Header Ads



இந்தியாவின் இலத்திரனியல் பயண அனுமதி – இலங்கைக்கு இல்லை

140 நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, விமான நிலையத்தில் வைத்து நுழைவிசைவு வழங்கும் இலத்திரனியல் பயண அனுமதித் திட்டத்தை இந்திய அரசாங்கம் வரும் ஒக்ரோபர் 2ம் நாள் ஆரம்பிக்கவுள்ளது. 

திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட 9 விமான நிலையங்களில், இதற்கான வசதிகள் செய்யப்படவுள்ளன. 

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வசதிகளை செய்யும்படி, குறிப்பிட்ட 9 விமான நிலையங்களிலும் உள்ள குடிவரவுப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

முன்னதாக, 180 நாடுகளின் பயணிகளுக்கு இந்த வசதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதும், தற்போது, 140 நாடுகளில் இருந்து வரும் பணிகளுக்கே இந்த வசதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மேலதிக விளக்கங்களுக்காக காத்திருப்பதாக, குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

எனினும், ஒக்ரோபர் 2ம் நாள் தொடக்கம் இலத்திரனியல் பயண அனுமதியை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளதாக குடிவரவுப் பகுதி அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதற்கென அனைத்துலக முனையப் பகுதியில் மேலதிக இடவசதிகளை விமான நிலைய அதிகார சபை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 

புதிய ஆளணியும் ஏனைய மேலதிக வசதிகளும் கோரப்பட்டுள்ளன. 

இந்த திட்டத்தில் சிறிலங்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் உள்ளடக்கப்படவில்லை. 

இதற்கு சிறிலங்கா தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட போதும், இந்திய அதிகாரிகள் தமது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.