Header Ads



ஞானசார தேரரிடம் ரூ 100 கோடி நஷ்டஈடு கோரி அமைச்சர் ராஜித கோரிக்கை கடிதம்

(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

கலபொட அத்தே ஞானசார தேரர் தன்னைப் பற்றி தவறாகவும் தமக்கு அபகீர்த்தி ஏற்படும் வண்ணமும் பகிரங்கமாகப் போலியான கருத்துக்களை வெளியிட்டமை குறித்து நூறு கோடி ரூபா நஷ்டஈடு கோரி கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன கலபொட அத்தே ஞானசார தேரருக்கு கோரிக்கை கடிதம் ( டுநவவநச ழக னநஅயனெ)  ஒன்றை இன்று (12) அனுப்பி வைத்துள்ளார்.

ஆகஸ்ட் 11 ஆம் திகதி இடப்பட்ட இக்கடிதத்தை சட்டத்தரணி சனத் வீரரட்ன தமது வாடிக்கையாளரான அமைச்சர் சார்பில் அனுப்பியுள்ளார். தேரர் 05.08.2014 அன்று நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வெளியிட்ட தவறான கருத்துக்கள் மூலம் தமது கட்சிக்காரரின் நடத்தைக்கும், கீர்த்திக்கும், கௌரவத்திற்கும் அரசியல் செயல்பாட்டுக்கும் பெரும் அபகீர்த்தி ஏற்படுத்தப் பட்டுள்ளதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்செய்தியாளர் மாநாட்டில் ஞானசார தேரர், அமைச்சர் ராஜித லஞ்சம் பெற்றவர், ஊழல் மோசடி குற்றம் புரிந்தவர், அமைச்சரவையில் அங்கம் வகிக்க தகுதி பெறாதவர், சிறைக்கு அனுப்பப்பட வேண்டியவர், எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளுடன் உறவுகள் வைத்திருப்பவர், அவர் ஒரு துரோகி என்று குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சர் தாழ்ந்த நடத்தைக் கொண்டவர், அமைச்சர் பதவி அதிகாரங்களை பாவித்து ஹெரோயின், கேரள கஞ்சா கொண்டு செல்வதற்கும், போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும் உதவ நடவடிக்கை எடுத்து உழைத்த சட்டவிரோத நிதி மூலம் அமெரிக்காவில் பல வீடுகளைக் கொள்வனவு செய்தவர் என்றும் அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தார். மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் தேரர் இச்சமயம் குறிப்பிட்டுள்ளார். இதனால் தமது கட்சிக்காரருக்கு ஏற்பட்டிருக்கும் அபகீர்த்திக்காக 100 கோடி ரூபாவை இரு வாரங்களுக்குள் நஷ்டஈடாகச் செலுத்த வேண்டுமென சட்டத்தரணி இக்கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் அது தொடர்பாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் இக்கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. ஞானசாரனிடம் யூதர்களும், நோர்வேயும், அமெரிக்காவும் கொடத்த காசி அதிமாகவே இருக்கிறது! உங்கள் ஈட்டுத்தொகை 100 கோடி அவனுக்கு மிகவும் அற்பம்!

    ReplyDelete

Powered by Blogger.