Header Ads



முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்களது மனங்களை திசைதிருப்பி விடுவதற்கு வசதியாக..!


கடந்த ஒன்றரை வருட காலமாக பொது பல சேனா என்ற அமைப்பினால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் தீவிரவாத செயற்பாடுகள், நாட்டிற்கும் பரந்தளவில் மதிக்கப்படும் பௌத்த கோட்பாடுகளுக்கும் மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் அழுத்தமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். 

இவர்களது இவ்வாறான நடவடிக்கைகள், சமூகங்களைக் கூறுபடுத்தி அதன் மூலம் மக்களிடையே பாரிய இன முரண்பாடுகளையும் தோற்றுவிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. சர்வதேச அரங்கில் அரசாங்கத்திற்குள்ள வெளிநாடுகளின் ஆதரவை, மென்மேலும் குறைக்க விரும்பும் சில வெளிநாடுகள் சார்பாக பொது பல சேனா இயங்குகின்றதா என்ற சந்தேகமும் பரவலாகக் நிலவுகிறது. இது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும். 
இலங்கைக்கு எதிரான சக்திகள் ஒன்றிணைந்து செயற்படும் விடயம் குறித்து, இந் நாட்டின் உள் விவகாரங்கள் தொடர்பில் அடிக்கடி அறிக்கை வெளியிடும் நாடுகளினது தூதரகங்கள் மௌனம் சாதிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும். 

இலங்கையை ஒன்றிணைந்த சுபீட்சம் மிக்க நாடாகக் காண்பதில் ஆர்வமிக்க அனைவரும், இந்த அவல நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முன்வர வேண்டும். 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தேசிய ஷூறா சபை முன்னர் கையளித்த மகஜர் ஒன்றில், மத சுதந்திரத்தையும் சிறுபான்மையினரது உரிமையையும் உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதி தலையிட வேண்டும் என வேண்டி இருந்தது. 

2013 நவம்பர் 06 ஆம் திகதியன்று 196000 பொதுமக்களது கையொப்பங்கள் அடங்கிய ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றை தேசிய ஷூறா சபையினர் கையளித்திருந்தனர். சிறுபான்மை மதத்தினரதும் அவர்களது மத ஸ்தலங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான அனைத்து எதிர்ப்புப் பிரச்சாரங்களையும் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் இம் மகஜரில் வேண்டப்பட்டிருந்தது. 

எனினும், நெருக்கடிக்குள்ளாகியுள்ள முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பேசும் பௌத்த மத குருக்களை, இழிவான வார்த்தைகளால் அச்சுறுத்தும் பொது பல சேனாவின் நடவடிக்கைகள், தண்டனையிலிருந்து அவர்கள் சூசகமாக தப்பிய வகையில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஒன்றரை வருட காலத்தில் 300 இற்கும் அதிகமான மத விரோத மற்றும் எதிர்ப்புடன் தொடர்புபட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் அதிகமானவை பொலிஸாரின் முன்னிலையிலேயே இடம்பெற்றுள்ளன. 

பொது பல சேனாவின் எதிர்ப்புப் பிரச்சாரம், புனித அல்குர்ஆனை இழிவுபடுத்தும் நிலையை இன்று அடைந்துள்ளது. இது உலகளாவிய ரீதியில், நாட்டிற்கெதிரான எதிர்மறையான அவப்பெயரை ஏற்படுத்தவே வழிவகுக்கும்.  
உதாரணமாக, 2013 மார்ச் 17 ஆம் திகதி பொது பல சேனாவின் பேச்சாளரான மாவத்தகம பேமானந்த தேரர், கண்டியில் இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் “முஸ்லிம் அல்லாதோருக்கு உணவு வழங்கும்போது முஸ்லிம்கள் மூன்று தடவை துப்பிவிட்டே வழங்குகின்றனர்” என்று கூறி அல்குர்ஆன் தொடர்பான அப்பட்டமான அவதூறு ஒன்றைக் கூறியிருந்தார்.

புனித அல்குர்ஆனில் எந்த ஒரு இடத்திலும் அவ்வாறான ஒரு வசனமோ, கூற்றோ கிடையாது. முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்களை தவறாக வழிநடத்தும் வகையில், வேண்டுமென்றே இட்டுக்கட்டப்பட்ட பொய்யே இதுவாகும். 

2014 ஏப்ரல் 12 இல் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், புனித அல்குர்ஆனில் “தகிய்யா” கோட்பாடு இருப்பதாக தவறான முறையில் கதையளந்துள்ளார். இக்கோட்பாடு பிற மதத்தவர்களை முஸ்லிம்கள் வஞ்சிப்பதற்கு வழிவகுப்பதாகவும், முஸ்லிம் அல்லாதோரை ஏமாற்றி அவர்களது சொத்துக்களையும் செல்வத்தையும் சுவீகரிப்பதற்கு அனுமதிப்பதாகவும் இட்டுக்கட்டிக் கூறியுள்ளார். இது அப்பட்டமான பொய்யாகும். 

ஆனால், அல்குர்ஆன் இதற்கு நேர் எதிராக பேசுகிறது. புனித அல்குர்ஆனின் ஸூறா அல் பகறா (2:188) மிகத் தெளிவாக பின்வருமாறு குறிப்பிடுகிறது: 
“உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருள்களை தவறான முறையில் உண்ணாதீர்கள். உங்கள் வாதம் பொய்யானது என நீங்கள் அறிந்திருந்தும், இதர மனிதர்களது பொருள்களை எதனையும் பாவமான வழியில் லஞ்சம் கொடுத்து அபகரித்துக் கொள்ள அதிகாரிகளிடம் செல்லாதீர்கள்” 

இலங்கையின் பெரும்பான்மையினர் பின்பற்றும் பெளத்த மதம் கூட ஒருபோதும் பிறர் மீது அபாண்டம் சுமத்துவதை, கடினப் போக்கை, மத நிந்தனையை அனுமதிக்கவில்லை. இஸ்லாத்தை பிறருக்கு அறிமுகப்படுத்தும் போதும் பிறசமயத்தவரது மனதைப் புண்படுத்தும் வகையிலான வார்த்தைகளைப் முஸ்லிம்கள் பிரயோகிக்க்க் கூடாது என இஸ்லாம் கடுமையாக வலியுறுத்துகிறது. “அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவர்களை (தெய்வங்களை)  நீங்கள் ஏசாதீர்கள். அப்படி நீங்கள் செய்தால் அவர்கள் அறிவின்றி அல்லாஹ்வை வரம்பு மீறி ஏசுவார்கள்” (அல்-குர்ஆன் 6:108) என அல்-குர்ஆன் வலியுறுத்துகிறது. 

இது இப்படியிருக்க பொது பல சேனா தலைமையிலான கும்பல், ஏப்ரல் 09 ஆம் திகதி மதிப்பிற்குரிய வடரக விஜித தேரர் நடத்திய ஊடக சந்திப்பை கொலை அச்சுறுத்தல் மூலம் பலவந்தமாக குழப்பியிருக்கிறது.இதற்கு  எதிராக, உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய ஷூறா சபை, அரசாங்கத்தையும் அதன் முதன்மையான சட்ட அமுலாக்கல் அலகான பொலிஸாரையும் வேண்டிக் கொள்கிறது. 

ஏப்ரல் 12 ஆம் திகதி கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்திற்கு வெளியே, இஸ்லாத்தையும் புனித அல்குர்ஆனையும் கொச்சைப்படுத்தி, முஸ்லிம்களின் மத உணர்வை அவமதித்து புண்படுத்தும் வகையில் இவர்கள் நடந்து கொண்டனர். இவ்விரு நிகழ்வுகளும் பொலிஸார், ஊடகவியலாளர்கள், பொது மக்கள் முன்னிலையிலேயே இடம்பெற்றது. 

இதனையடுத்து ஏப்ரல் 23 ஆம் திகதி பொது பல சேனா தலைமையிலான ஒரு கும்பல், எந்த சட்ட அதிகாரமும் இல்லாமல் அலரி மாளிகைக்கு அண்மையில் அமைந்துள்ள அரசாங்க அலுவலகம் ஒன்றில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டது. கொலை அச்சுறுத்தலை அலட்சியப்படுத்தி, கொம்பனித்தெரு பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த வட்டரக விஜித தேரரை, துன்புறுத்தும் சாத்தியங்களுடனேயே இத்தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. 
இந்த வெறுக்கத்தக்க சட்டவிரோத செயல்கள் அனைத்தும், நாட்டின் அரசியல் அமைப்பில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள இம்மதகுருவினதும் முஸ்லிம்களினதும் அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலேயே அமைந்துள்ளன என தேசிய ஷூறா சபை கருதுகிறது. 

கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பொது பல சேனா கும்பல், விஜித தேரரின் ஊடகவியலாளர் மாநாட்டை பலவந்தமாக தடுத்து நிறுத்தியதன் மூலம், நாட்டின் குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையிலுள்ள பல விதிகளை மீறியுள்ளது. 

கொலை அச்சுறுத்தல், சட்ட விரோத ஒன்று கூடல், குற்றவியல் அத்துமீறல், முறைகேடான ஊடுருவல், பயமுறுத்தல், மிரட்டுதல் அல்லது கொள்ளை, பிழையான கட்டுப்படுத்தல், சட்டவிரோதமாக தடுத்து வைத்தல் போன்ற பல சட்ட விதிகளை இக்கும்பல் மீறியுள்ளது.

 கொம்பனித் தெரு பொலிஸில் ஞானசார தேரர் கொடுத்த வாக்குமூலத்தின் பின்னர், புனித அல்குர்ஆனையும் இஸ்லாம் மதத்தையும் அவர் கொச்சைப் படுத்திப் பேசியுள்ளார். இது குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள சமயம் சார்ந்த விடயப் பரப்பை மீறி, அவர் இழைத்த தெளிவான குற்றச் செயலாகும். 

மேலும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் (தற்காலிக விதிகள்) 2(1)(h) பிரிவினை மீறும் செயலாகவும் ஞானசார தேரரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. வழக்கு முடிவடையும் வரை குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையே இச்சட்டப் பிரிவு குறிப்பிடுகிறது.

கடுமையான சட்ட விதிகள் உள்ள நிலையில் கூட, குறித்த விடயம் தொடர்பான உண்மைத் தகவல்களை வெளிக் கொண்டு வராமலும், சந்தேக நபர்களை நீதவான் நீதிமன்றத்தின் முன் நிறுத்தாமலும் பொலிஸார் நடந்து கொண்டுள்ளனர். அத்துடன், குற்றவாளிகளை பொலிஸ் நிலையத்தில் வைத்தே பொலிஸார் அதிர்ச்சியூட்டும் வகையில் விடுவித்துள்ளனர். 

குறித்த இடத்தில் என்ன நிகழ்ந்தது, நிகழவில்லை என்பது குறித்த காட்சிகளை முழு நாடுமே அறிந்திருந்தது. சட்ட விதிகளை மீறியது தொடர்பான அனைத்து ஆதாரங்களும் ஊடகங்கள் பலவற்றில் பதிவாகிய வீடியோ காட்சிகளாக, எப்போதும் பெறத் தக்க வகையில் தயார் நிலையில் உள்ளன.

இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பான்மை மக்களது மனங்களை திசைதிருப்பி விடுவதற்கு வசதியாக, சேறு பூசும் நடவடிக்கைகளும் சேதங்களும் ஏற்கனவே குறிப்பிடத்தக்களவு செய்யப்பட்டுள்ளன. நாட்டின் விரிந்த நன்மை கருதி, முஸ்லிம்களுக்கு எதிரான - முஸ்லிம் சமூகத்தினது சமய, கலாச்சார, பொருளாதார, அரசியல் வாழ்வின் ஆணிவேரைத் தாக்கும் இந்த அழிவுப் பிரச்சாரம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்த நாடு தாங்க முடியாத அபாயகரமான விளைவுகளாகவே இவை அமைந்துள்ளன. 

இஸ்மாயில் ஏ அஸீஸ்
பொதுச் செயலாளர்​

No comments

Powered by Blogger.