வளர்ப்பு நாயின் வசதிக்காக, பதவியை மறுத்த கொலம்பியா துணை அதிபர்
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவின் துணை அதிபராக செயல்பட்டு வருபவர் ஏஞ்சலினோ கார்சோன். வரும் மே மாதம் இங்கு பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிபர் பதவிக்குப் போட்டியிடத் தனக்கு விருப்பமில்லை என்று இவர் முன்னரே தெரிவித்திருந்தார். எனவே, இவருக்கு பிரேசில் நாட்டுக்கான தூதுவர் பதவி அளிக்கப்பட்டிருந்தது. இந்தப் பதவியையும் குடும்ப மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக ஏற்க இயலாது என்று அவர் அந்நாட்டு அதிபர் ஜூவான் மானுவல் சந்தோசிற்கு கடிதம் மூலம் பதில் அளித்திருந்தார்.
அதன்பின்னர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், தான் வளர்க்கும் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்க்கு ரோமம் அதிகம் உள்ளபடியால் அதற்கு பிரேசிலின் வெப்பமான காலநிலை ஒத்துக்கொள்ளாது என்பதால் தான் அங்கு போக விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
இந்த செய்தி தனக்கு மிகவும் சங்கடத்தை அளித்ததாகக் குறிப்பிட்டுள்ள கொலம்பியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மரியா ஏஞ்சலா ஹோல்குயின் தங்களுக்கு முக்கிய வர்த்தக பங்காளியாக விளங்கும் பிரேசில் அரசிடம் இதுகுறித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
தனிப்பட்ட காரணங்கள் என்று குறிப்பிடும்போது இதைவிட ஆழமான காரணத்தைத் தான் எதிர்பார்த்ததாகவும், பிரேசிலின் முக்கியத்துவத்தை கார்சோன் உணரவில்லை என்றும் மரியா தெரிவித்தார். பதவியை மறுப்பதற்கான இந்தக் காரணம் வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், கார்சோனின் இந்த கருத்து வெளியீடு லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே கொலம்பியாவின் மதிப்பைக் குறைப்பதாகவும், தங்களுடைய முக்கிய வர்த்தக பங்காளியான பிரேசிலில் கொலம்பியாவின் பங்கைக் குறைப்பதாகவும் உள்ளதாக அவர் கருத்து தெரிவித்தார்.
.gif)
Post a Comment