முஸ்லிம்கள் மீது பௌத்த இனவெறித் தாக்குதல் - கிழக்கு மாகாண சபை அமர்வில் கண்டனப் பிரேரணை
(எம்.எம்.ஏ.ஸமட் + அஸ்லம் எஸ்.மௌலானா)
அளுத்கம, பேருவளை உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பௌத்த இனவெறித் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இன்று கிழக்கு மாகாண சபை அமர்வில் மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட கண்டனப் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபை அமர்வு தவிசாளர் ஆரியபதி கலப்பதி தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது.
இதன்போது வழமையான சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்து முதல் நிகழ்வாக கிழக்கு மாகாண சபை மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் அவர்களினால் முன்மொழியப்பட்ட கண்டனப் பிரேரணையை சமர்பிப்பதற்கு தவிசாளர் அழைப்பு விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து குறித்த கண்டனப் பிரேரணையை சமர்ப்பித்து ஜெமீல் உரையாற்றினார். அளுத்கம, பேருவளை முஸ்லிம்கள் மீது பொது பல சேனா அமைப்பு திட்டமிட்டே தாக்குதல்களை மேற்கொண்டது எனவும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிசார் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் இதனால் முஸ்லிம்களின் உயிர், உடமைகள் அழிக்கப்பட்டதுடன் அவர்களது பொருளாதாரம் முற்றாக அழித்தொழிக்கப்பட்டது எனவும் ஜெமீல் தனது உரையில் சுட்டிக் காட்டினார்.
ஆகையினால் சிங்களப் பேரினவாதிகள் மேற்கொண்ட இந்த இன சுத்திகரிப்பு நடவடிக்கைகளை கிழக்கு மாகாண சபை வன்மையாக கண்டிப்பதுடன் அது தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்வதற்கும் அதன் சூத்திரதாரிகளை தண்டிப்பதற்கும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் எதிர்காலங்களில் இவ்வாறான இனவெறித் தாக்குதல்கள் இடம்பெறா வண்ணம் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டக் கோரியும் அரசாங்கத்தை வலியுறுத்தி எமது மாகாண சபை தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் இதன்போது கேட்டுக் கொண்டார்.
நிறைவேற்றப்படும் இத்தீர்மானங்களை கிழக்கு மாகாண முதலமைச்சரும் தவிசாளரும் ஒப்பமிட்டு ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் ஏ.எம்.ஜெமீல் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஆளும் மற்றும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பலரும் உரையாற்றினர். இதன்போது காரசாரமான விவாதங்களும் இடம்பெற்றன.
முற்பகல் 11.00 மணிக்கு ஆரம்பமான இப்பிரேரணை தொடர்பிலான விவாதம் மாலை 4.20 மணி வரை நீடித்தது.
இறுதியாக இக்கண்டனப் பிரேரணை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இப்பிரேரணை கடந்த மாதம் 17ஆம் திகதி இடம்பெற்ற கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வில் மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் அதற்கு தவிசாளர் அனுமதி வழங்க மறுத்ததன் காரணமாக சபையில் பெரும் அமளிதுமளியும் குழப்பகரமான சூழ்நிலையும் ஏற்பட்டு- மு.கா. உறுப்பினர்களால் செங்கோலும் தூக்கிச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து சபை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment