Header Ads



ஈராக் புதிய பிரதமராக துணை சபாநாயகர் நியமனம் - அமெரிக்கா வரவேற்பு

ஈராக்கில் பரபரப்பு அரசியல் திருப்பமாக துணை சபாநாயகர் ஹைதர் அல் அபாதியை புதிய பிரதமராக அந்நாட்டின் அதிபர் புவாத் மசூத் நியமித்துள்ளார். 

இதை ஏற்க தற்போதைய பிரதமர் மறுத்துள்ளார். ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பல்வேறு நகரங்களை கைப்பற்றிய அவர்கள், சிரியாவின் சில பகுதிகளையும் இணைத்து கலிபாத் எனப்படும் சுதந்திர இஸ்லாமிய தேசத்தை பிரகடனம் செய்தனர். ஈராக் தலைநகர் பாக்தாத்தை கைப்பற்றும் நோக்கில் முன்னேறி வருகின்றனர். இதற்கிடையே, பிரதமர் நூரி அல் மாலிக்கி, ஷியா பிரிவை சேர்ந்தவர் என்றும், சன்னி, குர்து இன மக்கள் மீது அவரது அரசு பாரபட்சம் காட்டியதாகவும் புகார்கள் எழுந்தன. இதனால்தான் ஈராக்கில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்ற நிலை ஏற்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்நிலையில் அங்கு எர்பில் நகரத்தை கைப்பற்றும் முயற்சியில் ஐஎஸ்ஐஎஸ் ஈடுபட்டு வருகின்றனர். எர்பில் நகரில் அமெரிக்கர்கள் அதிகமாக வசித்து வருவதாலும், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் உள்ளதாலும், அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படுவதாக கூறி, தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டார். இதன்படி, கடந்த சில நாட்களாக அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. 

இதற்கிடையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஈராக் சென்று அங்கு பிரதமர் மற்றும் அதிபரை சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், பிரச்னைகளை சரியாக கையாளாத பிரதமர் நூரி அல் மாலிக்கியை மாற்றி விட்டு, நாடாளுமன்ற துணை சபாநாயகர் ஹைதர் அல் அபாதியை பிரதமராக்க வேண்டுமென மொத்தமுள்ள 170 எம்பிக்களில் 127 எம்பிக்கள் அதிபரிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து,  ஹைதர் அல் அபாதியை பிரதமராக நியமனம் செய்து அதிபர் புவாத் மசூத் உத்தரவிட்டுள்ளார். புதிய பிரதமராக ஹைதர் அல் அபாதி பொறுப்பேற்கிறார். ஒரு மாத காலத்திற்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் அதிபர் உத்தரவிட்டுள்ளார். 

இதற்கு அமெரிக்கா வரவேற்பு அளித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘ஈராக்கில் உள்ள அனைத்து சமூகத்தினரின் பாதுகாப்புக்கும், நலன்களுக்கும் அங்கு அரசியல் ரீதியான மாற்றம் ஒன்றே வழியாகும். நிலையான ஆட்சியின் மூலமாக மட்டுமே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த முடியும். எனவே  ஹைதர் அல் அபாதி பிரதமராக அறிவிக்கப்பட்டது முக்கியமான அரசியல் நடவடிக்கையாகும்’ என்றார்.

இந்நிலையில், தன்னை நீக்கியது செல்லாது என தற்போதைய பிரதமர் மாலிக்கி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.