Header Ads



பொது பல சேனா என்பது அரசாங்க அதிகாரிகளா..?

(ஏ.எல்.ஜனூவர்)
  
திருகோணமலை மூதூர் கங்குவேலி கிராமத்தில் உள்ள தமிழ் மக்களுக்கான புராதன பெருமை வாய்ந்த அகத்தியர் ஸ்தாபன சிவன் ஆலயம் 200 வருட காலங்கள் இயங்கிய வரலாறு இருப்பதாக மக்கள் பிரதிநிதிகள் இன்று சபையில் ஆதாரங்களுடன் தெரிவித்தனர். உண்மையிலே நம் நாட்டில் யுத்தம் இல்லாமல் செய்யப்பட்டு சமாதானம் ஏற்படுத்தப்பட்டு தமிழ், முஸ்லிம் மக்களுடைய  மனங்களை படிப்படியாக வென்று கொண்டிருக்கின்ற இந்நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு கட்டியெழுப்பிய சமாதானத்தினை தூசாக மதித்து இவ்வாறான இனவாத  செயற்பாடுகள் நடைபெறுவது மிகவும் கண்டிக்கத்தக்க விடயமாகும் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் அமர்வு தவிசாளர் ஆரியவதி கலப்பதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற போது கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி. தண்டாயுதபாணி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட மூதூர் பிரதேசத்தில் கங்குவேலி கிராமத்தில் அமைந்துள்ள சிவன் ஆலயம் உடைக்கப்பட்டதனை கண்டித்து சமர்ப்பிக்கப்பட்ட தனி நபர் பிரேரணையில் உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், தமிழ் மக்களுடைய காணிகளை அபகரிக்க வேண்டுமென்பதற்காக பௌத்த மதத்தலைவரின் தலைமையில் ஒரு குழுவினர் கோயிலுடைய அடையாளத்தினை இல்லாமல் செய்வதற்கான ஓர் சதித்திட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பதனை நாம் அறிந்து கொண்டிருக்கின்றோம். இம்மனிதாபிமானமற்ற செயற்பாட்டினை சமாதானத்தை விரும்பும் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து கண்டிக்க வேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு உண்டு.

நாம் பிறந்த கிழக்கு மாகாணத்தில் திருமலை மாவட்டத்தில் இவ்வாறான சம்பவம் நம் கண் முன்னே நடைபெறுவது நமக்கு வேதனையாக உள்ளது. எந்தவொரு மதத்தலைவரும் இன்னொரு மதத்தை மதிக்காது செயற்பட்டு பிற மதத்தினரை அவமானப்படுத்துகின்ற நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க முடியாது. அது பள்ளிவாசல்களாக இருந்தாலும், கோயில்களாக இருந்தாலும், பௌத்த விகாரையாக இருந்தாலும் ஒரு இனத்தினுடைய மதத்தலங்களை அழித்து இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை மக்கள் பிரதிநிதிகளான நாங்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்து எதிர்காலத்தில் இவ்வாறான கொடூரமான நிகழ்வுகள் நடப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் காணியை பறித்தெடுப்பதற்காக ஒரு இனத்தின் வரலாற்றுக் கோவிலை உடைத்து தமிழ் மக்களின் அடையாளத்தினை இல்லாமல் செய்வதற்கு சில இனவாத சக்திகள் முயற்சி செய்து வருகின்றன. இதனை அனுமதிக்க முடியாது. இறைவன் நம்மை தண்டித்து விடுவான்.

சர்வதேச நாடுகள் நமது நாட்டின் மீது படிப்படியாக நல்லொரு எண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற இக்கால கட்டத்தில் இவ்வாறனதொரு நிகழ்வுகள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். என்னதான் இருந்தாலும் நூறு வீதம் பிரச்சினை இருந்த நம் நாட்டில் சமாதானத்தை உருவாக்கி எல்லோரும் நல்ல நிலையில் வாழும் சூழ்நிலையை உருவாக்கி வரும் வேளையில் இவ்வாறான நிகழ்வுகள் பெரும் தியாகத்தின் மத்தியில் உருவாக்கப்பட்ட இன ஒற்றுமையை சீர்குலைப்பதாக உள்ளது. மூன்று தசாப்த காலமாக யுத்த நிலையினால் நமது நாட்டில் பிரச்சினைகள் இருந்தன. ஆனால் யுத்த காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறவில்லை என்று கௌரவ உறுப்பினர் ஜனார்த்தனன் கூறினார். ஆனால் யுத்த காலத்திலும் இவ்வாறான சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எந்த இனமாக இருந்தாலும் மதத்தளங்களில் கை வைப்பது அவர்களின் உள்ளங்களில் கை வைப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்துகின்றது.

அது யாராக இருந்தாலும் ஒன்றுமில்லை. நாங்கள் அதனை வண்மையாகக் கண்டித்துக் கொள்கின்றோம். கௌரவ தவிசாளர் அவர்களும், முதலமைச்சர் அவர்களும் திருமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதனால் இக் கோயிலைக் கட்டுவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். 200 வருட பழமை வாய்ந்த கோயிலுக்கு தொல்பொருள்  திணைக்களத்திற்கு போக வேண்டிய தேவை இல்லை. நமது நாட்டில் ஆண்டாண்டு காலமாக வாழந்து வருகின்ற தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுடைய கோயில்கள், பள்ளிவாசல், விகாரைகள் ஒரு வரலாற்று மதத்தலமாக வைத்து வாழந்து வருகின்றனர். இவ்வாறான வரலாற்று மதத்தலங்களை அழிப்பதன் மூலம் நாம் முன்னேற முடியாது. தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்குமிடையில் ஓரு முரண்பாட்டினை ஏற்படுத்துவதற்காக இவ்வாறான சில சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் நடந்துள்ளன. மறுபுறத்தில் முஸ்லிம் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் இடையில் இன முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கான நடவடிக்கைகளை பொது பல சேனா அமைப்பு மேற்கொண்டு வருகின்றது.

ஆரம்பத்தில் முஸ்லிம் மக்களுடைய மனங்களை புண்படுத்தும் வகையில் ஹலால் உணவு சம்பந்தமாகவும், உடைகள் சம்பந்தமாகவும் பிரச்சினைகளில் ஈடுபட்டு தற்போது அமைச்சர் றிசாட் பதியுதீனுடைய அமைச்சு அலுவலகத்திற்கு சென்று சோதனை நடத்தக் கூடிய நிலை இன்று நம் நாட்டில் வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் நிபோன் ஹோட்டலில் முஸ்லிம் மதத்தலைவர்கள், பல சேனாவும் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்திக் கொண்டிருந்த போது ஜனநாயக நாட்டில் மிகவும் கேவலத்தனமாக
மதத்தலைவர்கள் நடந்து கொண்டது வெட்கப்பட வேண்டியதாகும். நாங்கள் ஒரு நாளும் இனவாதம் பேசவில்லை. நாம் எப்போதும் இனவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றோம். இன்னொரு இனத்தினை கேவலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது கவலையாக உள்ளது.

நம் நாட்டில் பெறும்பான்மையான சிங்கள மக்கள் வாழும் பகுதியில் எங்களுக்கு ஒரு ஆபத்து நேரும் போது எங்களை காப்பாற்றுங்கள் என்று பௌத்த மதத்தலைவரிடம் தான் செல்வோம். தமிழ் மக்கள் பெறும்பான்மையாக வாழும் பகுதியில் ஒரு பிரச்சினை வரும் போது எங்களை காப்பாற்றுங்கள் என்று கோவில் தலைவர்களிடம் தான் போவோம். முஸ்லிம் மக்கள் பெறும்பான்மையாக வாழும் பிரதேசத்தில் ஏதாவது பிரச்சினைகள் வந்தால் முஸ்லிம் மௌலவிமார்களிடம்; தான் போவோம். பிரச்சினைகள் ஏற்படும் போது மதத்தலைவர்கள் நமக்கு கருணை காட்டி காப்பாற்றுவார்கள் என்று நம்பிக்கையுடன் நாம்; செல்லும் போது  அவர்களே எங்களை தாக்குவார்கள் என்றால் இவ்வுலகில் நாம் யாரிடம் போவது? அப்படி மதத்தலங்களை அழிக்கின்ற நடவடிக்ககைளில் ஈடுபடுகின்ற மதத்தலைவர்களை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. நமது நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய கொடுர யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் கடந்த 2008 ம் ஆண்டில் இருந்து எங்களுடைய கால நேரம், வாழ்க்கை என்பவற்றை தியாகம் செய்து நீண்ட காலமாக சந்தேகத்துடனும், பயத்துடனும் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்த மூவின மக்கள் மத்தியிலும் நாம் நிரந்தரமான சமாதானத்தை உருவாக்கியுள்ளோம்.

அண்மையில் மட்டக்களப்பு கச்சேரிக்கு பொது பல சேனா அமைப்பு வந்து சென்றுள்ளார்கள். இந்த சூழ்நிலையில் கிழக்கு மாகாண தவிசாளர் அவர்களே, உங்களுடைய பேரவைக் காரியாலயத்தை சோதனை செய்ய வேண்டும் என்று பொது பல சேனா அமைப்பு நாளை இங்கு வரும் போது இந் நாட்டில் சட்டம் ஒழுங்கினை எவ்வாறு பாதுகாக்கப் போகின்றோம்.   பொது பல சேனா என்பது அரசாங்க அதிகாரிகளா? ஏதாவது ஒரு தவறு நடைபெற்றால் பொலிஸ், விஷேட அதிரடிப்படை, ஜனாதிபதி விசாரணைக்குழு மற்றும் மாகாண அதிகாரிகள் வந்து பரிசோதனைகள் மேற்கொள்ளலாம். மாறாக பொது பல சேனாவுக்கு நாட்டிலுள்ள அமைச்சுக்கள், திணைக்களங்களை சோதனை அதிகாரம் உள்ளதா?  பொது பல சேனா சட்டத்தை கையிலெடுத்து நடவடிக்கை எடுப்பதனை தவிசாளர் அவர்களே அனுமதிக்க முடியாது. எல்லா மதங்களும் சகோதர மதத்தினரோடு நன்மதிப்போடும் எல்லோரும் இணைந்து அன்பு காட்டி வாழ வேண்டுமென்றே சொல்கின்றது.  

பொது பல சேனா அமைப்பு ஒருபுறம் தமிழ், சிங்கள மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி பிரச்சினை உண்டாக்குவதும் இன்னொருபுறம் கிழக்கு மாகாணத்திற்கு வெளியே சிங்கள, முஸ்லிம் மக்களிடையே பிரச்சினையை உருவாக்கி இன முறுகலை ஏற்படுத்துவதனையும் நோக்காக கொண்டு செயற்படுகின்றது.

ஆனால் நம் நாட்டில் வரலாற்று இன உறவுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்கள் சிறிதளவேனும் சாந்தி பெறக் கூடிய வகையில் இலங்கையில் வாழும் சிங்கள மக்களின் பெரும்பான்மையினர் தமிழ், முஸ்லிம் மக்களுடன் இணைந்து இன உறவுடன் வாழ விரும்புகின்றனர்.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு சில இனவாத அமைச்சர்களைத் தவிர பெரும்பான்மையான அமைச்சர்கள் சிறுபான்மை மக்களுடன் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்றே விரும்புகின்றனர்;. அத்துடன் பொது பல சேனாவின் நடவடிக்கைகளையும் இனவாத நடவடிக்கைகளையும் பகிரங்கமாக கண்டித்து வருகின்றனர். இதனையும் சிறுபான்மையான மக்களாகிய நாம் மறந்து விட முடியாது.

இவ்வாறு மதத்தலங்களில் கை வைக்கின்ற மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் கிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் நடைபெறாத வண்ணம் கிழக்கு மாகாண முதலமைச்சர், தவிசாளர், உறுப்பினர்கள் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார். 

No comments

Powered by Blogger.