ஈராக் மீது 30 ஆயிரம் அடிக்கு கீழ் பறக்க அமெரிக்க விமானங்களுக்கு தடை
சமீபத்தில் கிழக்கு உக்ரைனில் 30,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டத்தில் அதில் பயணித்துக் கொண்டிருந்த 298 பேரும் பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து பல நாடுகளின் விமான நிறுவனங்களும் கலவரம் நடக்கும் பகுதிகளின் மீதான வான்வெளிப் பயணத்தை தவிர்த்து வருகின்றன. இதேபோல் மத்திய அரபு நாடுகளில் ஒன்றான ஈராக்கிலும் ஷன்னி, ஷியா பிரிவினருக்கு இடையேயான மோதல் வலுத்து வருவதைத் தொடர்ந்து பல ஐரோப்பிய விமான நிறுவனங்களும் இதற்கான மாற்று விமானத் திட்டங்களை உருவாக்கியுள்ளன.
அமெரிக்கா நாட்டின் விமானப் போக்குவரத்து நிர்வாகமும் ஏற்கனவே ஈராக்கின் மீது தங்கள் நாட்டின் விமானங்கள் 20,000 அடிக்குக் குறைவான உயரத்தில் பறக்க வேண்டாம் என்று எச்சரித்திருந்தது. தற்போது மீண்டும் நேற்று 30,000 அடிக்குக் குறைவான உயரத்தில் பறப்பத்தைத் தடை செய்து விமானப் போக்குவரத்து நிர்வாகம் புதிய கட்டுப்பாட்டினை விதித்துள்ளது.
மலேசிய விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்தபோதும் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்த விதிமுறை மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, ஈராக்கில் உள்ள எர்பில் மற்றும் சுலைமானியா சர்வதேச விமானங்களில் அமெரிக்க விமானங்கள் தரையிறங்குவதையோ, ஏறுவதையோ அந்நாட்டு விமானப் போக்குவரத்து நிர்வாகம் தடை செய்துள்ளது.

Post a Comment