பாடசாலை பருவத்திலிருந்தே நான் முஸ்லிம்களுடன் நெருங்கிப் பழகுகின்றேன் - பிரதமர் ஜயரத்ன
இன மற்றும் மதம் காரணமாக மக்களிடையே காணப்படும் நட்புறவில் களங்கம் ஏற்படுவதற்கு இடமளிக்கக்கூடாது என பிரதமர் கலாநிதி தி.மு.ஜயரத்ன கூறினார்.
தொன்றுதொட்டு இந்த நாட்டில் பல இனத்தவர்களும் சிங்களவர்களுடன் பேணிவரும் பிணைப்பினை எக்காரணம் கொண்டும் உடைப்பதற்கு இடமளிக்க மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முஹம்மது நபி அவர்களின் பிறந்த தினத்தினைக் கொண்டாடுமுகமாக ஏராளமான முஸ்லிம்களின் பங்கேற்புடன் கிரேன்ட்பாஸ் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற வைபவத்தின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கருத்துத்தெரிவிக்கையில்,
இந்த நாட்டு மக்கள் தற்போது ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்தாலும் சிலர் அந்தச் சகவாழ்வினை அழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதனைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
ஆனாலும், அவ்வாறான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இன மற்றும் மதரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான எமது அரசாங்கம் எப்போதும் சமாதானத்தை மதிக்கும் ஓர் அரசாகும். அதனால் நாம் எந்தவகையிலும் மத ரீதியாக அல்லது இன ரீதியாக பிரச்சினைகள் ஏற்படும் நிலைமையினை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.
முஸ்லிம்கள் வணங்கும் அல்லாஹுத்தஆலாவின் செய்தியை இந்த உலகிற்கு எடுத்தியம்பிய முஹம்மது நபி அவர்களின் பிறந்த தினத்தினை இந்த நாட்டில் அரச மற்றும் தேசிய வைபவமாக்குவதற்கு நான் முன்னின்று செயற்பட்டேன். பாடசாலைப்பருவத்திலிருந்தே நான் முஸ்லிம் மக்களுடன் நெருங்கிப் பழகுகின்றேன். அதனால் இஸ்லாம் மதம் பற்றிய தெளிவு எனக்கிருக்கின்றது.
அதனால் தான் சகல மதத்தினரும் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் சகவாழ்வு வாழவேண்டும் என நான் எல்லா இடங்களிலும் கூறிவருகின்றேன்.அதுபோலவே மதங்களுக்கிடையில் மிகச் சிறந்த புரிந்துணர்வினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் மற்றும் மலாயர் போன்ற சகல இனத்தவர்களும் சகோதரத்துவத்துடன் வாழவேண்டும். சகல மதங்களும் எதிர்பார்ப்பதும் இதனையே ஆகும். மதங்கள், மனிதர்களைப் பாவத்திலிருந்து மீட்டு அவர்களை நற்பண்புமிக்க மனிதர்களாக சமூகத்தில் வாழ்வதற்கு வழிகாட்டுகின்றன.
சில நாடுகளில் மதங்களைப் பின்பற்றும் முறையில் பல்வேறு மாறுதல்களைக் காணக்கூடியதாக உள்ளது. ஆனாலும் இஸ்லாம் மதத்தில் அல்லாஹ் எனும் ஒரு கடவுளையே முஸ்லிம்கள் வணங்குவதனைக் காணக்கூடியதாக உள்ளது. அன்று ஏகாதிபத்தியவாதிகளுடன் போராடுவதற்கு முஸ்லிம் மக்கள் சிங்களவர்களுடன் ஒன்று சேர்ந்தனர்.
நாம் 1400 வருடங்கள் ஒற்றுமையாக வாழ்கின்றோம். அந்த உறவைப் பாதுகாத்துக் கொள்வதற்கு நாம் தொடர்ந்தும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் இங்கு சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான எமது அரசாங்கம் எப்போதும் சமாதானத்தை மதிக்கும் ஒரு அரசாகும்.
ReplyDeleteஎன்ன பொய்யப்பா இது? சிறுபாண்மை மக்களை இன்னுமின்னும் முட்டாலாக்கும் வார்த்தைகள் இப்போ தேர்தல் காலம் என்பதால் அதிகரிக்கிறது.