட ஒரு வரலாறு இருந்தது. ஆனால், துரதிஷ்டமாக இடையில் ஆட்சி செலுத்திய ஒரு சிலர் அதனைக் குழப்பி விட்டார்கள்.

நாங்கள் தெளிவடைய வேண்டிய முக்கியமான விடயம் இருக்கின்றது. தமிழ், முஸ்லிம் என்று பிரித்துப் பார்ப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். முதலில் இந்த கீழ்த்தரமான சிந்தனைக்குத் தீர்வு கண்டாக வேண்டும். இந்த ஒற்றுமை இன்மை எமக்குக் கிடைக்கக் கூடிய எல்லாவற்றையும் பாதித்திருக்கின்றது.

எனவே, எமது பொருளாதாரத்தை முன்னேற்றமடையச் செய்வதற்கு மீண்டும் இந்த சமூக ஒற்றுமையைக் கட்டிவளர்க்க வேண்டியுள்ளது.  ஆகையினால், எனது அமைச்சின் கீழ் வரும் எந்த அபிவிருத்தித் திட்டத்திலும் நான் இதற்கு முக்கியத்துவம் வழங்குமாறு எனது அதிகாரிகளுக்குப் பணித்திருக்கின்றேன்.' என்றார்.

4 comments:

  1. How many billions you robbed during Asroff's era, how many billions you robbed during Rauf's era ? you know which is better than any others?

    ReplyDelete
  2. நசீர் அஹமட் அவர்களே, அரசாங்கத்தில் இருந்து கொண்டு என்னத்தப்பா கிழித்தீர்கள்...?? முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளீர்கள். ஒரு சமூகத்தின் உரிமை, விடுதலை போராட்டம் என்றால் என்ன என்று புரிந்து தான் பேசுநீர்களோ..? ஊர் உலகத்தை கொஞ்சம் முழுச்சு பாருங்கோ..!!!

    உங்களை போன்றவர்களிடம் இருந்து இந்த கட்சியையும் கட்சியின் பில்டிங்கயும் எல்லாம் வல்ல இறைவன் காப்பாற்றுவானாக...ஆமீன்.

    ReplyDelete
  3. தலைவர் அஷ்ரபின் அகாலமரணத்தின் போது சாதித்தத்தை விட - சாதிப்பு ஒன்றுமில்லையே!

    ReplyDelete
  4. அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு இஇன்னும் இன்னும் சம்பாதித்துக் கொள்ள முடியாதுமுடியாதுதான்.

    ReplyDelete

Powered by Blogger.