Header Ads



ஊழல் நாடுகளின் தரவரிசை - இலங்கைக்கு 91 ஆவது இடம்

இலங்கையில் கடந்த 12 மாதத்திலே ஊழல் அதிகரித்துள்ளதன் விளைவாக - ஊழலின் அளவை வைத்து நாடுகளை வரிசைப்படுத்தும் டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனலின் வருடாந்த பட்டியலில் இலங்கை 79வது இடத்திலிருந்து 91வது இடத்துக்கு பின்னே சென்றுள்ளது.

இலங்கையில் அரசாங்கத்தில் இருப்பவர்களின் அளவுக்கதிகமான அதிகாரம் மற்றும் செல்வாக்கு காரணமாக நேர்மை, தூய்மை போன்ற விழுமியங்கள் புரையோடிவருவதாக 2013 ஆம் ஆண்டுக்கான ஊழல் மதிப்பீட்டு சுற்றாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற வருடம் நாற்பது புள்ளிகள் எடுத்து 79ஆவது இடத்திலிருந்த இலங்கை இந்த வருடம் 37 புள்ளிகளை மட்டும் எடுத்து 91ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசாங்கப் பிரதிநிதிகள் வசம் அதிகாரம் குவிந்துவருவதால், அரசியல் சாசன ரீதியாக ஆளும் கட்டமைப்பில் இருந்த வரம்புகளும் கட்டுப்பாடு அம்சங்களும் செயலற்றுப் போய்வருவதாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் அமைப்பின் சுற்றாய்வு கூறுகிறது.

தவிர பொதுமக்களின் பணம் தவறான வழியில் சுருட்டப்படுகின்ற போக்கும் பரவலாகிவருவதாக அது சுட்டிக்காட்டுகிறது.

மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்ற சட்டம் இயற்றும் மன்றங்களுடைய மேலாண்மையைக் குலைப்பதாகவும், நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிப்பதாவும் இந்தப் போக்கு அமைந்துள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக காவல்துறை, கல்வித்துறை, காணி நிர்வாகம், அரசியல் கட்சிகள் போன்றவற்றில் ஊழல் அதிகமாகியிருப்பதாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனலின் இலங்கைப் பிரிவு கூறுகிறது.

பொதுத்துறை அரசியல் மயமாகிவருவதாகவும், அரசுத்துறை ஊழியர்களின் நியமனங்கள், வேலையிட மாற்றங்கள், பதவி உயர்வு போன்ற விஷயங்களில் ஊழலும் அரசியல் தலையீடுகளும் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

எனவே இலங்கையில் ஊழல் ஒழிப்பு வழிமுறைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புகூறலையும் அதிகரிக்கும் விதமாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் இலங்கைப் பிரிவின் செயல் இயக்குநர் எஸ் ரனுகே கூறினார்.

1994ஆம் ஆண்டு இலங்கையில் கொண்டுவரப்பட்ட லஞ்சத் தடுப்புச் சட்டம் சுற்றவர நடந்துவரும் மாற்றங்களுக்கு ஏற்ப இதுவரையில் திருத்தப்பட்டிருக்கவில்லை.

தனியார் துறை, சிவில் சமூகம் போன்ற துறைகளில் காணப்படுகின்ற ஊழலை ஒழிக்க இந்த சட்டத்தில் வழியில்லாமல் இருக்கிறது என்று சுட்டிக்காட்டப்படுள்ளது.

இந்த நிலை மாற வேண்டும் என டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் வலியுறுத்துகிறது.

அதேநேரம் ஏனைய தெற்காசிய நாடுகளோடு ஒப்பிடுகையில் இலங்கையில் ஊழல் குறைவாக உள்ளது.

இந்தப் பட்டியலில் தெற்காசிய நாடுகளைப் பொறுத்தவரையில் பூட்டானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இலங்கை உள்ளது

ஊழல் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 36 புள்ளிகளுடன் 94ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.