ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்ணும் உயரிய இஸ்லாமிய வாழ்வு நெறியின் தூதுவர்களே (AMBASSADORS).
(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)
உயரிய இஸ்லாமிய குணாதிசயங்களை, பண்பாடுகளை, ஒழுக்க விழுமியங்களை, தயாள குணங்களை, தாராளத் தன்மைகளை, பெரும்தன்மைகளை அழகான இஸ்லாமிய தனிநபர், குடும்ப, சமூக,அரசியல்,பொருளாதார வாழ்வு நெறிகளை செயல்வடிவில் பிரதிபலிக்கின்ற ஒவ்வொரு விசுவாசியும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உண்மை பிரதிநிதிகள் கலீபாக்கள் ஆவர்.
ஒவ்வொரு தனி மனிதனும் மிகச் சிறந்த ஆன்மீக பண்பாட்டு பக்குவங்கள் மீது கட்டி எழுப்பப் படுகின்ற வெற்றிகரமான தத்தமது வாழ்வு நெறியை செயலுருவில் ஏனைய சமூகங்களுக்கு வியாக்கியானம் செய்கின்ற பொழுது இஸ்லாம் முஸ்லிம் குறித்த காழ்புணர்வு பிரச்சாரங்கள் உடனுக்குடன் பொய்ப்பிக்கப்படுகின்றன.
"மனித மனங்களை வெல்லுதல்" இஸ்லாமிய நம்பிக்கை கோட்பாடுகளும், ஆன்மீக பயிற்சிகளும், தொழுகை, நோன்பு,சக்காத்து, ஹஜ்ஜு,சதக்காகள் என வணக்க வழிபாடுகளும் மனிதனை புனிதனாக மாற்றுகிறது, உயரிய மானுட விழுமியங்களை ஒவ்வொரு தனி மனித வாழ்வினதும் அணிகலன்களாக போதித்து விடுகிறது.
"நான் உயரிய குணாதிசியங்களை பரிபூரணப்படுத்துவதற்காகவே அனுப்பப் பட்டுள்ளேன்" என மனித குல மாணிக்கம் மாநபி முஹம்மத் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
"உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடத்தில் சிறந்த முன்மாதிரிகள் இருக்கின்றன" என அல்-குரான் கூறுகிறது.
பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழுகின்ற நாடுகளிலும் பார்க்க சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழ்கின்ற நாடுகளில் உயரிய இஸ்லாமிய விழுமியங்களால் பண்பாட்டு பாரம்பரியங்களால் மனித குலத்திற்கான தெளிவான ஒரு செய்தியை முன்வைக்கின்ற வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது.
இஸ்லாமிய பெறுமானங்கள் அறிவு பூர்வமான,விஞ்ஞான பூர்வமான இயற்கையோடு இயைந்து செல்கின்ற தர்க்க ரீதியாக நிரூபிக்க முடியமான மென்பொருட்களாக மாத்திரம் இருக்க துரதிஷ்ட வசமாக முஸ்லிம் உலகு இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் கோரமான அகோரமானவியாக்கியானங்களை உலகின் முன் வைத்துக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு விசுவாசியும் தனது சுற்றுச் சூழலில் ஆன்மீக பண்பாட்டு பக்குவங்களினாலும்,உயரிய மானுட விழுமியங்களினாலும் நேர்மறையான கதிர்வீச்சை பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நடை முறை வியாக்கியானமாக மாறுவதே இஸ்லாமிய தஃவாவின் முதலாவது படியாகும்.
மனித குல விமோஷனத்திற்காக கருணையின் வடிவாக அனுப்பப்பட்ட ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள், மனிதகுலத்திற்கு அருளாகவும் மனித குல பிணிகளுக்கான நிவாரணியாகவும் அல்குரானை அறிமுகம் செய்த மாதம் புனித ரமழான் மாதம்.
"நபியவர்களது வாழ்வு குரானாகவே இருந்தது" என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் குறிப்பிட்டதுபோல் புனிதமிகு ரமழான் மாதத்தில் நாம் பெற்றுக் கொண்ட ஆன்மீக பண்பாட்டு பக்குவங்களும் உயரிய மனித விழுமியங்களும் எமது வாழ்வில் பிரதிபலிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக..!

Post a Comment