தேசப்பற்று, பௌத்தத்தின் எழுச்சி என்ற மாயைகள்..!
´இந்த நாட்டில் இனவாதத்தை தூண்டிவிட்டு அப்பாவி சிங்கள மக்களின் உள்ளங்களில் ஏனைய இனத்துவங்கள் குறித்த ஐயப்பாட்டினை தொடர்ந்தும் தக்கவைப்பதன் மூலம் தம்முடைய குடும்ப, சர்வாதிகார ஆட்சியை தக்கவைக்க முடியும் என ஒரு சிலர் கணக்குப்போட்டு செயற்படுவது வெள்ளிடைமலையாகப் புலப்படுகின்றது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின் தெரிவித்துள்ளார்.
அத்தகைய அநியாயக்காரர்கள் தேசப்பற்று, பௌத்தத்தின் எழுச்சி என்றெல்லாம் மாயைகளை உருவாக்கி தமது மக்களை மாத்திரமன்றி இந்த தேசத்தையே பலிக்கடாவாக்குகின்றார்கள்.
இத்தகைய மிகமோசமான அதிகார வெறிபிடித்த அரசியல் தலைவர்களால் இந்த நாட்டுக்கும், மக்களுக்குக்கும் எதுவித நன்மைகளும் ஏற்பட்டுவிடமாட்டாது என அண்மைக் காலமாக இலங்கையில் இடம்பெற்றுவரும் இன முரண்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் அ.அஸ்மின் இவ்வாறு கூறியுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
´பல்வேறு அடாவடித்தனங்கள், அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகளை மேற்கொள்ளும் குறித்த குழுவினருக்கு அஞ்சாமல் இந்த நாட்டில் ஏற்பட்டுவரும் இனமுரண்பாட்டு செயற்பாடுகளுக்கு எதிராக பல சிங்கள தலைவர்கள் செயற்படுவது இந்த நாட்டில் இன்னமும் மனிதம் வாழ்ந்துகொண்டிருக்கின்றது என்பதற்கு அடையாளமாக இருக்கின்றது.
இந்த நாட்டின் பிரதமர் தி.மு.ஜயரத்ன இனவாதத்துக்கு எதிராக நேரடியாக களத்தில் இறங்கி செயற்பட்டுள்ளார், அதே போன்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக உட்பட அவரது கட்சியின் முக்கிய அரசியல் தலைவர்களும் இனவாதத்திற்கு எதிரான தமது நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்த்தர் சஜித் பிரேமதாச, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார், இன்னும் ஆளும் தரப்பினைச் சேர்ந்த டிலான் பெரேரா, நிமல் சிறிபால டி சில்வா, ராஜித சேனாரத்ன போன்ற முக்கிய அரசியல் தலைவர்கள் இந்த நாட்டில் நிலவும் இனவாத நடவடிக்கைகளுக்கு தங்களுடைய எதிர்ப்புகளை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.
இத்தகைய தலைவர்களின் செயற்பாடுகளை நாம் வரவேற்கின்றோம்.
இந்த நாடு இலங்கை மக்கள் எல்லோருக்கும் சொந்தமான நாடு இதனை கட்டியெழுப்பி, இங்கே அமைதியும் சுபீட்சமும் நிலவ, நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்த நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செயலாற்றவேண்டும்.
அதற்கான சூழல் யுத்த நிறைவைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கின்றது. இது ஒரு சிறப்பான சந்தர்ப்பம், இத்தகைய ஒரு நிலையை ஏற்படுத்த பலரது அர்ப்பணங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
பெறுமதிமிக்க மனித உயிர்களை நாம் இழந்திருக்கின்றோம். இதனை மாற்றியமைத்து மீண்டும் ஒரு முரண்பாட்டு யுகத்திற்குள் தள்ளிவிடும் செயற்பாடுகளை நாம் ஒருபோதும் வரவேற்கக் கூடாது.
இந்த மண்ணில் எல்லோருக்கும் நீதி உறுதி செய்யப்படவேண்டும், சமத்துவமான வாழ்வுரிமை உறுதி செய்யப்படவேண்டும். ஒவ்வொரு சமூகமும் அவரது கௌரவங்களுடன் வாழ்வதற்கான உரித்து உறுதிசெய்யப்பட வேண்டும். அத்தகைய ஒரு சிறப்பான இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதுவே நாம் எமது அடுத்த தலைமுறையினர்க்கு செய்யும் மிகப்பெரிய உபகாரமாகும்.´ எனவும் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment