விராதுடனான ஞானசாரரின் சந்திப்பு – நேரடி இன சுத்திகரிப்புக்கான ஆரம்பமா..?
(Rasminmisc)
“பௌத்த பயங்கரவாதத்தின் முகம்” என்று மேற்கு நாடுகளினால் வர்ணிக்கப்படும் மியன்மர் (பர்மா) நாட்டை சேர்ந்த அசின் விராது என்ற தேரருடன் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் பேசுவதில் பிரபலமான பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் அண்மையில் ஒரு சந்திப்பை ஏற்படுத்தியுள்ளார். இவருடன் அவ்வமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலன்த விதானகேயும் சென்றிருந்தார்.
தாய்லாந்து மற்றும் மியன்மர் (பர்மா) ஆகிய நாடுகளுக்கு தமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் விஜயம் செய்திருப்பதாகவும், அவர்கள் மியன்மரில் இடம்பெற்ற முஸ்லிம், பௌத்த இனக்கலவரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அங்கு சென்றிருந்ததாகவம் பொது பல சேனாவின் தலைவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
“பௌத்த பயங்கரவாதத்தின் முகம்” – விராது தேரர்.
மியன்மார் நாட்டில் அண்மைக் காலமாக முஸ்லிம்கள் தொடர்ந்தும் இன அழிவுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள். மியன்மார் ரோகிங்கயா முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் தமது இருப்பிடங்களை விட்டும் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், பலர் கொலை செய்யப்பட்டு உயிரிழந்தைமையும் அண்மைக் காலமாக அங்கு நடைபெற்று வரும் சோக நிகழ்வாகும்.
இந்நிகழ்வுக்குப் பிண்ணணியாக மியன்மார் நாட்டின் விராது தேரர் தான் செயல்படுகின்றார் என்பதினால் அவரை மேற்கு நாடுகள் “பௌத்த பயங்கரவாதத்தின் முகம்” என்று அழைக்கின்றன. இதனை தி டைம் பத்திரிக்கை தனது அட்டைப்படமாக வெளியிட்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
சிறுபான்மை முஸ்லிம்களை கொலை செய்து அவர்களின் இருப்பிடங்களை விட்டும் அவர்களை வெளியேற்றுவதில் மூல காரணியாக செயல்பட்டார் என்ற குற்றச் சாட்டின் பேரிலேயே அவர் “பௌத்த பயங்ரவாதத்தின் முகம்” என்று அழைக்கப்படுகின்றார்.
ஞானசார தேரரின் சந்திப்பு எழுப்பும் சந்தேகங்கள்.
இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் பேசுவதில் முன்னனியில் திகழ்பவரும், ஹழால் போன்ற பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமானவராக திகழ்பவருமான ஞானசார தேரர் மற்றும் பொது பல சேனாவின் நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே ஆகியோர் அடங்கிய குழுவினர் மியன்மாரின் விராது தேரரை சந்தித்தமைக்கான காரணத்தை விளக்கும் போது, மியன்மாரில் முஸ்லிம்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையில் இடம் பெற்ற கலவரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவே அவர்கள் அங்கு சென்றதாக குறிப்பிட்டிருந்தார்கள்.
மியன்மாரில் முஸ்லிம்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையில் இனக் கலவரம் நடைபெறவில்லை. மாறாக முஸ்லிம்களை இன சுத்திகரிப்பு செய்யும் இனவாத செயல்பாடுகள் தான் அங்கு நடைபெற்றன.
எது எப்படியோ அங்கு நடைபெற்ற இனவாத தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவே தாம் மியன்மாருக்கு சென்றதாக பொது பல சேனா உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.
ஒரு சமூதாயத்தையே அழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இன சுத்திகரிப்பு நிகழ்வு தொடர்பில், இலங்கையில் இனவாதம் பேசுவதிலும், இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை தோற்றுவிப்பதிலும் முன்னனியில் செயல்படும் ஒரு அமைப்பினர் ஆராய்வதற்கான தேவை என்னவிருக்கின்றது?
விராது தேரர் மியன்மாரில் என்ன கோஷத்துடன் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டாரோ அதே கோஷத்துடன் தமது செயல்பாட்டை முன்னெடுக்கும் ஒரு அமைப்பினர் இன அழிப்பு தொடர்பாக ஆராய்வதற்காக சென்றுள்ளமை இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
போராட்டங்கள் நிறுத்தம்; நேரடி இன சுத்திகரிப்புக்கான ஆயத்தமா?
இது வரை காலமும் முஸ்லிம்களுக்கு எதிராக போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக் கூட்டம், துண்டுப் பிரசுரம் வினியோகம் என்று செயல்பட்ட பொது பல சேனா அமைப்பினர் இனிமேல் எவ்விதமான போராட்டங்களிலோ, பொதுக் கூட்டங்களிலோ தாம் கலந்து கொள்வதில்லை என்று அண்மையில் ஒரு அறிவிப்பு விடுத்திருந்தமை அனைவரும் அறிந்ததே.
இதன் பின்னனியில் தான் தற்போதைய மியன்மார் விஜயமும் அமைந்திருக்கின்றது.
போராட்டங்கள் நிறுத்தம், பொதுக் கூட்டங்கள் நிறுத்தம் என்று அறிவிப்பு விடுத்தவர்கள் மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான நடைபெற்ற இன சுத்திகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக சென்றதின் மர்ம முடிச்சு இங்குதான் அவிழ்கின்றது.
ஆம் போராட்டங்களை கைவிட்டவர்கள் இனிமேல் நேரடி இன சுத்திகரிப்புக்கு இறங்கப் போகின்றார்களோ என்றொரு சந்தேகம் வலுவாக அனைவரின் மனதிலும் எழுகின்றது.
ஹழால் எந்த உருவத்தில் வந்தாலும் அதனை அனுமதியோம். என்று கூறியவர்கள் எங்கு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் நடைபெற்றாலும் பங்கு கொண்டவர்கள் திடீரென போராட்டங்களை நிறுத்திவிட்டு, மியன்மார் சென்றமை என்பது மேலே எழுகின்ற சந்தேகத்திற்கான சாதமாக நிலையே என்பதில் ஐயமில்லை.
உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன் 03:159)

Post a Comment