நடு நிலைமை என்பது தப்பித்தல் அரசியலா..?
(நவாஸ் சௌபி)
பாராளுமன்றத்தில் கடந்த வியாழன் (24.04.2014) அன்று நடைபெற்ற கசினோ சட்ட மூலம் மீதான வாக்களிப்;பில் முஸ்லிம் தரப்பில் ரவூப் ஹக்கீம், றிசாட் பதியுத்தீன், அதாவுல்லா கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நடுநிலைமை வகிக்க, அரசாங்கத்தின் கட்சியிலிருக்கும் பௌசி, அஸ்வர், பைஸர் முஸ்த்தபா, காதர் போன்றவர்கள் சட்ட மூலத்தை ஆதரித்தும் வாக்களித்துள்ளனர்.
சூதாட்டத்தில் முஸ்லிம் சமூகம் ஈடுபடுவதில்லை அவர்களுக்கு இதனால் எதுவும் ஆகப்போவதில்லை இதில் முஸ்லிம்கள் நேரடியாக ஒரு போதும் பாதிக்கப்படுவதில்லை எனவே இந்த வாக்களிப்பில் நாங்கள் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளத் தேவையில்லை என்று நடுநிலைமை வகித்தவர்கள் நியாயம் கூறினாலும், எமது மார்க்க அடிப்படையில் சூதாட்டம் விலக்கப்பட்ட ஒன்றாகும் மாத்திரமன்றி எல்லா மதங்களும் சூதாட்டத்தை மறுக்கிறது இதனால்தான் ஹெல உறுமய இதனை எதிர்த்தே வாக்களித்திருக்கிறது.
இது இவ்வாறு இருக்க அரசியலில் நடு நிலைமை என்பது என்ன அர்த்தமுடையது? ஆதரவுமில்லை எதிர்ப்புமில்லை என்பதனை எடுத்துக் காட்டுவதா? அப்படி என்றால் அதனை ஏமாற்றுத்தனமானது என்றுதான் சொல்ல வேண்டும்.
நடு நிலைமை என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று அல்ல. எதுவானாலும் அது ஒன்றைச் சார்ந்தே இருக்க வேண்டும் அதாவது
உண்மை – பொய்
நண்மை – தீமை
நியாயம் - அநியாயம்
சரி – பிழை
ஆதரவு – எதிர்ப்பு
இப்படி இரண்டில் ஒன்றுதான் இருக்க வேண்டும் இரண்டுக்கும் நடுவில் என்று ஒன்றில்லை. அப்படி இருப்பது முனாபிக் தனமாகவும் பார்க்கப்படலாம்.
கட்டாயம் ஆதரித்தே ஆகவேண்டிய ஒரு விடயத்தை ஆதரிக்காது நடுநிலைவகிப்பது என்பது மறைமுகமாக அதனை எதிர்த்ததற்கு சமமாகும். அதேபோன்று கட்டாயம் எதிர்க்க வேண்டும் என்ற ஒரு விடயத்தை எதிர்க்காமல் அதில் நடுநிலை வகிப்பது அதனை ஆதரித்ததற்கு சமமாகும். எனவே நடுநிலை வகிக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தைப் பொறுத்து அவர்கள் ஆதரித்திருக்கிறார்களா? அல்லது எதிர்த்திருக்கின்றார்களா? என்பதை எம்மால் வெளிப்படையாக விளங்க முடியும்.
அதனால்தான் நடுநிலைமை என்று ஒன்றில்லை அது எப்படியும் ஒருபக்கச் சார்பை காட்டிவிடும். எனவே இதில் நடுநிலைமை என்று ஒழித்துவிளையாடுவதைவிடவும் அவ்வாறானவர்கள் தாங்களது ஆதரிப்பை அல்லது எதிர்ப்பினை நேரடியாக காட்டுவதில் தீர்க்கமாகவும் துணிச்சலாகவும் செயற்படுவதனை மக்களுக்கு அடையாளப்படுத்திவிடலாம்.
கசினோ வாக்களிப்பில் முஸ்லிம்கள் அனைவரும் எதிர்த்தே வாக்களித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாது நடுநிலையாக இருந்தது என்பது அதனை அவர்கள் ஆதரித்ததற்குச் சமமானதாகும். இதில் அஸ்வர், பௌசி, காதர், பைஸர் முஸ்தபா போன்றவர்களைப் போன்றுதான் நடுநிலையாக இருந்தவர்களையும் பார்க்க வேண்டும் ஒட்டுமொத்தமாக முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் ஆதரித்தவர்கள் என்பதுதான் கசினோ வாக்களிப்பின் முடிவாகும்.
நேரடியாக ஆதரித்தவர்களிடம் ஏதோ ஒரு துணிச்சல் இருந்திருக்கிறது அவர்களது அநியாயத்திலும் ஒரு நியாயமிருக்கிறது என்பது போல அவர்கள் பகிரங்கமாக ஆதரித்திருக்கிறார்கள். ஆனால் மற்றவர்கள் எதிர்க்கவும் திராணி இல்லாமல் ஆதரிக்கவும் திராணி இல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்புக் கூறுவது போன்று முதுகெலும்பு இல்லாதவர்களாக இருந்திருக்கிறார்கள்.
ஆதரித்து வாக்களித்தவர்களான அஸ்வர், பௌசி, காதர் போன்றவர்கள் இன்னும் என்ன சுக போகங்களை அனுபவிக்க ஆசைப்பட்டிருக்கிறார்களோ தெரியவில்லை. இவ்வளவு கால அரசியலிலும் இன்னும் வாழ்வதற்கு வழியில்லாதவர்களாகவா அவர்கள் இருக்கிறார்கள்? என்றும் கேட்கத் தோன்றுகிறது.
எல்லாவற்றுக்கும் மறுமை ஒன்று இருக்கிறது அரசியலின் பால் மக்களை ஏமாற்றுகின்றவர்கள் அனைவரும் அங்கு தப்பித்துக்கொள்ள முடியாது. நண்மையும் இல்லாமல் தீமையுமில்லாமல் அங்கு யாராலும் நடுநிலைமை வகிக்க முடியாது.
கசினோ வாக்களிப்பில் நடுநிலை வகித்தவர்களுள் அதாவுல்லாவை விடுங்கள் 'அவர் வழி தனி வழி' அவர் முஸ்லிம் சமூக அரசியல் செய்யவில்லை என்பதை தெளிவக வெளிப்படுத்துபவர்.
றிசாட் பதியுத்தீன் தனித்துவ அரசியலா? சமூக அரசியலா? இதில் எது என்பது விளங்காதபடி இரண்டுக்குமிடையில் நிற்பவர். முதல் நாள் றிசாட்டின் அமைச்சை பொதுபல சேனா ஆக்கிரமிப்புச் செய்கிறது மறுநாள் அவர் வாக்களிப்பில் நடுநிலைமை வகித்து அரசுக்கு ஆதரிப்புச் செய்திருக்கிறார். இந்நிலையில் நாளை றிசாட்டின்; வீட்டை முற்றுகையிட்டாலும் அவரால் எதுவுமே செய்ய முடியாத நிலைக்கு ஆளாகியிருப்பது தெரிகிறது.
ஆனல் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் சமூகக் கட்சியாக அதன் ஏக பிரதிநிதியாக இருக்கின்ற கட்சியாகும். எனவே அதன் செயற்பாடுகளைத்தான் பெரும்பான்மையான முஸ்லிம்கள் எதிர்பார்ப்பார்கள் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸின் முடிவுதான் முஸ்லிம்களின் அரசியல் முடிவாகவும் பார்க்கப்படுகின்ற நிலையில் கசினோ விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எந்தளவிற்கு சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தியிருக்கிறது? என்பதை உரத்துக் கேட்க வேண்டியிருக்கின்றது.
எனவே கசினோ வாக்களிப்பின் ஊடாக எமது முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலைப்பாடு எத்தகையது என்பது தெளிவாக விளங்கிவிட்டது. ஒட்டுமொத்தமாக இவர்கள் அனைவரும் எந்த சந்தர்ப்பத்திலும் தங்களைக்காப்பாற்றும் அரசியலைத்தான் முன்னெடுப்பார்கள் என்பது உறுதியாகிவிட்டது. இவர்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த சமூகம் இனியும் எந்த தீர்வைப் பெற்றுக்கொள்வது எமக்கான அரசியல் உரிமைகளை எப்படி வென்றெடுப்பது? யாவும் நடுநிலைமை வகிப்பதனூடாக பறிபோய்விடுமா?
மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் 1989 இல் நடைபெறற் ஜனாதிபதித் தேர்தலில் நடுநிலைமை வகிப்பதாக குறிப்பிட்டிருந்தார். இருந்தாலும் அதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு கட்சிகள் தொடர்பாக கூறும் போது 'ஐக்கிய தேசியக் கட்சியில் இதுவரை இருந்த தலைவர்களில் இருந்து பிரமதாசாவை நாங்கள் வேறாக்கிப் பார்க்க வேண்டும்' என்ற ஒரு கருத்தை சூசகமாக முன்வைத்தார். இதனைக் கேட்டு முஸ்லிம் காங்கிரஸினை ஆதரித்தவர்கள் அனைவரும் அப்போது ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்ட பிரமதாசவை ஆதரித்து வாக்களித்தார்கள்.
எனவே இதில் நடுநிலைமை என்று பகிரங்கமாக அஷ்ரப் அறிவித்தாலும் அது மறைமுகமாக பிரமதாசாவை அதரிப்பதாகவே அமைந்தது. ஆனாலும் அதில் 5 சதவீத வெட்டுப் புள்ளிக் கோரிக்கையை ஆட்சிக்கு வந்த பிரமதாசாவிடம் முன்வைத்து அஷ்ரப் வென்றெடுத்தார்.
இதன்படி பார்த்தால் ரவூப் ஹக்கீம் நடுநிலைமை வகித்திருப்பது சாதிப்பதற்கா? தப்பித்துக் கொள்வதற்கா? என்ற கேள்வி எழுகிறது. தலைவரின் மறைவின் பின் ரவூப் ஹக்கீம் தலைமைப் பொறுப்பினை ஏற்றவுடன் 'தலைவர் காட்டிய தலைவர்' என்று ஒரு சிறு துண்டுபிரசுரம் வெளியானது அந்த தலைவர் காட்டிய தலைவர் எங்கே? அன்று வெளியான துண்டுபிரசுரத்துடன் மறைந்துவிட்டாரா?
நாட்டில் பௌத்த தீவிரவாம் தலைதூக்கி ஆடுகின்ற இத்தருணத்தில் அரசியல்வாதிகள் இந்த வாக்களிப்புக்கேனும் தங்கள் எதிர்ப்பைக் காட்;ட மறுத்தால் அதனூடாக எதையாவது ஒன்றைச் சாதித்திருக்க வேண்டுமே? அப்படி இந்த அரசாங்கத்தில் சாதித்துக்கொள்வதற்கு இவர்களுக்கு போதிய செல்வாக்கு வழங்கப்பட்டிருக்கிறதா?
கடந்த ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி மருதானை பூகோஸ் மண்டபத்தில் முஸ்லிம் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் சகலரும் நாடாளுமன்ற அமர்வை ஒரு மாத காலத்திற்கு பகிஸ்கரிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் ஹஸன் அலி மற்றும் றிசாட் பதியுத்தீன் உள்ளிட்ட அரசியல் பிரமுவர்கள் பலரும் பங்குபற்றினர்.
இதுதொடர்பான செய்திகள் ஏப்ரல் 9 இல் ஊடகங்களில் வெளியான போது அதற்கு உடன் மறுப்பாக அடுத்த நாள் 10 திகதி 'முஸ்லிம் எம்.பி க்கள் பாராளுமன்றத்தை பகிஸ்கரிப்பது கற்பனையானது' எனத் தலைப்பிட்டு அஸ்வர் எம்.பி அறிக்கை விடுகிறார். இதுதான் இன்று எமது அரசியல்வாதிகளின் நிலை
ஒருவர் எதிர்த்தால் மற்றவர் முட்டுக் கொடுக்கிறார்.
ஒருவர் விமர்சித்தால் மற்றவர் புகழாராம் சூட்டுகிறார்.
ஒருவர் பிரிந்தால் மற்றவர் இணைகிறார்.
ஒருவர் மறுத்தால் மற்றவர் ஏற்றுக்கொள்கிறார்.
ஒருவர் தடுத்தால் மற்றவர் கொடுக்கிறார்.
இதுதான் எமது அரசியல்வாதிகளுக்கு அரசாங்கத்துடன் நடக்கின்ற போராட்டம். இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பார்க்கின்ற போது ஒருபோதும் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை பகிஸ்கரிக்கவும் மாட்டார்கள் எதற்காகவும் அரசை எதிர்க்கவும் மாட்டார்கள். மாறாக எமது மக்கள்தான் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் பகிஸ்கரிக்க வேண்டும். அதனை இந்த மக்கள் செய்வார்களா? அல்லது நடுநிலைமை வகித்து அவர்களும் தப்பித்துக் கொள்வார்களா?
.jpg)
சகோதரர் நவாஸ் சௌபி,
ReplyDeleteஏன் இவ்வளவு பெரிய கட்டுரை ஒன்றையே எழுதிவிட்டீர்கள்? இவர்கள் இஸ்லாத்தைப் பற்றியோ, குர்ஆனைப் பற்றியோ, ஹதீஸைப் பற்றியோ சிந்திப்பவர்களா? மாற்று மதத்தினர்களே முஹம்மது நபியின் போதனை பற்றிக் கூறி கிண்டல் பன்னும் கேவலத்தைச் சுமந்த முஸ்லிம் அரசியல்வாதிகள். இவர்கள் உலகில் வாழ வந்தவர்கள். அரசாங்கம் ஒதுக்கும் பணத்தில் மக்களுக்கு சேவை செய்வார்கள். அரசாங்கத்தின் எந்தத் திட்டத்தை எதிர்த்தால் தமக்கு வயிற்றிலடி விடுமோ அதை ஒருபோதும் எதிர்க்கமாட்டார்கள். நாளைக்கு விபச்சார விடுதிகளை ஏற்படுத்தும் ஒரு திட்டத்தை அரசாங்கம் கொண்டு வந்து, ''இதனை எதிர்ப்பவர்கள் உடனடியாக அரசாங்கத்தை விட்டும் வெளியேறுமாறு பணித்தால் இவர்களின் நிலை நிலை?????
''யாருக்காவது, சிலரை நிரர்வகிக்கும் பொறுப்பை இறைவன் வழங்கி, அவன் அவர்களுக்கு மோசடி செய்தவனாக மரணித்துவிட்டால், அவனுக்கு அல்லாஹ்சுவனத்தை ஹராமாக்கி விடுவான்' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்''. (புஹாரி - முஸ்லிம்)
THEY WILL NOT AGAINST IN THE PARLIAMENT,THEY NEED SOME ELECTION STAGE.THEN ONLY THEY CAN AGAINST BECAUSE OF OUR MADNESS.
ReplyDelete