ஈராக்கில் நகர்வலம் வந்த ISIS கலிபா பக்தாதி
ஈராக்கின் வட பகுதியில் உள்ள 15 க்கும் மேற்பட்ட நகரங்களை கடந்த மாதம் கைப்பற்றிய ஜிஹாதிகள் என்றழைக்கப்படும் ஐ.எஸ். படையினர் அவற்றை தங்களது கட்டுபாட்டில் வைத்துள்ளனர்.
வடக்கு சிரியாவில் இருந்து ஈராக்கின் டியாலா மாகாணம் வரை உள்ள நிலப்பரப்பு முழுவதும் ஐ.எஸ்.ஐ.எஸ்.-ன் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும், இந்நிலப்பரப்பின் 'கலிபா’வாக (மன்னர்) ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தலைவரான அபு பக்ர் அல் பக்தாதி விளங்குவார் என்றும் அறிவித்தனர்.
இப்பகுதிக்குள் கலிபாவின் படைகள் நுழைந்த நேரத்தில் இருந்து, முந்தைய ஆட்சியாளர்களின் அதிகாரம் காலாவதியாகி விட்டதாகவும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் புதிய கலிபாவுக்கு விசுவாசமாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டும் எனவும் அந்த ’ஆடியோ அறிக்கை’ தெரிவித்தது.
இந்நிலையில், ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்தில் மேற்கு அன்பர் மானத்தில் ஐ.எஸ். படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரவா மற்றும் க்வயிம் நகரங்களை ஐ.எஸ்.நாடு என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளின் கலிபாவான அபு பக்ர் அல் பக்தாதி நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) பார்வையிட்டதாக அப்பகுதியில் வாழும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
அந்நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள ஐ.எஸ். போர்ப் பாசறைகளை பார்வையிட்ட பக்தாதி, நேற்று (சனிக்கிழமை) வடக்கு சிரியாவின் ரக்கா மாகாணத்தில் உள்ள பாசறைக்கு சென்றதாகவும் செய்தி வெளியிட்டுள்ளன.

Post a Comment