நீரிழிவு நோய், உங்களது பாதங்களை எப்படி பாதிக்கின்றது..?
2012 ஆம்அன்றாண்டின் கணக்கெடுப்பின்படி உலகில் சராசரியாக 285 மில்லியன் நீரிழிவு நோயாளர்கள் உள்ளனர்,அவர்களில் 25% ஆனவர்களின் பாதங்கள் சிரங்கினால் பாதிக்கப்பட்டு உயிர்வாழ்கின்றனர்.
நாளாந்தம் புதுப்புது நீரிழிவு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர்.கட்டுப்படுத்தப்படாத குருதி வெல்லமும்(UNCONTROLED BLOOD SUGER) நாட்பட்ட நோய் நிலையும்(CHRONIC) சர்க்கரை வியாதிக்குட்பட்டவர்களை சில சிக்கல்களுக்கு உள்ளாக்குகின்றது,அவ்வாறு ஏற்படும் ஒவ்வொரு சிக்கலும் (COMPLECATION) உடலின் ஒவ்வொரு தொகுதியையும் தனித்தனியாகவோ அல்லது ஒன்றுடன் ஒன்று பிணைந்தோ பாதிக்கின்றன. அவ்வாறு தொகுதிகள் பாதிக்கப்படும்போது உடல் உள நல ஆரோக்யமும் வீழ்ச்சியடைந்து நோயாளியின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகின்றது.
அந்த வகையில் இங்கு நாம் நீரிழிவு நோயின் அபாயகரமான பல பக்கவிளைவுகளில் நாளாந்த வாழ்க்கையை பாதிக்கும் ஒன்றாக பாதங்களில் ஏற்படும் சிரங்குகளை நோக்குவோம்(DIABETIC FOOT ULCER) ஏனெனில் நம்மில் பலர் இத்தீராத சிரங்குகளினால் மிகவும் அவஸ்தைப்பட்டு உடல் உள ரீதியாக நொந்து வெதும்பிப்போய் இருக்கின்றனர். அவ்வாறு நொந்து வெந்து போபவர்களின் எண்ணிக்கையைக் எதிர்காலத்தில் குறைப்பது மிகவும் அவசியமான ஒரு தேவையாகும்.சர்க்கரை வியாதி உள்ளவர்களில் 25% ஆனவர்களுக்கு பாதங்களில் சிரங்கு ஏற்படுகின்றது. இவற்றில் 50% இற்கு மேலானவை கிருமித்தொற்றிற்கு உடைபடுகின்றன.அவ்வாறு தொற்றிற்குட்பட்டவற்றில் 5:1 அங்கத்தறிப்புக்கு உள்ளாகின்றது (Amputation)
இனி சர்க்கரை வியாதி உள்ளவர்களில் எவ்வாறு பாதங்களில் சிரங்குகள் ஏற்படுகின்றன என்று நோக்குவோமாயின் .
குருதியில் வெள்ளத்தின் அளவு கட்டுப்படுத்தப்படாத நாள்பட்ட நோயாளர்களது பாதங்களிற்கான உணர்ச்சி நரம்புகள் படிப்படியாக பாதிக்கப்பட்டிருக்கும் இது DIABETIC NUROPATHY எனப்படும்.நரம்புகளின் செய்தி கடத்தும் திறன் குறைவடதே இதற்கான காரணமாகும் இந்நிலையில் பாதம் உணரும் திறனை படிப்படியாக இழக்கும் விறைத்த நிலை ஏற்படும்(NUMBNESS).
அதே போல அடிக்கடி குருதியின் வெல்லத்தின் அளவு அதிகரிப்பதனால் கீழவயவத்திற்கு குருதியை விநியோகம் செய்யும் இரத்த நாளங்களின் அக மேலணிக்கலங்களில்(Endothelial cells of peripheral arteries) ஏற்படும் கட்டமைப்பு ரீதியான மாற்றத்தினால் மேற்படி நாளங்களின் விட்டம் குறைவடைந்து விநியோகம் செய்யப்படும் குருதியின் அளவும் படிப்படியாக குறைகின்றது.
இந்த நிலையில் குறித்த நோயாளி புகைப்பிடிப்பவராகவோ,அதிக கொலஸ்தரோல் உள்ளவராகவோ,அல்லது உயர் குருதியமுக்கம் உடையவராகவோ இருக்குமிடத்து மேற்கூறிய காரணியுடன் ஏனைய காரணிகளில் ஒன்றோ அல்லது பலவற்றினதோ சேர்க்கையினால் பாதத்திற்க்கான குருதி வழங்கல் குறைவடைகின்றது.இவ்வாறு குறைந்த குருதிச்சுற்றோட்டம் உள்ள நிலையில் பாதத்தின் தசைப்பகுதிகள் இலகுவில் இறக்க வாய்ப்பு ஏற்படுகின்றது இவ்வாறு தசைகள் குருதி விநியோகம் குறைவதால் இழையங்கள் இறக்கும் இது ISCHEMIA எனப்படும். இந் நிலையில் பாதங்களில் சிரங்குகள் இலகுவாக ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. இவ்வாறு இலகுவில் உண்டான சிரங்குகள் குறைந்த குருதிச்சுற்றோட்டத்தின் காரணமாக சுகதேகிகளைப்போல விரைவில் குணமடைவதில்லை.ஏனெனில் சிரங்குகள் குணமடைய சிறந்த குருதிச்சுற்றோட்டம் அவசியமாகும் குருதியே உணவையும் போசாக்கையும் கலங்களுக்கு கடத்திச்செல்கின்றது நோய்எதிர்ப்பு சக்தியும் இதனூடாகவே செயல்படுகின்றது.
குருதிச்சுற்றோட்டம் குறைந்த சிரங்கும்,,நோயெதிர்ப்பு சக்தி குறைந்த உடல் நிலையும் சிரங்கில் ஏற்படும் கிருமித்தொற்றை சமாளிக்க முடியாமல் திண்டாடுகின்றது.தொற்று ஏற்பட்டு தொற்றின் தாக்கம் உட்சென்ற நிலையிலையே நாட்சென்ற பின்னர் தாமதமாகவே கண்டுபிடிக்கப்படுகின்றது. இதனால் கிருமித் தொற்று ஏற்பட்டு சரியாக பராமரிக்கப்படாத அவயவம் தறிக்கப்படும் நிலைக்கு உள்ளாகும்-(AMPUTATION).உலகில் சிகிச்சைக்காக மேற்கொள்ளப்படும் அங்கத்தறிப்பில் 70% ஆனவை நீரிழிவு நோயாளர்களிற்கே செய்யப்படுகின்றன.
பல்வேறு பொறிமுறைகளினால் கால்களில் ஏற்படும் காயங்கள் மாறாத சிரங்குகுகளாக நாளடைவில் மாற்றமடைகின்றன.நரம்புகள் நோவை உணரும் தன்மை இல்லாமல் போவதனால் பெரும்பாலான காயங்கள் ஏற்படுவது நோயாளர்களால் உணரப்படுவதில்லை.பாதங்களின் தோல் மிகவும் வறண்ட தன்மையாக இருப்பதால் அவற்றில் வெடிப்புகள் இலகுவாக ஏற்படுகின்றன.பொருத்தமான பாதணிகளும்,காலுறைகளும் அணியப்படாதபோதும் பாதத்தின் தோலின் ஈரலிப்புத்தன்மை சரிவர பேணப்படாதபோதும் ஏற்படுகின்ற வெடிப்புகளினூடாக கிருமித்தொற்று இலகுவாக ஏற்படுகின்றது.
நீரிழிவு நோயாளர்களின் பாதங்களில் ஏற்படும் தொடர்ச்சியான அழுத்தத்தங்களும்,பிறவியில் விரல்களில் ஏற்பட்டிருக்கும் வளைவுகளும்,அசாதாரண மடிவுகளும், பாதத்தின் வடிவமும்,பாதங்கள் சமனற்ற முறையில் தொடர்ந்து ஊன்றப்படுவதனாலும் பாதத்தின் தோல் பகுதிகள் கடினத்தன்மையை அடைகின்றன.இவ்வாறு கடினத்தன்மையடைந்த தோல் தொடர்ந்து அழுத்தம் பெறுவதனால் அந்த தோலின் கீழான பகுதி காயங்களை அடைகின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆரோக்கியமான பாதத்திற்கு சிறந்த சுற்றோட்டம் இன்றியமையாதது.சுற்றோட்டத்தினூடாகவே பாதம் போதியளவு ஒட்சிசனையும்,போசணைகளையும் பெறுகின்றது. நீரிழிவு நோயாளர்களில் போதிய சுற்றோட்டமின்மையால் ஒட்சிசனும் போசாக்கும் தேவையான அளவு பாதங்களுக்கு கிடைப்பதில்லை இதனால் காயங்கள் ஆறுவதில் தாமதம் ஏற்படுகின்றது.அதே வேளை குருதி சுற்றோட்டம் மிகவும் குறைந்த நிலையில் அப்பகுதியில் உயிர்வாழும் இளையங்களின் உயிர்வாழும் தன்மையில் (Viability) குறைவு ஏற்படுகின்றது.இதனால் குறிப்பிட்ட பகுதியின் இழையங்கள் அமைப்பழிந்து கருமை நிறமாக மாறி விடுகின்றன.இது Gangrene என்றழைக்கப்படும்.
ஏற்கனவே பாதிப்படைந்துள்ள நரம்புகளின் நோவை உணரும் திறணினால் பாதத்தில் ஏற்படும் பல்வேறு வகையான பொறிமுறை நோவு உணரப்படுவதில்லை, கூரிய பொருட்கள் உறுத்துவதோ,இறுக்கமான பாதணிகளால கொப்பளங்கள் ஏற்பட்டிருப்பதோ உணர முடியாதிருக்கும்.மட்டுமன்றி கால்களில் ஏதாவது தட்டுப்பட்டு காயம் ஏற்படுவதையும் உணர முடியாது,யாராவது ஒருவர் இரத்தம் வடிவதையே,பொங்கியிருப்பதையோ சுட்டிக்காட்டினால்தான் நோயாளிகள் உணர்ந்து கொள்வார்கள்.
இந்த அபாயகரமான நிலை ஏற்படாமல் எவ்வாறு தவிர்ப்பது?
நீரிழிவு நோயாளர்கள் பாதங்களில் ஏற்படும் சிக்கல்கள் பற்றி அறிந்திருப்பதுடன் ,விழிப்பாகவும் இருக்க வேண்டும்.
பாதத்தின் தோலில் ஏற்படும் கிருமித்தொற்றினை உடனடியாக அடையாளம் காண்பதுடன் உடன் சிகிச்சையும் பெற்றுக்கொள்ளல் வேண்டும்
பரிந்துரைக்கப்பட்ட மாத்திரை,இன்சுலின் ஊசிமற்றும் உணவுக்கட்டுப்பாட்டு முறைகளை இடைவிடாது பின்பற்றி நோயை கட்டுப்பாட்டு நிலைக்குள் வைத்திருக்க வேண்டும்.
எல்லாவற்றையும் மீறி ஏற்பட்ட சிரங்குகளை சிறப்பான முறையில் பராமரித்தல். போன்ற நடவடிக்கைகள் மூலம் அங்கத்தறிப்பு ஏற்படாமல் தவிர்த்துக்கொள்ளலாம்.
காயங்கள் வராமல் எப்படி பாதங்களை பாதுகாக்கலாம்?
நரம்புகள் பாதிக்கப்பட்டவர்களும்,கால்களுக்கு போதியளவு குருதிச்சுற்றோட்டம் இல்லாத நீரிழிவு நோயாளர்கள் உரிய பாதுகாப்பு உபாயங்களை பின்பற்றிவருவார்களேனின் 45-85% ஆன அங்கத்தறிப்பை தவிர்க்கலாம் என ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.
பின்வரும் நடைமுறைகளை பின்பற்றுவது சிக்கல்களிலிருந்து பாதுகாப்பு வழங்கும்.
· பொருத்தமான பாதணி/சப்பாத்துக்களை வீட்டின் உள்ளேயும் வெளியேயும் அணிந்ந்து கொண்டே நடமாட வேண்டும். இது காயங்கள் ஏற்படாது பாதுகாக்கும்.தொடர்ச்சியாக அணிந்து கொண்டிருப்பதனால் சிறந்த காற்றோட்டம் உள்ள உறுத்தாதவகையில் வடிவமைக்கப்பட்ட பாதணி/சப்பாத்துகளை தெரிவு செய்தல் வேண்டும்.
· துப்பரவான தினமும் கழுவி நன்கு உலர்த்தப்பட்ட,பருத்தியினாலான (Cotton) காலணிகளை பயன்படுத்தவேண்டும்.(shocks)
· தினமும் கண்ணாடி ஒன்றைப்பயன்படுத்தி பாதத்தின் அடிப்பகுதியை கொப்பளங்கள்,கன்றல்,வெடிப்பு,வெட்டுக்காயங்கள் போன்றவை இருக்கின்றனவா என்று அவதானிக்க வேண்டும்.அவ்வாறு ஏதேனும் அசாதாரணம் காணப்படின் உடன் மருத்துவ ஆலோசனையை நாடவும்.
பரிசோதிக்கும்போது முடிந்தால் வீட்டிலுள்ளவர்களது உதவியை நாடல் சிறந்தது.(MIRROR TESTING)
· எப்போதும் சவர்க்காரமும் இளஞ்சூடான நீரும் கொண்டு பாதங்களும் விரல் இடுக்குகளும் கழுவி ஈரமற உலர்த்தப்பட வேண்டும்.பொருத்தமான எண்ணெய்,தோல் பதனாக்கும் களிம்புகளை பூச வேண்டும்
· கால் நகங்கள் ஆழமில்லாமல் முட்டை வடிவில் வெட்டப்பட்டு சிராய்ப்புகள் நன்கு உராயப்பட்டு (Filing) வளுவளுப்பாக வைக்கப்படல் வேண்டும்.
· தொடர்சியாக கிளிநிக்குகளிற்கு செல்லும்போது தகுதிவாய்ந்தவர்களால் உங்களது கால்களை பரிசீலனைக்குட்படுத்துங்கள்.(தற்போது நீரிழிவு பற்றிய மேலதிக பயிற்சிபெற்ற தாதியர்கள் அரச வைத்த்யசாலைகளின் கிளினிக்குகளில் உள்ளனர்)
· காலில் ஏற்பட்டிருக்கும் காயங்களை நன்றாக மருந்திட்டு பந்தணமிட்டு பாதுகாக்க வேண்டும்!
· நோவற்றதாக இருப்பினும் சிவந்து காணப்படும் பாதத்தின் பகுதிகளை கவனத்தில்கொள்ளுதல் வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை
· ஒருபோதும் இறுக்கமான பாதணிகளையயோ/காலணிகளையோ அணியக்கூடாது
· கால்களை சுடு நீர் கொண்டு கழுவும் முன் நீரின் உஸ்ணத்தன்மையை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.ஏனெனில் கால்களில் உள்ள நரம்புகள் ஏற்கனவே உணரும் தன்மையை இழந்துள்ளதால் அவற்றால் சூட்டினை அறிய முடியாது.எனவே இலஞ்சூடான நீரையே தெரிவு செய்ய வேண்டும்-(Luke warm water)
· உங்கள் பாதங்களை சூடாக்க சுடுநீர்ப்பைகளையோ/போத்தல்களையோ/மின்சார உபகரணங்களையோ பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளவும்.
· வெறுங்காலுடன் தரையில் நடப்பதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும், வணக்கஸ்தலங்களிலும் ,பாத யாத்திரைகளின்போதும் மிகவும் கவனமெடுத்தல் வேண்டும்,தீ மிதித்தல் போன்ற சமய கிரிகைகளில் ஈடுபடுவதில் இருந்தும் தவிர்ந்து கொள்ளல் வேண்டும்.
· கரடு முரடான மேற்பரப்புகளின் மீது வெறுங்காலால் நடத்தலை தவிர்க்க வேண்டும்.
· நடைபாதையில் காணப்படும் பொருட்களை கால்களால் உதைத்தலை தவிர்க்க வேண்டும்.
· கடினமடைந்த பாதத்தின் தோல்களை(காய்ப்புகளை,காலாணிகளை சவர அலகு, பூட்டூசி,கத்தி போன்ற பொருட்களைப்பயன்படுத்தி நீங்களே அறுவை செய்ய வேண்டாம்.
· உடல் நிறையை அளவாக பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
· புகை பிடித்தல் பாதத்திற்கு குருதி கொண்டு செல்லும் நாளங்களின் விட்டத்தை சுருக்கவல்லது எனவே புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
· பாதங்களில் கொலுசு,மெட்டி போன்ற ஆபரணங்கள் அணிவதை தவிர்த்துக்கொள்ளவும்.
“வந்தபின் வருந்தி அழுந்துவதை விட வர முன் காத்து மகிழ்ந்திருப்பதே நல்லது”.
ஓமானிலிருந்து
உமர் அலி முகம்மதிஸ்மாயில் JP
தாதிய உத்தியோகத்தர், உளவளத்துணையாளர்
நிந்தவூர்

Post a Comment