அளுத்கம கலவரம் - சஜித் பிரேமதாச கண்டனம்
அளுத்கம கலவரம் தொடர்பாக தமது கவலையையும் கடும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச எம்.பி., இலங்கைக்கு மீண்டுமொரு கறுப்பு ஜூலை அவசியமில்லை என்றும் பிரச்சினை இருப்பின் பேச்சுவார்த்தை, கருத்துப் பரிமாற்றம், இணக்கப்பாடு மற்றும் புரிந்துணர்வு மூலம் அவற்றைத் தீர்த்துக் கொள்வதே எம் அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அளுத்கம கலவரம் தொடர்பாக சஜித் பிரேமதாசவின் ஊடகப் பிரிவினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது ;
களுத்துறை மாவட்டத்தின் தர்கா நகர், அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களை மையப்படுத்தி கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற கவலைக்குரிய சம்பவங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். நாட்டில் சகோதரத்துவம், நல்லிணக்கம் மற்றும் நட்புறவைக் கட்டியெழுப்புவது எம் அனைவரினதும் கடமையும் பொறுப்புமாகும். பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்போது ஆயுதங்களை ஏந்தி உயிர்ச் சேதங்கள் மற்றும் சொத்து சேதங்களை விளைவிப்பது மிலேச்சத்தனமே தவிர பண்பட்ட தன்மையல்ல. அரசியல் சுதந்திரத்தை எந்தத் தடையும் இன்றி அனுபவிக்கவும் விரும்பிய மதத்தைப் பின்பற்றவும் அனைத்து பிரஜைகளும் ஒரு தாய் பிள்ளைகளாக ஒற்றுமையாக வாழ்வதற்குமான சூழலொன்று நாட்டில் இருக்க வேண்டும். எமக்கு மீண்டுமொரு கறுப்பு ஜூலை அவசியமில்லை.
இந்நாட்டின் அனைத்து மக்களையும் பங்குதாரராக்கிக் கொண்ட சௌபாக்கியமான வசந்த காலமே எமக்கு அவசியம். ஆகவே அழிவுப் பாதையில் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள செயற்படுமாறு வேண்டுகோள் விடுகின்றேன். அத்துடன் பக்கச்சார்பின்றி செயற்பட்டு மக்களை ஆபத்தில் இருந்தும் துன்புறுத்தல்களில் இருந்தும் விடுவிப்பதற்கு முன்னுரிமை வழங்குமாறும் பாதுகாப்புத் தரப்பிடம் கேட்டுக் கொள்கிறேன்.
.jpg)
Post a Comment