Header Ads



சமதர்மத்தை போதித்த பௌத்தம் இன்று அதனை அழிக்க..!

(ஏ.எஸ்.எம் ஜாவித்)  

சாந்தியையும் சமாதானத்தையும் போதித்த பௌத்தம் இன்று ஒரு சில கடும்போக்கு இனவாதிகளால் அதன் நற்போதனைகளை அழிக்கத் துடிக்கின்றது.

பௌத்தத்தை வளர்க்கவேண்டும் என்ற போர்வையில் இனங்களைச் சூறையாடி சுத்திகரிக்கும் கைங்கரியங்களின் வழியில் இன்று சிறுபான்மைச் சமுகம்கள் மீது குறிப்பாக இந்த நாட்டின் முஸ்லிம் சமுகத்தை அவர்கள் குறி வைத்து அடாவடித் தனங்கள் செய்து வருகின்றனர்..

இதனை நிறைவேற்ற ஒரு சில இனவாத பௌத்த அடிப்படைவாத தேரர்கள் முன்னிற்பதானது இலங்கையின் சாபக்கேட்டிற்கு அடித்தளமிடுவதான செயற்பாடுகளாகவே  தோற்றம் பெற்று வருதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இன்று மனிதனைக் கடிக்கும் கீழ்த்தரமான மனிதர்களாக பொதுபல சேனாவும் அதனை ஒட்டிய கொள்கையுடைய இனவாதக் கும்பலும் மக்களால் இனங் காணப்பட்டுள்;ளனர்.

இவர்களின் பௌத்த மதமானது சண்டித்தனம், அகங்காரம், மற்றவனையும் மற்றவனின் சமயத்தையும் இழிவு படுத்துதல், காடைத்தனம் செய்தல், சட்டத்தை மீறுதல், அரச அதிகாரிகளையும், பொலிஸாரையும் சண்டித் தனத்தின் மூலம் அடிபணிய வைத்தல், சமய கலாச்சார விடயங்களில் தலையிடுதல், அவற்றை தடை செய்ய முனைதல் போன்ற விடயங்களில் இரத்வெறி பிடித்து அலைதல் போன்ற துர்ப்பாக்கிய குணங்களை நல்ல குணங்களாகக் கொண்டதாக நினைக்கும் அவர்களை மக்கள் வெறுப்பதுடன் அவர்கள் புனித பௌத்த மதத்தை கொச்சைப்படுத்தி கொண்டு செல்கின்றமையும் அவர்களின் விரும்பத்தகாத செயற்பாடுகள் கோடிட்டுக் காட்டுகின்றன..

பௌத்தர்களைப் பொருத்த மட்டில் தற்காலம் வெசாக் காலமாகும் இக்காலத்தில்தான் புத்த பெருமான் பரிநிர்மாணம் அடைந்த காலமாகும் இக்காலத்தில் அவர்கள் ஏனைய சமுகங்களிடத்தில் அன்பையும், நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவதுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் மற்றய உயிர்களை துன்புறுத்தக் கூடாது என்ற நல்ல போதனைகளை காட்டிச் சென்றுள்ளார்.

பௌத்த மதம் தோற்றம் பெற்ற காலத்தில் இருந்து இன்றுவரை பௌத்த மதத்தைப் பற்றி கௌரவமாக கற்று அதன் நற் பண்புகளை மக்களுக்கு போதித்தவர்களாக பௌத்த துறவிகள் காணப்பட்டனர் இதன் காரணமாக எந்த சமுகமாக இருந்தாலும் அந்த பௌத்த துறவிகளைக் கண்டால் சிரந்தாழ்த்தி மரியாதை கொடுக்கும் நிலை வெகுவாகக் காணப்பட்டது.

ஆனால் கடந்த சில வருடங்களாக ஒரு சில இனவாத தேரர்கள் மழைக்கு முளைத்த  காளான்கள் போன்று பொதுமக்களினதும், அரசாங்கத்தினதும் பணத்தில் மார்க்கத்தைக் கற்றுவிட்டு வந்து இன்று பௌத்தத்திற்கும், நாட்டிற்றும் ஏன் நாட்டின் பொதுவான சட்டங்களுக்கும் கட்டுப்படாது அவற்றிற்கு குந்தகம் விளைவிற்கும் வகையில் அருவருக்கத்தக்க மனிதர்களாக காணப்படுவது முழு இலங்கை வாழ் மக்களின் சாபக் கேட்டிற்கான விடயமாகும். இவ்வாறானவர்களால் பௌத்த மதம் கொச்சைப்படுத்தப்படுவதை பௌத்த மகா சங்கங்கள் உடன் கட்டுப்படுத்த சட்ட நடவடிக்கைகள் எடுப்பதுடன் அவர்களின் தேரர் பட்டங்களையும் அகற்றுவதுமே பௌத்த சமயத்தை பாதுகாக்க ஒரே வழி.

இலங்கையில் இன்றும் மறக்க முடியாத ஒரு துன்பியல் சம்பவம்தான் 1915ஆம் ஆண்டின் சிங்கள முஸ்லிம் இனக் கலவரமாகும். இதன் ஆரம்ப காரணகர்த்தாக்கள் போத்துக் கீசர்களும், ஒல்லாந்தவர்களுமாகும் இவர்கள் அக்காலத்தில் முஸ்லிம்களை வெறுக்கும் மனிதர்களாகவே காணப்பட்டனர். இதன் பானியிலேயே 1915 இல் இரு இனங்களுக்குமிடையில் கலவரம் கம்பளையில் ஆரம்பித்து நாட்டின் பல பாகங்களிலும் வியாபித்ததன் காரணமாக ஆயிரக் கணக்கான முஸ்லிம் மக்கள் துன்பப்பட்டதுடன் உடமைகளை இழந்தனர்.

பல ஆயிரக் கணக்கான வீடுகளில் சூறையாடல்கள் இடம் பெற்றன, முஸ்லிம் வர்த்தகர்களின் சுமார் 350க்கும் மேற்பட் வர்த்தக நிலையங்கள் முற்றாக தீயிட்டுக் கொழுத்தப்பட்டன, நூற்றிற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன, அதில் 17க்கும் மேற்பட்ட பள்ளிகள் முற்றாக தீக்கரையாக்கப்பட்டன,  பல நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் பௌத்த தீவிரவாதிகளால் படு கொலை செய்யப்பட்டனர், பல பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர், பலர் பாதுகாப்புத் தேடி பல இடங்களுக்கு ஓடி ஒழித்தமை போன்ற சம்பவங்கள் மறக்கப்படும் காலத்தில் குறிப்பாக ஒரு நூற்றாண்டைத் தாண்டும் இவ் வேளையில் மீண்டும் இனவாதக் கும்பல் முஸ்லிம் சமுகம் மீது இரத்தக்கலரிக்கு தூபமிடுவது மிகவும் வேதனைக்குரிய விடயம் மட்டுமல்லாது முழு இலங்கைவாழ் மக்களுக்கும் ஆபாத்தாதொரு விடயமாகும்.

இலங்கையின் வரலாற்றை புரட்டிப் பார்க்கும்போது முஸ்லிம்கள் கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்களிடம் எதனையுமே கேட்டதில்லை குறிப்பாக ரி.பி ஜாயா, அறிஞர் சித்தி லெப்பை, ஏ.எம்.ஏ.அஸீஸ், சேர் ராசீக் பரீட் போன்றவர்கள் நாட்டின் நலனுக்கும், மக்களின் நலனுக்குமாகவே அக்கால அரசியல் பிரமகர்களுடன் தமது பங்களிப்புக்களையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கி வந்த வரலாறுகளே அதிகம் இருக்கின்றன.

இவ்வாறானவர்களின் நம்பிக்கைகள், நல்ல பண்புகளால் அக்கால அரசியல் வாதிகள் முஸ்லிம் சமுகத்திற்கு கௌரவத்தையும், மதிப்புக்களையும் கொடுத்து வந்தததுடன் முஸ்லிம் தலைவர்களும் இன, மத வேறுபாடின்றி அனைத்து மக்களும் இந்த நாட்டின் மகான்கள் என்ற ஒரே நம்பிக்கையுடன் எதுவித பாரபட்சமும் இன்றி தமது கடமைகளைச் செய்து வந்துள்ளனர்,

இருந்தும் அக்காலத்திலும் வெறிநாட்டுச் சக்திகளின் ஆதரவுடன்  தீய குணம் படைத்த தற்போதைய பொதுபல சேனா போன்ற சேனாக்களும், ஜாதிக ஹெல உறுமைய போன்ற உறுமையக்களும் தமது இனவாத இரத்த வெறிகளை அவ்வப்போது மறைமுகமாக கொட்டிக் கொண்டுதான் இருந்தனர். எனினும் முஸ்லிம் தலைமைகளின் சரியான கொள்கை, நம்பிக்கை, மற்றவர்களை அரவணைத்தல் மற்றும் தமது செயற்பாடுகளில் உறுதிப்பாடாக இருந்தமையின் விளைவு தீயவர்களின் எதிர்பார்ப்புக்களுக்கு இடங் கொடுக்கவில்லை என்றே கூறலாம்.

ஆனால் இன்று இலங்கையில் 1915ஆம் ஆண்டின் வரலாற்றுத் தவறுகளை மீண்டும் அமைதியாக இருக்கும் சமுகங்கள் மீது மீண்டும் திணிப்பதற்கு இனவாதக் குழுக்கள் மும்முரமாக செயற்பட்டு வருவதானது மக்கள் மத்தியில் கவலையத் தோற்று வித்துள்ளதுடன் அரசின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை இழப்பதற்கும் வழி வகுத்துள்ளது.

இனவாதிகளின் இனப்பாய்ச்சல் தம்புள்ள பள்ளியில் தொடங்கி தற்போது அளுத்கம முஸ்லிம் வர்த்தகரின் கடையை தீக்கரையாக்கிய சம்பவம் வரை பர்மிய முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டதனை ஒத்ததாக மேற் கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி கடை எரிப்புச் சம்பவத்தற்கு பொறாமையும், துவேஷமும்  கூட காரணங்களாக இருப்பதுடன் பின்னணியில் அளுத்கமையில் அமைந்துள்ள ஒரு சில பெரும்பான்மை வர்த்தகர்களும், பௌத்த தேரர்களுமாகும் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

எதுவுமே இடம்பெறாத ஒரு நிலையில் தேவையற்ற வகையில் குற்றம் சுமத்தி முஸ்லிம்கள் மீது வீண்பழி சுமத்தி முஸ்லிம்களின் வியாபார நடவடிக்கைகளை முடக்கும் கைங்கரியமாகவே கடை எரிப்புச் சம்பவத்தின் பின்னணி  காணப்படுகின்றது.

உண்மையில் குறிதத் கடையில் சிறுவன் மீது பாலியல் குற்றம் இடம்பெற்றிருப்பின் சட்டத்துறையும், பொலிஸாரும்  உரிய முறையில் அவர்கள் அவர்களது கடமையைச் செய்யவுள்ள வேளையில் சட்டவிரோதமாக ஒரு குழு மேற்படிக் கடையை தாக்கியழிப்பது எந்தவிதத்தில் நியாயமான செயல்?

இதுவரைக்கும் குற்றம் நடந்ததாக ஆதாரங்கள் இல்லை ஆனால்  குற்றம் இழைக்காவிட்டால் கடை எரித்தமை எந்தக் குற்றத்தின் கீழ் மேற்படிச் சம்பவத்தை எடுத்தக் கொள்வது.

இன்று அந்தக் கடையை எரித்தமையால் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்படுள்ளது. இதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார்?; பொலிஸார் மக்களைப் பாதுகாப்பதற்கும், நாட்டின் உடமைகளைப் பாதுகாக்கவும், சட்டத்தையும் ஓழுங்கையும் நிலை நாட்டவும் இருக்கும்போது நகரத்தில் உள்ள கடைகளை பாதுகாக்கும் பொறுப்பு பொலிஸாருக்கு முக்கியமாகவுள்ளது. இந்த வகையில் குறித்த கடை எரியூட்டப்பட்டமைக்கு பொலிஸாரும் பொறுப்புக் கூற வேண்டியவர்களே காரணம் குறித்த வர்த்தக நிலையம் அளுத்கம பொலிஸ் நிலையத்திற்கு மிகவும் அண்மித்த தொலைவிலேயே உள்ளது என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது.

இந்த வகையில் பொலிஸார் மேற்படி விடயத்தில் தட்டிக்கழிப்பில் இருந்துவிட முடியாது. கைது செய்யபப்ட்டவர்களைத் தவிர கடை எரிப்பிற்கு முதல் நாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் ஒருவரைக் கூட தவறவிடாது கைது செய்ய வேண்டியதும், மேற்படிச் சம்பவத்தின் பின்னால் உள்ளவர்களும் கைது செயய்ப்படுவதுடன் கைது  செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகளாக இருப்பின் அவர்கள் இனிவரும் காலங்களில் அவ்வாறாதொரு குற்றம் இழைக்காத வகையில் தண்டனையை உரிய வகையில் சுவைக்கக் கூடியவாறு  கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

ஆட்சியாளர்கள், அரசியல் தலைமைகள் தற்போதாவது புரிந்து கொள்ள வேண்டும் இவ்வாறான அடாவடித் தனச் செயற்பாடுகளுக்கு முழுப் பொறுப்புக் கூற வேண்டிய கதாநாயகர்கள் தாங்கள்தான் என்பதனை.

எனவே இனியும் பொறுப்பு வாய்ந்தவர்கள் மேற்படிச் சம்பவங்களை தெரியாதென்று தட்டிக்கழித்துவிட முடியாது. இலங்கை வாழ் ஒவ்வொரு குடி மகனுக்கும் இந்த நாட்டின் சட்டம் ஒரே மாதிரியாதென்ற வகையில் சமய ரீதியாக இனவாதிகளால் இழைக்கப்படும் அடாவடித் தனங்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

No comments

Powered by Blogger.