முஸ்லிம்களுக்கு இந்நாட்டு அரசியல்வாதிகளால் எது நடந்தாலும்..?
இலங்கையில் பௌத்த தீவிரவாத அமைப்புக்கள், சிறுபான்மை மதங்கள் மீது மேற்கொண்டு வரும் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. உள்ளன. மத விவகாரங்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள, விசேட பொலிஸ் பிரிவு ஒன்று பௌத்த கலாசார அமைச்சின் கீழ் 16 அதிகாரிகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. முறைப்பாடொன்றினை பதிவுசெய்து கொண்ட மத்திய மாகாண சபை உறுப்பினரும், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், அண்மைக்காலமாக சிறுபான்மைச் சமுகத்தின் சார்பாக அரசுடன் முட்டி மோதிக் கொண்டிருக்கும் ஆஸாத் சாலி அவர்கள் பொலிஸ் மீதிருந்த நம்பிக்கையை இழந்து விட்டோம் என்றும், தற்போது நடைபெறுகின்ற வன்முறைச் சம்பவங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படாததல் நாங்கள் பொலிஸ் மீதிருந்த நம்பிக்கையினை இழந்து விட்டோம் என்றும் தெரிவித்திருந்தார்.
உண்மையில் இன்று நம்பிக்கை இழந்துள்ள இலங்கையின் சிறுபான்மைச் சமுகமாகக் காணப்படுகின்ற தமிழ், முஸ்லிம்கள் மீதும், அவர்களது உடமைகள் மீதும், குடியிருக்கும் காணிகள் மீதும் காட்டமான போக்கினை பெரும்பாண்மையினரில் உள்ள சில தீவிர போக்குடையவர்கள் மேற்கொள்வது கவலை அளிப்பதாகக் கூறப்படுகின்றது. அண்மையில் சிஹல உருமய கட்சியினைச்சேர்ந்தவரும், இந்நாட்டின் முக்கிதுறைக்கான அமைச்சராகவும் இருக்கின்ற பாட்டிலி சம்பிக்க ரணவக்க தன்னுடைய கட்சி அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டின்போது தெரிவித்த விடயங்கள் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் மீது அவர்களுடைய இருப்புக்கள்மீதும் கைவைக்கும் அளவுக்கு மிகமிக நுட்பமாக நடந்து கொள்கின்றனர்போல் தெரிகின்றது.
அதாவது பொத்துவில் லகுகலை பிரதேசத்தில் காணப்படுகின்ற முஸ்லிம்களுக்கான காணி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா, முன்னாள் அமைச்சரான பேரியல் அஷ்ரப் போன்றோர்களால் முறியடிக்கப்பட முடியாதளவுக்கு அரசுடன் ஒட்டிக் கொண்டு அந்தக் காணிகளை காப்பாற்றியதாக கதைவிட்டுள்ளார். அப்போது இந்த அமைச்சர் சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சராக இருந்தவர். கிழக்கில் குறிப்பாக பொத்துவில் லகுகலையில முஸ்லீம்கள் லகுகளை வனப் பிரதேசத்தில் உள்ள காணியை கொள்ளையடித்து அதனை உடமையாக்கவதற்கு எவ்வளவோ முயற்சித்தார்களாம். என்றும் அமைச்சர் கூறியிருக்கின்றார்.
தொடர்ந்து பேசுகையில் பாராளுமன்றத்தில் அப்போதிருந்த கிழக்குவாழ் சகல முஸ்லீம் அமைச்சர்கள் தொட்டு பாராளுமன்ற உறுப்பிணர்கள் வரை லகுகளை உள்ள வனவள காணியை கொள்ளையடிக்க முயற்சித்தார்கள். நான் விட்டுக்கொடுக்கவேயில்லை. அதில் மிகவும் காரசாரமாக எனது பொறுப்பை நிறைவேற்றினேன். ஜனாதிபதி ஊடாக எண்னை பணித்தார்கள். அமைச்சர் பேரியல் மையோன் முஸ்தபா என பல அமைச்சர்கள் எனது பலமுறை எனது அமைச்சிற்கு வந்து பேசினார்கள். அரசின் இருந்த முஸ்லீம் காங்கிரஸ் எம்.பிக்கள் கூட விலகி எதிர்கட்சியில் சென்று உட்கார்ந்தார்கள். நான் அசையவே இல்லை. ஆனால் நான் அன்று எடுத்த திர்க்கமான முடிவில்தான் இன்று லகுகளை பொத்துவில் வன பகுதி பௌத்த பூமியாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
அதே போன்று தான் அம்பாறையில் தீகவாபி பிரதேசத்தின் காணியில் சவுதி வீடமைப்புத் திட்டத்தினை அமைத்து அங்கு 100 ஏக்கர் காணியில் வீடமைப்புத்திட்டமொன்றை நிறுவினார்கள். இதற்காக உயர் நீதிமன்றம் சென்று சிஹல உருமய கட்சி வழங்கு தாக்கல் செய்து இதனை தடுத்தி நிறுத்தினோம். இவ் வழக்கில் சிகல உருமய கட்சி வெற்றி பெற்றது. தீகவாபியில் எஞ்சியுள்ள புனித பூமி பாதுகாக்கப்பட்து. ஆகவேதான் இன்று வடக்கில் வில்பத்தில் வாழுகின்ற 72 முஸ்லீம் குடும்பங்களும் உடனடியாக அவ்விடத்தல் இருந்து அகற்றப்படல் வேண்டும். ஆனால் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்த முஸ்லீம்கள் கட்டாயம் அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும். வடக்கில் உள்ள வில்பத்துக் காணியை முற்று முழுதாக பாதுகாப்பதற்கு அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அக் காணியில் ஒர் அங்குலமேனும் காணிக் கொள்ளையிடுவதற்கு யாருக்கும் சிகல உருமய விடாது. இவ் விடயத்தில் நாம் கன்னும் கருத்துமாகவே இருப்போம்' எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தார்.
இன்று நடப்பது இதுதான். இன்று முஸ்லிம்கள்மீது அவதூறான படுபாதகங்களை அள்ளிவீசுகின்றனர். ஆனால் நமது ஜனாதிபதிக்கு பஹ்ரேன்நாடு பட்டங்களும் பலஆயிரம் கோடிகளும் கொடுத்து அனுப்புகின்றனர். ஆனால் அத்தனை பணங்களும் முஸ்லிம்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படப்போகின்றது என்பதை அமைச்சரின் குறிப்பிலிருந்து பெறமுடிகின்றதல்லவா? அப்படியானால் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் அடிக்கடி அறிக்கை விடுகின்ற சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், தொப்பி அணிந்த மார்க்க வாதிகளும் ஏன் அறபியில் கடிதம் எழுதி இந்த நாட்டில் வாழும் உங்களது சகோதர முஸ்லிம்கள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விஷமத்தனத்திற்கு பணம், பொருள் வழங்கவேண்டாம் என கூறமுடியாமல் போனது! ஏன் முடியாது?
சில முஸ்லிம் நாடுகளில் கசினோ காணப்படுகின்றது என்று அண்மையில் மற்றொரு அமைச்சர் தெரிவித்திருந்தார். அந்த நாடுகளுக்கு சென்றுள்ள முஸ்லிம் கட்சி ஒன்றின் தலைவரான நமது முஸ்லிம் அமைச்சர், அந்நாட்டுத் தலைமையுடன் இலங்கையின் முஸ்லிம்கள் பற்றியும், முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற விடயங்கள் பற்றியும் கூறியிருப்பாரா? அல்லது கூறத்தான் முடியுமா? முடியாது ஏனென்றால் திரும்பிவரும்வரையில் அமைச்சுப்பதவி இருக்குமா? இருக்காதா? என்றொரு கேள்வியும் உண்டு. இந்நிலையில் நமது ஜனாதிபதிக்கு உயர்கௌரவம் வழங்கி பட்டம் ஒன்றையும் சூட்டி பாராட்டுப்பத்திரம் வழங்கியுள்ளாரே பஹ்ரைன் மன்னர். எவ்வளவுதாராளம் எவ்வளவு பெரிய மனசு.
'க(ப)லிபாஃ அபிதானய' எனப்படும் உயரிய விருதினை பஹ்ரேன் ராச்சியத்தின் ஹமாத் பின் இசா அல் கலிபா மன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கியுள்ளார். 'இலங்கை ஜனாதிபதியான தங்களும், உங்களைச் சார்ந்த நட்பு நாடுகளும், இருதரப்பு உறவுகள், அபிவிருத்திகள் மற்றும் முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து நாம் பெருமிதம் அடைவதுடன், நாட்டை சர்வதேச தளத்திற்கு உயர்த்த தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளும் முயற்சிகளை வரவேற்று இந்த விருதை வழங்குகிறோம்' என்றார் மன்னர் இந்த விருதானது இரண்டாவது எலிசபத் மகாராணி, சவூதி அரேபிய மன்னர் உள்ளிட்ட சிலருக்கு மாத்திரமே இதுவரை வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது. அப்படிப்பட்ட கௌரவ விருதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 'தாம் பெருமிதத்தையும், வரபிரசாத்தை எதிர்கொண்ட மகிழ்ச்சியை அடைவதாகவும், பஹ்ரேன் ராச்சியத்துடன், மிகவும் விரிவான கூட்டுறவை கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும்' ஜனாதிபதி தெரிவித்ததாக ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
இப்படியான தன்மையும், நற்பண்பும் நிறைந்த முஸ்லிம்கள் பௌத்தராக இருக்கின்ற நமது ஜனாதிபதிமீது கௌரவம் வழங்குகின்றபோது இங்குள்ள தீவிரவாதப்போக்குடையவர்கள் ஏன் முஸ்லிம்களை குடைந்தெடுக்கிறார்கள். அதேவேளை மதவாதத்தினைக் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடிவாகிய பொலிஸ் நிலையத்தினால் நடைபெறப்போவது ஒன்றுமே இல்லை. இந்த நிலையம் திறந்து இருப்பது பொதுபலசேனா அல்லது சிங்கள ராவயவின் பலத்தை கட்டுப்படுத்துவதற்கே ஆனால் அரசு தௌஹீத் ஜமா அத்தை முதலில் கட்டுப்படுத்த வேண்டும் இந்த மத விவகாரங்களுக்கான பொலிஸ் நிலையத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை. சகல மதங்களுக்கும் ஒரு நீதி நியாயம் சட்டம் பௌத்த மதத்தை பாதுகாக்க கடந்த காலத்தில் சிஹல உருமையினால் கொண்டுவரப்பட்ட சிங்கள பௌத்த சட்டத்தை நாங்கள் பாராளுமன்றம் ஊடாக கொண்டுவந்தோம். அதனை அன்று அமுல்படுத்த சிலர் விடவில்லை. அதனை செயற்படுத்திருந்தால் பௌத்த மதத்துக்கு அன்நிய மதங்களினால் இழுக்கு இடம் பெற்றிறுக்காது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
சஊதி அரசினால் அக்கரைப்பற்று நுரைச்சோலைப் பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று முஸ்லிம்களுக்காக கட்டப்பட்ட 500க்கும் மேற்பட்ட அழகிய வீடுகள் இந்த சிஹல உருமயவினரின் நீதிமன்றத் தடை காரணமாக கறையான் புற்றெடுத்து பாம்புகள் குடியிருக்கும் இடமாக மாறியுள்ளது. முஸ்லிம் நாடு கட்டிய இந்த வீடுகள் பற்றி கட்டித்தந்த நாடும் கேட்கிறதே இல்லை. எந்த மக்களுக்காக பாராளுமன்றம் சென்று உரிமைகள், சலுகைகள் பெற்றுத்தருவேன் என்கிற முஸ்லிம் தலைவர்களும் கதிரைகளை சூடாக்கி மலோசியா என்றும், சஊதி என்றும் வலம்வருகின்றனர். கெசினோ தடைக்கு தயவான ஆதரவு பின்னால் தருகிறோம் என்று கதையளந்து தற்போது முதுகில் பலமில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியதன் பின்னர் அறிக்கைவிடுகின்ற மன்னர்கள் இந்தநாட்டுக்கும் தேவைதானா? என்பதை மக்கள் எதிர்காலத்திலாவது நிச்சயம் தடுப்பார்களா?
தற்பொழுது மலேசியாவில் உல்லாசமாய் பொழுதைக் கழிக்கின்ற இந்நாட்டு முஸ்லிம்களின் தலைமைப்பீடம் அங்குள்ள அமைச்சர்களுடன் இருநாட்டு அரசியல் விடயங்கள் பற்றிப் பேசியுள்ளனர். அப்போது மலேசிய அமைச்சரின் கருத்தில் கடந்த வருடம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களின் பெறுபேறுகள் பற்றிக் குறிப்பிட்டதோடு, அந்தத் தேர்தல் முடிவுகள் அரசின் பல்வேறு துறைகளிலும் சீர்திருத்தங்கள் தேவையென்பதை உணர்த்தியிருந்தன என்றும் கூறினார். தீவிரவாதத்திற்கும் சமய கருத்துக்களுக்கும் இடையில் கருத்து மோதல்கள் நிகழா வண்ணம் சம நிலையைப் பேணுவதில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவும், மூன்று தசாப்த காலம் நீடித்த இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னணியில், வடகிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்துள்ளதாகவும், அங்கு முதலீடுகளை மேற்கொள்ள அமைச்சர் ஹக்கீம் மலேசிய முதலீட்டாளர்களை ஊக்குவிக்குமாறும் தம்மிடம் வேண்டுகோளொன்றை விடுத்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அப்படியானால் முஸ்லிம்களுக்கு இந்நாட்டு ஆளும் அரசியல்வாதிகளால் எது நடந்தாலும் அபிவிருத்திகளும், அதனோடு இணைந்த கொமிசன்களும் கிடைத்தால் மட்டும் போதும். எங்கள் பாடு கொண்டாட்டம். ஆனால் வாக்களித்த மக்களின்பாடு திண்டாட்டம்தான். நாங்கள் நன்றாக உடுத்து வாழ்வோம். நீங்கள் என்ன ஆனாலும் அடுத்த தேர்தலின்போது கட்டாயம் நாம் சந்திப்போம். அப்போது புதிய கதையோடு தயாரிப்பாளர்களாக கட்சிக் கொடியுடன் வருவோம் நிச்சம் ஏமாறப்போது மக்களே.
(தந்திமகன்)
.jpg)
Post a Comment