முஸ்லிம்கள் அடக்கு முறைகளில் இருந்து வெளிவர போராடுகின்றனர் - அநுரகுமார திஸாநாயக்க
பொது வேட்பாளராக செயற்படும் எண்ணம் எனக்கு இல்லை.அரசாங்கத்தை வலியுறுத்தும் கட்சியாக செயற்படவே நாம் விரும்புகின்றோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மூவின மக்களையும் பாதுகாத்து இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். இதனைத் தொடர்ந்தும் வலியுறுத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலொன்று இடம்பெறுமாயின் பொது வேட்பாளருக்கு அநுர குமார திஸாநாயக்க தகுதியானவர் என்ற கலாநிதி தயான் ஜயதிலகவின் கருத்து தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலொன்று தற்போதைய சூழ்நிலையில் இடம் பெறக்கூடிய சாத்தியம் இல்லை. அவ்வாறானதொரு நிலையில் சகல கட்சிகளும் தத்தமது கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். அதேபோல் தற்போது பொது வேட்பாளராக நியமிப்பதில் என்னை தெரிவித்திருப்பது கலாநிதி தயான் ஜயதிலகவின் தனிப்பட்ட கருத்து மட்டுமே. எவ்வாறிருப்பினும் எமது செயற்பாடுகள், கட்சியின் முற்போக்கு சிந்தனைகள் என்பன பெரும்பாலானவர்களை கவர்ந்திருக்கின்றமை நல்ல விடயமே. எனினும், ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நான் செயற்பட விரும்பவில்லை. அவ்வாறானதொரு எண்ணம் இதுவரையில் எனக்கு வரவுமில்லை.
ஜே.வி.பி. எப்போதும் அரசாங்கத்தின் நன்மையான செயற்பாடுகளை வரவேற்கும். அதேபோல் அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டவும் ஒரு போதும் தயங்கியதில்லை. கடந்த காலங்களில் இதனை அனைவரும் நன்றாக உணர்ந்துவிட்டனர். நாம் எப்போதும் அரசாங்கத்தை ஜனநாயக பாதையில் இட்டுச்செல்ல வலியுறுத்தும் கட்சியாகவே இருக்க விரும்புகின்றோம். ஜே.வி.பி. யும் சுயநல அரசியலிலும் குதித்தால் இந்த நாட்டு மக்களை எவராலும் காப்பாற்ற முடியாது போய்விடும். அவ்வாறானதொரு தவறினை ஒரு போதும் செய்யமாட்டோம். அதேபோல் தீர்மானிக்கும் சக்தியாக செயற்பட்டு வரும் நாம் நாட்டிற்கும் மக்களுக்கும் சாதகமான வகையில் ஏதேனும் தீர்மானமிக்க முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுமாயின் அப்போது பொது எதிர்க்கட்சியை ஆதரிப்பது தொடர்பில் யோசிப்போம்.
மேலும், நாட்டில் மூவின மக்களின் பிரச்சினைகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. தமிழ் மக்கள் உரிமைகளுக்காக போராடுகின்றனர். சிங்கள மக்கள் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்நோக்கி அதற்காக போராடுகின்றனர். முஸ்லிம் மக்கள் தமது அடக்கு முறைகளில் இருந்து வெளிவர போராடுகின்றனர். இவை அனைத்தையும் தீர்க்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்குள்ளது.
அதேபோல் ஜனநாயகத்தை நாட்டில் நிலைநாட்ட வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, இவை தொடர்பில் தொடர்ந்தும் வலியுறுத்தி ஜே.வி.பி. போராடும். போராட்டம் ஒன்றே தீர்விற்கு வழி எனவும் அவர் தெரிவித்தார்.

JAYWEWA JVP LEADER.JAYAWEWA SRILANKA IN THE FUTURE
ReplyDeleteMr A.k.Disanayakka you have bright future.Jayawewa.........
ReplyDelete